பதிவர் : நம்பி
அமெரிக்காவில் அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கும் எனது ஒன்பது வயது மகன் பள்ளியிலிருந்து திரும்பி வந்து கட்டுரை எழுதும் பெரும் தலைவலி பற்றிப் புலம்புகிறான். இந்தியப் பள்ளிக் கல்வி சார்ந்த எனது ஏமாற்றங்களைப் பற்றிய என் நினைவுகளில், ஒவ்வொரு வாரமும் கட்டுரைகள் (காம்பொசிஷன்) எழுதுவதில் இருந்த அலுப்பை நினைவூட்டும் நினைவுகளுக்கு ஓர் இடம் உண்டு. உலகெங்கும் ஆசிரியர்கள் கட்டுரைகள்மீது ஒரு வெறுப்பைத் தூண்டுவதில் அமோக வெற்றி அடைந்திருப்பதைப் பார்க்கையில் மக்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் கட்டுரையின் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையும் அதில் இருக்கும் ஏராளமான சாத்தியங்களும் எதற்கும் அசையாத உறுதியை அதற்குக் கொடுத்திருக்கின்றன. தினமும் காலை அலுவலகத்திற்குப் பயணிக்கும்போது நான் அவ்வப்போது சுந்தர ராமசாமியின் அல்லது புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்கிறேன். என் சக பயண வாசகர்களும் '2006இன் சிறந்த அமெரிக்கக் கட்டுரைக'ளைப் படிப்பதைப் பார்க்கும்போது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. கட்டுரை என்ற எழுத்து வகையைப் பற்றிச் சில அறிமுகக் குறிப்புகளோடு தொடங்குகிறேன்.
