சில மாதங்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் வலாண்டர் வரிசையில் `முகங்களற்ற கொலையாளிகள்` புத்தக விமர்சனம் ஆம்னிபஸில் வெளியானது. சொல்வனம் இணைய இதழில் வெளியான அஜயின் குற்றப்புனைவைத் தொடர்ந்து சென்றடைந்ததில் இன்ஸ்பெக்டர் வலாண்டர் தொடர் புத்தகங்கள் முக்கியமான வாசிப்பை அளித்தது. இந்த கட்டுரைத் தொடரில் பேசப்பட்ட அனைத்து குற்றப்புனைவு ஆசிரியர்களின் ஒரு படைப்பையேனும் படிக்க வேண்டும் எனும் முயற்சி எடுக்கத் தொடங்கினேன்.
அந்த வரிசையில் இன்று இன்ஸ்பெக்டர் மார்டின் பெக் தலைமையில் ஸ்வீடன் குற்றப்புனைவைப் பற்றிப் பார்க்கலாம். யோவால் மாய் (Sjowall, Maj) மற்றும் வாஹ்லு பெர் (Wahloo, Per) இரு எழுத்தாளர்கள் மார்டின் பெக் எனும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை உருவாக்கியவர்கள். இருவரும் ஸ்வீடன் நாட்டின் பொதுவுடமைக்கட்சி உறுப்பினர்கள். இன்ஸ்பெக்டர் மார்டின் பெக் மற்றும் ஸ்வீடன் காவல்துறையை முன்வைத்து பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளனர்.
உலகில் குற்றங்கள் எத்தனை வகை உள்ளதோ அத்தனை குற்றப் புலனாய்வு வகைகள் உள்ளன போலும். ஒவ்வொரு குற்றப்புனைவின் கதாநாயகனும் ஒவ்வொரு வகையில் குற்றங்களை ஆராய்கிறான்.
துல்லியமான பார்வை மற்றும் கூர்மையான மதியூகத்தைக் கொண்டு குற்றங்களைக் கண்டுபிடிக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு வகை என்றால், நமது துப்பறியும் சாம்பு போல் குருட்டு அதிர்ஷ்டத்தில் குற்றங்களைக் களைவது மற்றொரு வகை. பத்தொன்பதாம் நூற்றாண்டு குற்றப்புனைவுகள் முதல் வகை என்றால், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி ரெண்டாம் வகை போலும். தேர்ச்சியாகச் செய்யப்படும் குற்றங்கள் என்றில்லாமல், நவீன உலகின் சமூக வகைமைக்கு ஏற்ப குற்றங்களும் மாறுபடுகின்றன. இருநூறு வருடங்களுக்கு முன்னர் கடத்தல் குற்றங்கள் இன்றைய சமூகங்களை விடக் குறைவானதாக நடந்திருக்கும். சமூக கட்டமைப்பில் மனிதர்கள் ஒருவரை விட்டு மற்றொருவர் விலகிப்போனபடி இருக்கின்றனர். எதிர் ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் எத்தனை பேர் என்பது கூட நமக்குத் தெரியாமல் போகிறது. உலகம் எந்திரமயமாக்கப்பட்டு சுருங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், எல்லாரும் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுகொண்டே இருக்கின்றனர். குற்றங்களின் சாத்தியங்களை இது அதிகப்படுத்துகிறது.
