பதிவர் - சரவணன்
தமிழில் பயண இலக்கிய முன்னோடி ஏ.கே.செட்டியார். அவருடைய நூல்கள் உலகத்தரம் என்றால், வார இதழ் தரத்தில் எழுதியவர்கள் கல்கி தொடங்கி, சாவி, லேனா தமிழ்வாணன் வரைப் பலர். என்றாலும் தமிழ் எழுத்துலகில் இது ஒரு நலிந்த பிரிவுதான்.
மணியன் அறுபதுகளில் ஆனந்த விகடனில் தனது இதயம் பேசுகிறது பயண இலக்கியத் தொடர் மூலம் கணிசமான வாசகர்களைப் பெற்றவர். விகடனால் புத்தகமாகவும் வெளியிடப்பட்ட இந்தத் தொடருக்கு, எழுதப்பட்டு ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டதாலேயே, ஒரு 'காலப்பெட்டகம்' மாதிரியான மதிப்பு இன்றைக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லலாம். பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்துக்கும் 1966 இறுதி வாக்கில் சென்று வந்திருக்கும் மணியன், தான் சென்ற இடங்களில் எளிய மக்களின் இதயங்கள் பேசுவதைக் கேட்டு அதையே தான் இந்தப் புத்தகமாக எழுதியிருப்பதாக 'என்னுரை'யில் சொல்கிறார். எஸ்.எஸ்.வாசனின் முன்னுரையும் இருக்கிறது.
புத்தகத்தில் சரியான பயணத்தேதிகளை மணியன் குறிப்பிடவே இல்லை. இது முக்கியமான குறையே. இப்பொழுது மீண்டும் புத்தகத்தைப் புரட்டியதில், அமெரிக்க எம்பஸி அவருக்கு அமெரிக்கா வருமாறு அழைத்த கடிதம் இருப்பதைக் கவனித்தேன் (முதலில் அது ஏதோ ஜனாதிபதி சம்பிரதாய வாழ்த்துரை என்று எண்ணி ஸ்கிப் செய்திருந்தேன் :). கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி செப் 13, 1966.
மணியனை அழைத்த நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான். வழியில் ஒரு சில நாடுகளைச் சேர்த்து ஒரே பயணமாகச் சென்றுவந்துள்ளார். அவருக்கு அதுவே முதல் வெளிநாட்டுப் பயணம். முதல் விமானப் பயணம் என்றும் நினைக்கிறேன்.
மணியன் முதலாவதாகச் சென்ற நாடு எகிப்து. அங்கே கெய்ரோ மியூசியத்தில் மம்மிகளைப் பார்த்துவிட்டு வந்தபோது ஏதோ ஆஸ்பத்திரி சவக்கிடங்கிலிருந்து வெளியே வருகிற உணர்வுதான் ஏற்பட்டது என்கிறார். அதன்பிறகு அன்று சாப்பிடக்கூடப் பிடிக்கவில்லையாம்! நான் இதை எதிர்பார்க்கவில்லை. பிரான்ஸ், இங்கிலாந்து பயணங்களில் விசேஷமாகக் குறிப்பிடும்படி ஒன்றுமில்லை.
