எனக்கு
இருநூறு அறுநூறு பக்கங்கள் என்று நாவல்கள் எழுதுவதைவிட சிறிய சிறிய நாவல்கள் நூறு நூற்றிருபது
பக்கங்களுக்கு அதிகம் போகாமல் எழுதுவதில் ஒரு அலாதியான திருப்தி. நூறு பக்கங்களில்
சொல்ல முடியாத விஷயம் எதையும் இலக்கியாசிரியன் ஐநூறு பக்கங்களில் சொல்லிவிட முடியாது
என்பது என் நினைப்பு. இது நாவல்களில் கருத்தாழமும் கட்டுக்கோப்பும் கனமும் சிறப்பாகவே
வரக்கூடும் என்றுதான் நான் எண்ணுகிறேன். –க.நா.சு
என்னுடைய விருப்பம் அளவில் பெரிய
நாவல்களே. ஆனாலும், க.நா.சு சொல்வது போல், குறைவான பக்கங்களிலும் ஒரு பெரிய நாவலின்
அம்சங்களைக் கொண்டு வந்துவிட முடியும். முடியும் என்பதற்கு சாட்சி, வாழ்ந்தவர் கெட்டால்,
வாடிவாசல் போன்ற சிறிய நாவல்கள். விட்டால் ஆதவனுடைய குறுநாவல்களையும் இதில் சேர்த்துக்
கொள்வேன்; விடமாட்டார்கள். இந்த நாவல்களை ‘சற்றே பெரிய சிறுகதைகள்’ என்று சொல்லவே முடியாது
என்பது என் துணிபு. க.நா.சுவின் பரிசோதனை முயற்சிகளில் இந்நாவல் ஒன்றாக இருந்திருக்கலாம்.
