புத்தகங்களில் ஆண்-பிரதி பெண்-பிரதி என எழுதும் பின்நவீனத்துவ வழக்கத்துக்கும் இந்தப் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு விதத்தில் எழுதுபவர் ஆணாக இருப்பதால் ஆண் மையப் பார்வை சற்றே அதிகமாக இருக்கலாம். ஒரு ஆணாக தந்தை - மகனுக்கிடையே இருக்கும் உறவை எழுதும்போது பெண் வாசகிகளுக்கு பதிவின் நுண்மையான தளங்கள் பிடிபடாமல் போகலாம்.இதைப் படிப்பவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், பெண் சம்பந்தமானப் பார்வையை தங்களது கற்பனையைக் கொண்டு உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவரவர் இஷ்டப்படி கற்பனை செய்துகொள்ள நீ எதற்கு எனும் கேள்விகளுக்கு ஆம்னிபஸ்ஸில் தடையில்லை. பதில் எதிர்பார்க்கக்கூடாது. அவ்வளவுதான்.
பத்து வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன தனது தந்தையைப் பற்றி எனது நண்பன் திடீரென நிறையப் பேசத் தொடங்கினான். எதைப் பற்றிப் பேசினாலும் தனது அப்பாவைப் பற்றி நுழைத்துவிடுவான். இப்படித்தான் மாற்றான் படம் பார்த்தியான்னு யதார்த்தமாகக் கேட்டதுக்கு, பார்த்தேன் பிடிக்கலை எனச் சொல்வதற்கு பதிலாக, 'ஒட்டிப் பிறக்கும் ரெட்டை வெளிப்படையாக காட்டப்பட்டிருக்கு அவ்வளவுதான், எல்லாருக்குள்ளயும் அப்பா உள்பிறந்த ரெட்டைப் போல நம்மை கவனித்தபடியே இருக்காங்க, சில சமயம் அவங்க சொல்வதைக் கேப்போம், பல சமயம் வாய மூடுடான்னு நிராகரிப்போம்', அப்படின்னு சொன்னான். இந்தக் கோணம் படத்தில் இருந்தால் கேரண்டியா நூறு நாளும் என் நண்பனே படத்தைப் பார்த்திருப்பான்.
இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருந்த வேளையில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ’மகளும் நானும்’ எனும் பதிவில் நேற்று தனது வலைதளத்தில் - மகள்கள் மாறுவது கிடையாது. தந்தை மகள் உறவு மாறுவதில்லை என எழுதியுள்ளார். மிக அற்புதமானக் கட்டுரை. ஆம்னிபஸ் வாசகர்கள் அதனைப் படித்துவிட்டு மேலே தொடரலாம். ஆம், தந்தை - மகள் உறவு வளர்வதும் இல்லை - அம்மா மகன் உறவு போல உருவாகி ஒரு கட்டத்தில் நிலைபெற்றுவிடுகிறது.
