இம்மாதம் எம் கோபாலகிருஷ்ணனின் 'மணல் கடிகை' இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது. தொழிலமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக விழுமியங்களின்மீது தாராளமயமாக்கம் ஏற்படுத்திய தாக்கத்தை ஆவணப்படுத்தும் முக்கியமான நாவல். லைசன்ஸ் ராஜ் அமைப்பை விமரிசிக்கும் 'காகித மலர்கள்' இந்திய நிர்வாக அமைப்பின் உள்ளிருந்து எழுதப்பட்ட நாவல், இது சிறு தொழில் அமைப்புகளின் உள்ளிருந்து எழுதப்பட்டது. அதிகாரம் எங்கிருக்கிறதோ அங்கிருந்து அதன் விரிவான தாக்கத்தைப் பேசும் இந்த இரு நாவல்களும் சுதந்திர இந்தியாவின் இரு பெரும் கட்டங்களைப் பேசும் நாவல்கள். தில்லியையும் திருப்பூரையும் களமாகக் கொண்ட இவ்விரண்டும் இன்னும் பல பதிப்புகளைப் பெறும் தகுதி கொண்டவை.
எம் கோபாலகிருஷ்ணனின் 'முனிமேடு' 2007ஆம் ஆண்டின் இறுதியில் பதிப்பிக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு. மொத்தம் பதினான்கு கதைகள். 2003 முதல் 2007 வரையான நான்காண்டுகளில் பல்வேறு பத்திரிகைகளில் எழுதப்பட்ட இவை இங்கு காலவரிசையில் தொகுக்கப்படவில்லை. எப்படிப்பட்ட ஒழுங்கை உணர்த்துவதற்கான வரிசையில் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்வி சுவாரசியமாக இருந்தாலும் எனக்கு அதற்கு விடை தெரியவில்லை. முதல் எட்டு கதைகளில் 'இரவு', 'முனிமேடு', 'நிழல்பொழுதினிலே', 'உயிர்ப்பற்று', 'சொற்பொருள் பின்வரும்', 'கஜாரிகா' என்ற ஏழிலும் காமம் பிரதானமாக இருக்கிறது.
தொகுப்பைப் படித்துவிட்டு என் அப்பா, "இவருடைய எல்லா கதைகளிலும் காமம்தான் இருக்கிறது," என்று சொன்னார். "கோபாலின் மணற்கடிகை நாவலில் அத்தனை மனிதர்களையும் ஆட்டிப் படைக்கும் சக்தி இந்தக் காமம்தான்," என்று தொகுப்பின் அணிந்துரையில் குறிப்பிடுகிறார் கவிஞர் தேவதேவன். "வாழ்வின் மீதான வேட்கையின் குறியீடாகவே கோபாலின் படைப்புகளில் இந்தக் காமம் வருகிறது," என்ற விளக்கமும் தருகிறார் அவர்.
எந்த ஒரு படைப்பையும் அதன் மைய திரியாக நான் நினைப்பதைக் கொண்டே அணுகுவது என் வழக்கம். சிறுகதைத் தொகுப்புகளுக்கு இது சரிப்படாதுதான் - எல்லா கதைகளுக்கும் ஒரே மையம் இருக்க முடியாது. ஆனால், எது இலக்கியம் என்பதைத் தீர்மானிக்க உதவும் மூன்று கருத்துகளை முன்னொரு பதிவில் முன்வைத்திருந்தேன். அதில் மூன்றாவது கண்டிஷன் இது : "மூன்றாவதாக, ஒரு குறிப்பிட்ட பார்வையை, ஒரு எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை, அவனது அனைத்து படைப்புகளின் வழியாகவும் உணர்த்தும் எழுத்து இலக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது," என்று எழுதியிருந்தேன்.
கோபாலகிருஷ்ணனின் இந்தக் கதைகளில் வரும் காமம் நமக்கு கிளர்ச்சியளிப்பதில்லை - பட்டினத்தார், தாயுமானவர் என்று தொடர்ந்த ஆன்மிக மரபில் காமத்தை ஒரு வீழ்ச்சியாகப் பேசும் களைத்த குரல் இது. எதையும் எழுதிப் பார்க்கலாம் என்று இல்லாமல் தன் உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்திக் கொள்வது நவீனத்துவ இலக்கியத்தில் ஒரு போக்காக இருந்து வருகிறது. காமத்தை ஒரு களியாட்டமாகக் கருதும் இந்த காலத்தில் இப்படிப்பட்ட ஒரு குரல் இருக்கிறதென்றால் அது ஒரு பெரிய ஆச்சரியம்தான். சமகால போக்கைவிட்டு விலகி இருப்பதால் இது ஒரு தனிக்குரலாக இருக்கிறது, மரபார்ந்த ஒரு முக்கியமான பார்வையை நவீன இலக்கியத்தில் பிரதிநிதிப்படுத்துகிறது. இதை அலட்சியப்படுத்தினால் ஆம்னிபஸ் பதிவர்களை சரித்திரம் மன்னிக்காது. சமகால தமிழில் இல்லாத ஒன்றைத் தருவதாக எதுவும் முனிமேடு தொகுப்பில் இருக்கிறது என்றால் அது களியாக இல்லாத களைத்த காமம்தான். ஆகவே, அது நம் பேசுபொருளாகிறது.
