எல்லோருக்கும் குழந்தைப்பருவம் தாண்டி இளமைக்கு வருவதென்பது
பல புரியாத புதிர்களைக்கடந்து வரும் விஷயமாகத்தான் இருந்திருக்கும். எல்லோர் வாழ்விலும்
பள்ளியை நேசிக்கச்செய்ய ஒரு பெண்ணும், பள்ளியை வெறுக்கச்செய்ய ஒரு டீச்சரும் நிச்சயம்
இருப்பர். இருந்தாலும் நம்முடனேயே இருந்து கொண்டு நம்மை விட அதிகம் தெரிந்து வைத்திருக்கும்
நண்பர்களைக் கண்டு அவர்கள் செய்வதை செய்து நம்மை பெரியவர்களாகக் காட்டிக் கொள்வோம்.
அதே போல எல்லார் வாழ்விலும் சொந்தத்திலோ பக்கத்து வீடுகளிலோ திருமணமாகாத, திருமணம்
செய்து கொள்ள விரும்பாத ஒரு சித்தப்பனோ மாமனோ இருக்கலாம். அவர்கள் கதை இன்னும் சுவாரஸ்யமானதாக
இருக்கும். “என்னடா வாழ்க்கை இது” எனப் புலம்புவார்கள். நமக்கொன்றும் புரியாதெனினும்
சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதும். எப்படியும் ஒரு ஐஸ்க்ரீமுக்கோ, சாக்லேட்டுக்கோ
துட்டு நிச்சயம்.
வாமு கோமுவின் கதைகளின் பிரதானம் மொழிநடை. அதுவும் கொங்குப்
பகுதிகளில் வாழ்ந்துவிட்டு அல்லது ஓரிருநாள் தங்கிவிட்டு அங்கிருக்கும் பழக்கவழக்கங்களைப்
பார்த்துவிட்டு வந்தவர்கள் நிச்சயம் அந்த பூமியை, மக்களின் இன்மையை உணர்வார்கள். இவரின்
கதைகளைப் படிக்கும்போது புத்தகத்தின் வாயிலாக ஈரோட்டுக்கோ அவிநாசிக்கோ சென்று தொப்புக்கடீர்
என்று விழுந்து விட முடிகிறது. அத்தனை எளிமையான, ஆர்வத்தை தூண்டும் எழுத்து.
