பதிவர் : எஸ்.சுரேஷ் (@raaga_suresh)
ஐஸ்லாந்திலிருக்கும் ஒரு ஏரி மர்மமான முறையில் வற்றிக் கொண்டிருக்கிறது; அந்த ஏரிக்குள் இறங்கும் பெண்ணொருத்தி ஒட்டுக் கேட்கும் கருவியொன்று கட்டப்பட்டிருக்கும் ஒரு எலும்புக் கூட்டை காண்கிறாள். காவல் துறை சம்பவ இடத்துக்கு வருகிறது; அந்த ஒட்டுக் கேட்கும் கருவியில் "Made in Russia" என்று பொரிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்; உளவறியும் நோக்கங்களுக்கு அது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். கருவியின் தொழில்நுட்ப விபரங்களைக் கொண்டு மேலும் துப்பு துலக்கி, அந்த எலும்புக்கூடு 1970களிலிருந்தே ஏரியில் கிடக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் எர்லண்டர் ஸிவன்ஸன் தலைமையில் விசாரணை துவங்குகிறது; 1970களில் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறார்கள். காவல் துறைக்கு இந்த விசாரணையில் எந்த ஆர்வமும் இல்லை. விசாரணையைக் கைவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், எர்லண்டர் அதெல்லாம் முடியாது என்று விசாரணையைத் தொடர்கிறார். பல தசாப்தங்களுக்கு முன்னர் நடந்திருக்கக்கூடிய என்ற ஒரு கொலையை, எந்தவொரு துப்பும் இல்லாமல், எப்படிப் படிப்படியாக எர்லண்டர் கண்டுபிடிக்கிறார் என்பது இந்த மர்ம நாவலில் ஒரு இழை.
இந்நாவலில் இரண்டு வெவ்வேறு இழைகள் ஓடுகின்றன. ஒன்று, விசாரணை இழை. மற்றொன்று கொலைக்கு பின்னாலிருக்கும் காரணத்தை விளக்கும், கடந்த காலத்தைத் திரும்பக் கோர்க்கும் இழை. இரண்டாவது இழைதான் ஆர்வமூட்டுவதாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. அது, லட்சியவாதியான ஒரு இளம் மாணவனைப் பற்றியது. கம்யூனிசத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்படும் அவன், பனிப்போர் காலத்தில் கிழக்கு ஜெர்மனியின் லைப்சிஷ் நகரத்தில் தன் மேற்படிப்பைத் தொடர முடிவு செய்கிறான். தீவிரமான கொள்கைப் பிடிப்புள்ள இளமையின் ஆர்வத்தோடு லைப்சிஷ் வரும் அவன், தன்னுடைய கம்யூனிசக் கொள்கைகளால் உலகையே தன்னால் மற்றிவிட முடியும் என்று நம்புகிறான். ஆனால், அவனுடைய நிஜ உலகம் அவனுடைய லட்சிய உலகத்தைக் காட்டிலும் வித்தியாசமாய் இயங்குகிறது என்பதைப் பின்னர்தான் உணருகிறான். தொடர்ந்த கண்காணிப்பு, அரசுக்கும் அதன் லட்சியங்களுக்கும் தான் விசுவாசமாக இருப்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை, எப்போதுமிருக்கும் பயமும் மூச்சுமுட்டலும் - கிழக்கு ஜெர்மனியின் ஃபாசிசப் போக்கு அவனுக்கு புரியத் தொடங்குகிறது. அந்தச் சூழலில், யாரையுமே - நெருங்கிய நண்பர்கள் உட்பட - யாரையுமே நம்ப முடியாது. பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய உளவாளிகள் மூலம் மட்டுமல்ல, உங்களுடைய நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று அனைவரைக் கொண்டும் பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டேயிருக்கிறார்.
