மற்றவை செய்கிறமாதிரி வெள்ளைச் சேவல், எந்த சேட்டையும் செய்யவில்லை. புள்ளிப்பொட்டை எப்போதுமில்லாத மாதிரி அதை உருக உருகப் பார்த்தது. நேராக அதனிடம் போய் இழைந்தபடி நின்றது. செல்லமாய், வலிந்து போய் வெள்ளைச் சேவல் கழுத்தில் ஒரு கொத்து கொத்தியது. வெள்ளை எந்தவித பதட்டமும் இல்லாமல் பரந்த றெக்கைக்குள் புள்ளிப் பெட்டையை வளைத்து ஏறி ஒரு மிதி மிதித்தது. புள்ளிப்பொட்டை ஓடவில்லை, கத்தவில்லை. அதற்குப் பிறகும் அதன் கையடக்கத்திலியே நின்றது. சந்தோஷமாய் எந்தவித சடசடப்பும் இல்லாமல், வெள்ளைச் சேவலின் ஆளுகையில் கால் உதறி சீழ்த்து பொறுக்கியது. இவ்வளவு நாளில் அன்றைக்குத்தான் கோழி கோழியாக மேய்ந்தது.
இணை பிரியாமல் அதன் கூடவே வளைய வந்து கொண்டிருந்ததைப் பார்த்தவள் சொல்லிக் கொண்டாள். "நாளைக்கி முட்ட இட்டு குஞ்சு பொறிச்சிதுன்னா, இந்த மாதிரி வெள்ள வம்சமா இருந்தா நெல்லா இருக்கும். ஊம்... ஒரு நாளைக்கி இம்மாம் அம்மாம்னு கணக்கு இல்ல. இதுல இதுதான்னு எப்பிடி..."
"காட்டுக் காடை ஊட்டுக் காடைய இட்டுக்கிட்டுப் போன கதயா, நல்லா மேய்ஞ்சுட்டு வந்து அடைஞ்சத, ஓங் கோழிதான் கெடுத்துட்டுது..." சேவல்காரி பேசிக்கொண்டே ராந்தலை எடுத்து வந்தாள்.
|
கொடி பாதை, ஆணிகளின் கதை, சமாதானக்கறி, புள்ளிப்பொட்டை, கிக்குலிஞ்சான், மழிப்பு ,ஏவல், வலை, ராக்காலம், ஆண், வனாந்திரம், சீவனம், வெள்ளெருக்கு, வண்ணம் என்று பதினான்கு சிறுகதைகள் கண்மணி குணசேகரனின் 'வெள்ளெருக்கு' சிறுகதைத் தொகுப்பில் இருக்கின்றன. இவற்றின் வட்டார வழக்கும் இயல்பான வர்ணனைகளும் கச்சிதமான கதைசொல்லலும் கதைகளைப் படிப்பது போலில்லை, பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருகின்றன- கிராமங்களைப் பற்றிய நவீன கதைகள் என்று தயங்காமல் சொல்லலாம் : குறிப்பாக, நவீன சிறுகதைகளுக்குரிய வடிவ நேர்த்தி. வட்டார வழக்கில் எழுதப்படும் கதைகளில் இத்தகைய நவீன ரசனையின் வெளிப்பாட்டை நாம் பார்க்க நேர்வதில்லை. கண்மணி குணசேகரனின் கதைகளில் இதுதான் தனித்துவமான விஷயமாகத் தெரிகிறது.