ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புத்தகம் புது எழுத்து இயக்கத்தைத் தோற்றுவிக்கும். அந்தந்த புத்தக எழுத்தாளர்களுக்கு அவர்களது எழுத்தின் பாதிப்பு இன்னின்னது என எழுதும்போது தெரியாது. கா.நா.சு-வின் பொய்த்தேவு, புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், ஜெயமோகனின் காடு என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் இலக்கியத்தின் புனைவு மையங்கள் திட்டவட்டமான மாற்றங்களைக் கொண்டுள்ளன. தமிழ் சூழலில் நாவல் எனும் வடிவத்தை முன்வைத்த ஆரம்ப கட்ட படைப்பாக பொய்த்தேவு நாவலையும், சராசரித்தனம் ஏதுமில்லாமல் புது எண்ணங்களின் வீச்சை முன் நடத்தக்கூடிய ஜே.ஜே எனும் ஆளுமையின் சித்திரம் கொண்ட படைப்பாகட்டும், கவித்துவ ரசனை எழுத்தை புனைவின் சாத்தியங்கள் கொண்டு படைப்பாக்கிய காடு நாவலாகட்டும் எல்லாமே தமிழ் படைப்பு உலகத்தில் பெரும் பாய்ச்சலை உருவாக்கியவை.
சிறுகதைகளில் நாம் செய்துபார்த்த புதுமைகளிலிருந்து மிகக் குறைந்த சதவிகிதமே நாவல் உலகில் வெளிப்பட்டுள்ளது. நாவலில் காட்டிய பாய்ச்சலில் மிகச் சொற்பமான பங்கு குறுநாவல்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கூறிய பகுப்புகள் மேற்கு இலக்கிய உலகிலிருந்து கிளைத்தவை என்றாலும் இலக்கியத்தின் தரப்பகுப்பாய்வுக்கு மிகவும் தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. ஆனால், தமிழ் இலக்கிய உலகில் விமர்சனத்துறை அதிக வளர்ச்சி அடையவில்லை எனப் பொதுவான எண்ணம் நிலவுகிறது. அது ஓரளவுக்கு உண்மை என்றாலும், ஏற்கனவே நம்முன் இருக்கும் இலக்கிய தரங்களை நாம் எந்தளவு மதித்து வருகிறோம் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்.
