- ந.ரா.சேதுராமன் (@chandsethu)
அமரர் தி.ஜானகிராமனின் "சிலிர்ப்பு" கதையை சில வாரத்திற்கு முன்பு படிக்க நேர்ந்தது. அப்போதுதான் கையில் இந்த புத்தகம் இருந்தது நினைவிற்கு வந்து "அம்மா வந்தாள்" படித்த சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திஜாவை கையிலெடுத்தேன். சில அலுவல்கள் காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமலிருந்து, நேற்றுதான் ஒரே மூச்சாக படித்தும் முடித்தேன்.
அப்புறம் பேசிக்கொண்டிருக்கும்போது, திஜாவின் படைப்புகளில் அதிகம் பேசப்படாத நாவல் இது என்று புத்தகத்தை எனக்களித்த நண்பர் மகேஷ் ஜெயராமன் தெரிவித்தார். அது தவிர, இணையத்தில் படித்த சில மேம்போக்கான விமர்சனங்களும், பொதுவாகவே திஜா மீது இருக்கும் கருத்துக்களும்தான் நான் இதைப் பற்றி எழுதக் காரணம். இங்கு "ஜானகிராமனப் படிச்சா நடு வயசு பெண்கள் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு வந்துடும் சார்" என்று திஜாவின் எழுத்துகளைப் படித்த முதிர்ந்த தமிழாசிரியர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் எழுத்தைப் படிக்க ஒரு காரணம் இருக்கும். இப்படிப்பட்ட காரணங்களால்கூட சிலர் திஜாவை படிப்பார்களா என்று வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது.
உறவு, பாலியல் கிளுகிளுப்புகள் மட்டுமே நிறைந்த எழுத்தாக திஜாவைப் பார்ப்பது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பது நளபாகத்தை உன்னிப்பாக படித்தவர்களுக்குத் தெரியும், ஏன் அம்மா வந்தாளை புரிந்து படித்தவர்களுக்குக் கூட. எளிமையான நடையும், தேங்கி நிற்காமல் போகும் கதையம்சமும், ஆழ்பொருளை காற்றைப் போல லேசாக சொல்லிச்செல்லும் பாங்கும் எத்தனை வியப்புக்குரியவை!
