இந்திய விடுதலைக்காக அகிம்சைக்கு எதிரான முறையில் இயங்கியவர்கள் மிகச் சிலரே. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு காந்திய அகிம்சைப் போராட்ட வரலாறாக இருக்கிறது. அப்படியில்லாமல் ஆயுதம் ஏந்திப் போராடிய சிறுபான்மை போராளி ஒருவரின் சுருக்கமான வரலாறு இந்த நூல். சுருக்கம் என்றால் பொடிச்சுருக்கம். முன்னுரை, சில விளம்பரப் படங்கள் கழிய மொத்தமே 34 பக்கங்கள் மட்டுமே. வேகமாக வாசிப்பவர்கள் பதினைந்து நிமிடங்களில் வாசித்து கீழே வைத்துவிடலாம்.
இலங்கை சிந்தாமணி இதழில் 1967ல் வெளிவந்த கட்டுரைத் தொடரை நூல் வடிவில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள். வரலாற்றையும் அதில் வாழ்ந்த ஒருவரையும் மறந்துவிடக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். இல்லை செண்பகராமனைப் பற்றி நாமறிந்த தரவுகளின் ஆழம் அவ்வளவுதானா தெரியவில்லை. அதாவது சொல்வதற்கு அதிகமாக எதுவும் இல்லை என்ற நிலை இருக்கிறதா என்ற கேள்வி பிறக்கிறது.
