மனிதனுடைய மனசிலே, உள்ளத்திலே, அந்தரங்கத்திலே விதவிதமான சக்திகள், நவநவமான உணர்ச்சிகள் வினாடிக்கு வினாடி மூளுகின்றன - மூண்டு மூண்டுபோராடுகின்றன.
இந்தப் போராட்டமே மனிதனுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஒரு சக்தி, ஓர் உணர்ச்சி வெற்றி பெற்று ஒரு வினாடி தலை தூக்கி நிற்கும். ஆனால் அடுத்த வினாடியே இன்னொரு சக்தி தோன்றி அதை வீழ்த்திவிட்டு அவன்மீது ஆட்சி செலுத்தத் தொடங்குகிறது. இந்தச் சக்தியினுடைய ஆதிக்கம் நீடிப்பதும் ஒரே வினாடிதான்.
இந்தப் போராட்டத்துக்கெல்லாம் பின்னணியாக இருக்கும் மனிதன் தன் உள்ளத்திலே ஒரு லக்ஷ்யத்தை, ஒரு தெய்வத்தை கற்பனை பண்ணிக்கொண்டு வாழ ஆரம்பித்துவிட்டானானால் அவனை பாக்கியசாலி என்றே சொல்ல வேண்டும். (பக்.256)
இங்கே
எல்லாமே தெய்வங்கள். ஆசைகள், லக்ஷ்யங்கள், சிந்தனைகள் எல்லாமே தெய்வங்கள்.
இந்த நொடியில் எதற்காக ஆசைப்படுகிறோமோ, அது தெய்வம்; எது சிந்தையில்
இருக்கிறதோ, அது தெய்வம்; எதில் நம்பிக்கை வைக்கிறோமோ, அது தெய்வம். மற்றவை
எல்லாம் அந்த நொடியில் அசுர கணங்கள், தீய சக்திகள். எல்லா
தெய்வங்களையும்விட பணம்தான் சக்தி மிகுந்த தெய்வம்.
