The Elegance of Hedgehog
நான் கல்லூரியில் படித்த நாட்களில் ஆர்வம் இருக்கும் மாணவர்களுக்காக சில பிரத்யேகத் தலைப்புகளில் மாலை வகுப்புகள் நடக்கும். சொல்லப்போனால் வகுப்பில் கற்றுக்கொள்வதை விட மாலை ஒன்றாக உட்கார்ந்து விவாதிக்கும்போது நிறைய புரிந்தது போலிருந்தது. ரெண்டு மாதங்கள் மேலை தத்துவம் பற்றிய வகுப்பில் சேர்ந்திருந்தேன். பசி முற்றிய மாலை வேளையில் நமது இருப்பின் அர்த்தம் என்ன என தர்க்க ரீதியாகப் பேசிப்பார்ப்பது சங்கடம் அளிக்கும் என்றாலும் ஏதோ ஒன்று ஈர்த்தது. 'வேலைக்காகாத' விவாதங்கள் எனப் பலரும் அபிப்ராயப்பட்டாலும், நம்மை உணரக் கூடிய தருணங்கள் இவ்விவாதங்களில் உண்டு.
தத்துவ விவாதங்களில் முதல் கேள்வி முக்கியமானது. நாம் பார்க்கும் உலகுக்கும், நமது மூளையில் உணரும் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய கேள்வி. நம்மைச் சுற்றி இருக்கும் மேஜை, நாற்காலி, கரும்பலகை எல்லாமே பருப்பொருட்களால் ஆனவை. ஆனால் நமது மூளை அவற்றை உணர்வுகளாகப் பதிந்து புரிந்துகொள்கிறது. இதையே தலைகீழாகப் பார்த்தால் - நமது மூளையை நம்ப வைத்தால் போதும், நம்மைச் சுற்றியுள்ள உலகம் காலியாக இருந்தாலும் கவலை இல்லை. டிஸ்னி லேண்டில் இருப்பது போன்ற பிம்பத்தை சமையலறையில் இருக்கும்போது உருவாக்கிவிடலாம்.
நாம் அனைவரும் 'மேட்ரிக்ஸ்' படத்தைப் பார்த்திருப்போம். அதில் திடுமென ஹெலிகாப்டர் ஓட்டவும், கராத்தே பயிற்சி செய்யவும், காதலிக்கவும் மூளையில் பயிற்சிகளை தரவிறக்கம் செய்வார்கள். அது போல நமது மூளைக்கும் - உடம்புக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வதுதான் தத்துவத்தின் முதல் படி. நமது இருப்பை நிர்ணயிப்பதும் இந்த புரிதலில்தான் உள்ளது.
