கோவையில் இருந்த நாட்கள் பறவைகளின் கூச்சலோடுதான் புலரும். வீட்டுக்கு வெளியே இருந்த ஒன்றிரண்டு வேப்ப மரங்கள், தென்னை மரங்கள் மற்றும் அவரைக் கொடியோ எதுவோ, அதில் குருவிகளும் இன்னபிற பறவைகளும் இருந்திருக்கலாம். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு காக்காய், குருவி, கோழி, வாத்து, மயில், கழுகு, புறா, கிளி என்று ஒரு பத்து பதினைந்து பறவைகள் பரிச்சயமாக இருந்திருந்தால் அதிகம். ஆனால் நானறியாத அந்தப் பறவைகள் எனக்கு எவ்வளவு முக்கியமாக இருந்திருக்கின்றன என்பதைச் சென்னையின் மேன்ஷன் ஒன்றின் ஃபேனின்கீழ் படுத்திருந்த நாட்களில்தான் உணர்ந்தேன் - ஹோம் சிக்னஸ் காதில் விழாத அந்தப் பறவைகளின் கலவரக் குரல்களாக உருவம் பெற்றது. கோவையின் பறவை குரல்களுக்கு அறையின் இருளில் அழுதுமிருக்கிறேன்.
புதிதாய் வந்த ஊரில், புதிதாய்ச் சேர்ந்த பணியில், புதிய பொறுப்புகளும் கடமைகளும் அழுத்தம் கொடுத்த துயர தினங்களின் விடியலுக்கு நான் இழந்திருந்த பறவைகளின் ஓசைகள்தான் முகம் கொடுத்தன. இதோ, இப்போது வேறு இடத்தில் இருக்கும் என்னைச் சுற்றி மரங்கள் - எப்போதும் எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒரு பறவை சத்தமிட்டுக்கொண்டே இருக்கிறது. மூடிய அறைகளுக்குள், முகம் பார்த்துப் பழகிய மனிதர்களுடன், கணினியின் திரையும் தொலைகாட்சிப் பெட்டியுமே உலகின் சன்னல்களாக மாறிவிட்ட இந்தக் குறுகிய உலகிலிருந்து என்னை மீட்டுச் செல்லும் குரல்கள். இவை வெளியிலும் இல்லை, உள்ளிலும் இல்லை - இரண்டுக்கும் பொதுவான ஒரு தளத்தில் இருக்கின்றன.
பழகிய விஷயங்களில் தொலைந்த எனக்கு வாழ்க்கையின் அழகையும் இனிமையையும் ஓயாத புத்துயிர்ப்பையும் கொண்டு வந்து கொடுக்கும் கூவல்கள் இவை. இந்தக் குரல்கள் என் எண்ணங்களின் மயக்கத்தைக் கலைத்து, பரந்து விரிந்த, சலனங்கள் நிறைந்த உலகில்தான் என் இருப்பு என்பதை நினைவூட்டுகின்றன. நான் மதிக்காத, லட்சியம் செய்யாத, காது கொடுத்தும் கேட்காத பின்னணிக் குரல்கள்தான். ஆனால் கூவியடங்கும் இந்தக் குரல்கள் ஒலிகளும் வண்ணங்களும் தொலைதூரங்களும் எதிர்பாராத ஆழங்களும் நிறைந்த ஓர் உலகில் என்னை இருத்தி வைக்கின்றன. இப்போது நான் இதன் அருமையைப் பாராட்டாதவனாக இருக்கலாம், ஆனால் இந்த இடத்தைவிட்டுச் செல்லும்போது, எப்போதும் என் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தக் குரல்களின் இழப்புக்கு நிச்சயம் வருந்துவேன்.
கானுயிர் பதிவுகள் செய்யலாம் என்று ஆம்னிபஸ் நண்பர்கள் முடிவு செய்ததும் நான் தேர்ந்தெடுத்த முதல் புத்தகம், Michael McCarthyன் "Say Goodbye to the Cuckoo". ஏற்கனவே நான் பலமுறை வாசித்து ரசித்திருந்த இந்தப் புத்தகத்தில் மக்கார்த்தி, ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் பன்னிரெண்டு பறவைகளின் சாரத்தை, essence, கண்டடைய முயற்சிக்கிறார். அற்புதமான வர்ணனைகளும் தரிசனங்களுமான இந்தப் புத்தகம் ஒவ்வொரு பறவையையும் அதனதன் சூழலில், நிலத்துடனும் மனிதர்களுடனுமான பண்பாட்டுப் பின்புலத்தில் அடையாளப்படுத்தி, பறவைகளின் இழப்பு மனிதனுக்குத் தன் அக அனுபவத்தின் நிரந்தர இழப்பாக இருக்கும் என்பதைச் சுட்டுகிறது. வாசிக்கும்போது அதை எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடிந்தாலும், தமிழில் எழுதும்போதுதான் ஆங்கிலத்துக்கும் இங்கிலாந்துக்கும் வெளியே அதைப் பேசுவது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது. சில பத்திகளை மட்டும் மேற்கோள் காட்ட இருக்கிறேன்.
