முதலில் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்— நள்ளிரவு; தலைக்கு மேலே பௌர்ணமி நிலவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது; அப்பொழுது—
...அந்தக் குன்றில் இருந்த சிறிய வீட்டுக்குள் போய்ச் சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு விளக்குடன், பாழடைந்த வீட்டின் பக்கமுள்ள மேட்டினருகில் சென்றது அவ்வுருவம்.
இதற்குள் பெரிய கறுத்த உருவங்கள் அந்த மனிதனைச் சுற்றிவர ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் அந்தக் குன்றின் உச்சியிலும், சுற்றிலும் சிறியதும் பெரியதுமான கணக்கற்ற யானைகள் தோன்றின. ஆமாம் யானைகள்தான்! நான் எண்ணியதுபோல பேயோ பிசாசோ அல்ல. மனித உருவத்தை நாங்கள் இப்பொழுது பார்க்க முடியவில்லை. சுற்றியிருந்த யானைகள் அவனை மறைத்துவிட்டன. அந்தக்கூட்டத்திலிருந்த ஆண் யானைகளின் தந்தங்கள் சந்திர ஒளியில் மூன்றாம் பிறை மதியைப் போல பிரகாசித்தன. கூட்டத்தின் நடுவே ஒரு புதிய ஒளி தோன்றியது. அந்த ஒளி வருவதைக் கண்டதும் அந்த அதிசய மனிதன் எதற்கோ தீபாராதனை காட்டுகிறான் என்று ஊகித்தேன்.
அதே சமயம் சுற்றியுள்ள யானைகள் தங்கள் துதிக்கைகளைத் தூக்கி வீறிட்டன. காடே அதிர்ந்தது. என் உடல் நடுங்கியது. பயத்தால் அல்ல, அந்த யானைகள் பிளிறுவதில் இருந்த வீரத்தையும் கம்பீரத்தையும் கண்டுதான். பல வீரர்கள் சேர்ந்து வீர கர்ஜனை செய்யும் காட்சிதான் என் மனத்தில் தோன்றியது. இம்மாதிரி ஓர் அபூர்வமான காட்சியை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. செயலற்று நின்றுகொண்டிருந்தேன். குன்றிலிருந்த யானைகள் எல்லாம் மறைந்துவிட்டன. அந்த மனிதனையும் காணவில்லை.
என்ன ஒரு சிலிர்ப்பூட்டும் காட்சி! இப்போது இதைக் கேளுங்கள்; இது ஒரு உண்மைச் சம்பவம்! நடந்த இடம்: தேக்கடி; ஆண்டு: 1950-களில்; பார்த்தவர்- எம்.பி.சுப்பிரமணியன். பார்த்ததோடு நில்லாமல் இந்த அதிசய சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்து ஒரு அருமையான சிறுவர் நாவலாக எழுதிவிட்டார். அதுவே ‘தேக்கடி ராஜா’. என்னிடமிருக்கும் பதிப்பு வெளியான ஆண்டு 1996. முதல் பதிப்பு வெளியான ஆண்டு தெரியவில்லை. என் அம்மா இக்கதையைத் தான் சிறுமியாக இருந்தபொழுது ’50 களின் இறுதியில் ஏதோ பத்திரிகையில் தொடராகப் படித்திருப்பதாகக் கூறுகிறார். பத்திரிகை கண்ணன் அல்லது ஒருவேளை விகடனாக இருக்கலாம்.