மலக்குவியலை மொய்க்கும் ஈக்களை போன்று பெருநகர வீதிகளில் எப்படியும் பிழைத்திடலாம் எனும் நம்பிக்கையை மட்டுமே சுமந்துக்கொண்டு மனிதர்கள் நகரங்களை ஒவ்வொரு நாளும் மொய்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். இதழ் விரித்துக் காத்திருக்கும் பலவண்ண உயிருண்ணும் பூச்செடியைப் போல் நகரம் மனிதர்களை தன்னகத்தே ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.
நாஞ்சில் நாடனின் மிதவை, அறுபதுகளின் பிற்பாதி மற்றும் எழுபதுகளின் தொடக்கத்தில் வாழும் தமிழக கிராமப்புற பட்டதாரி இளைஞனின் வாழ்க்கையைப் பேசுகிறது. கிராமத்து வேலைகளுக்குச் செல்ல தயங்குமளவிற்கு கல்வியும் அது சார்ந்த மிதப்பும், அரசாங்க வேலையை அடைவதில் நிலவிய போட்டியும் இணைந்து பலரை வேலையின்றி அலைகழித்த காலம் அது. இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தையும் மனதில் கொண்டு நம் தந்தை காலகட்டத்தில் இருந்த வாழ்வியல் போராட்டங்களை அணுகினால் அது பிழையான சித்திரத்தை அளிக்கக்கூடும். உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் நிச்சயம் அதன் அத்தனை சாதக பாதகங்களை கடந்து இன்று பல குடும்பங்களின் நிதிநிலைமையை உயர்த்தி மேலெழ வித்திட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
