சிறப்பு பதிவர் - அஜய்
டெபோரா ஐஸன்பெர்க் சிறுகதைகளின் நான்காம் தொகுப்பு "அதிநாயகர்களின் அந்திப்பொழுது" (Twilight of the Superheroes). இதில் ஏழு கதைகள் இருக்கின்றன. இவரது சிறுகதைகள் அனைத்தும் ஒரே தொகுப்பாகவும் கிடைக்கின்றன. டெபோரா ஐஸன்பெர்க்கின் எழுத்தை வாசிப்பதற்குமுன் இவரது கதை சொல்லும் முறை பற்றிய சில விஷயங்களை பார்த்து விடலாம். பொதுவாக இவரது கதைகளுக்கு கச்சிதமான முடிவு இருப்பதில்லை. ஏ என்ற இடத்தில் ஆரம்பித்து பி, சி என்று ஒழுங்கான அமைப்பில் கதை சொல்லப்படுவதில்லை. பல இழைகள் வாசகருக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன, பல சித்திரங்கள் வாசகர் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு தமக்கான சித்திரத்தை வாசகர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
