அலுவலக நண்பர் நந்தகுமார் மேஜையில் இந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் தொண்ணூறுகளின் மத்தியில் நான் படித்த பாலகுமாரன் நாவல்கள் சிலவற்றின் நினைவு வந்தது. பாலாவின் சில நாவல்களினிடையே வந்த சிற்சில பகுதிகளில், பாலாவின் விவரணைகளில், பார்வையில் ஒப்புதல் இல்லாமல் இருபது வயதைத் தொடாத அந்த காலகட்டத்திலேயே புரிந்தோ புரியாமலோ பாலாவை வாசிப்பதை நிறுத்தியவன் நான்.
திருப்பூந்துருத்தி - இந்தப் புத்தகத் தலைப்பின் சுவாரசியத்தில் நந்தாவிடம் புத்தகத்தைக் கடன் வாங்கி வந்தேன். இருந்தும் புத்தகத்தைக் கையிலெடுத்த பாடில்லை. சமீபத்தில் விடுமுறைக்கு வந்திருந்த என் அக்கா சென்றமுறை இரவல் பெற்றுச் சென்ற புத்தகங்களைத் திருப்பி என் அலமாரியில் அடுக்கிவிட்டு, இந்தமுறை புதிதாக என்ன புத்தகங்கள் சேர்ந்திருக்கின்றன என்று புத்தகங்களைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தாள்.
