சிறப்பு பதிவர் : அஜய்
(நவீன உலக இலக்கியத்தைப் பேசும்போது போர்ஹெஸ், மார்க்வெஸ், லோசா என்று லத்தின் அமெரிக்காவில் ஆரம்பித்து பரவலாக அறியப்பட்ட பத்து பன்னிரண்டு பெயர்கள் மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது. உலக இலக்கியம் எண்ணற்ற குரல்களைக் கொண்டது, பல திசைகளில் விரிவது, மானுடத்தின் பல முகங்களை வெளிப்படுத்துவது. பன்மைத்தன்மை கொண்ட உலக இலக்கியத்தை ஒரு சில நட்சத்திர எழுத்தாளர்களைக் கொண்டு மட்டும் அடையாளப்படுத்திவிட முடியாது.
தமிழில் அதிகம் அறியப்படாத நவீன ஆங்கில எழுத்தாளர்களை ஆம்னிபஸ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார் அஜய். பிரதி ஞாயிறன்று உங்கள் ஆம்னிபஸ்ஸில் மட்டும் வெளியாகும் இத்தொடரில் இதுவரை ஜார்ஜ் ஸான்டர்ஸ் மற்றும் டெபோரா ஐசன்பர்க் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழின் ஆகச்சிறந்த சிற்றிதழ்களில் ஒன்றான வலசையின் அண்மைய பதிப்பில் அஜய் செய்திருக்கும் மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்பட்டுள்ளது. வலசைக்கு ஆம்னிபஸ் தன் அன்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது
இனி அஜய்-)
சிந்தனைகளைப் புனைந்த நாவல்கள் என்று
டிலிலோவின் படைப்புகள் குறிப்பிடப்படுவதில் எனக்கு இசைவு உண்டு. ஏதோ ஒரு
ஐடியா அல்லது கான்செப்ட் அல்லது சமகால சமூக நம்பிக்கை அவரது நாவல்கள்
பலவற்றின் பின்னணியாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. நாவலின் பின்னணியில்
உள்ள அந்த விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உதவும் துணைக் கருவிகளாகவே
அவரது பாத்திரங்கள் இருக்கின்றனர். உதாரணமாக 'White Noise' நாவலில்
நுகர்வுக் கலாச்சாரமும் அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலும் இப்படிப்பட்ட ஒரு
தளமாக இருக்கின்றன, "மாவோ II" நாவலில் குழுக்களின் (cult) அதிகாரமும் மனித
மனநிலையின் மீதான தொலைக்காட்சி பிம்பங்களின் (imagery) ஆதிக்கமும்
பின்னணியாக இருக்கிறது. இதைச் சொல்வதால் டிலிலோ வாசகர்களிடம் ஏதோ ஒரு
கருத்தைத் திணிக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். மாறாக,
சொல்வதற்கு அவருக்கு ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது, அதை அபுனைவாக எழுதாமல்
புனைவாக எழுதுகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
என்னால் இவரது
நாவல்களை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது என்று சொல்ல மாட்டேன். எந்த
ஒரு கலைப் படைப்பையும் அப்படியெல்லாம் புரிந்து கொண்டுவிட முடியுமா என்ன?
இவரது எழுத்தை ரசித்துப் படிக்க முடிகிறது என்றும் சொல்ல மாட்டேன்.
ரசித்துப் படிக்க முடியவில்லை என்று சொல்லும்போது மகிழ்ச்சியான, சுகமான
வாசிப்பைத் தருவதில்லை என்ற பொருளில் சொல்கிறேன். ஆனாலும்கூட அவர் நம்மை
இழுத்துக் கொள்கிறார், நம்மிடம் சொல்வதற்கு அவருக்கு ஏதோ ஒன்று இருக்கிறது.
நான் கவனிக்காத ஏதோ ஒன்றை, அல்லது நாம் கவனித்திருந்தாலும் அவர் போல்
அவ்வளாவு சரியாக வெளிப்படுத்த முடியாத ஏதோ ஒன்றை அவரால் சொல்ல முடிகிறது.
அதனால்தான் அவரது படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசித்துக்
கொண்டிருக்கிறேன்.
