சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில் வாசுதேவனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தேன். நானும் என் நண்பனும், எங்கள் ஆசிரியர் ஒருவருடன் சென்னை புறநகரில் உள்ள அந்தத் துயரரின் வீட்டுக்குச் சென்றோம். அந்த மத்திய வர்க்க வாடகை வீட்டில், ஒய்வு பெற்ற அவனது தந்தையும், தாயும், பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்த ஒரு தம்பியும் வசித்து வந்தனர். வாசுதேவன் பொறியியல் படித்து நல்ல பணியில் இருந்த பொறுப்பான இளைஞர். எந்த தீய சகவாசங்களும், கெட்ட பழக்கங்களும் அவருக்குக் கிடையாது.
அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி முடித்து வீடு திரும்பிய ஓரிரவில் கொடுமையான விபத்தில் தலையில் பலத்த காயம்பட்டு, சுய நினைவை இழந்திருந்தார். மண்டையோட்டின் ஒரு பகுதியைப் பெயர்த்து எடுத்து அறுவை சிகிச்சை செய்திருந்தனர். கண்கள் அவ்வப்போது தன்னிச்சையாக திறந்து மூடும், கைகால்களும் அவ்வப்போது தன்னிச்சையாக அசையும். சளியடைத்த மாரை ஒரு சக்ஷன் இயந்திரம் சுத்திகரித்துக் கொண்டிருந்தது. உணவு நேராகக் குடலுக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. வெளிறிய , அந்த ஈர்குச்சி தேகத்தின் குத்திட்ட கண்களும், தலையில் ஓடில்லாத இடத்தில் குழிந்த பள்ளமும் பல இரவுகளின் கனவுகளைக் கலைத்திருக்கின்றன.
அவன் இன்னும் மரணிக்கவில்லை. என்றேனும் பழையபடி கண்விழிக்கக்கூடும் என்று அந்த குடும்பம் நம்பிக்கொண்டிருந்தது. அத்தனை வைத்தியமும் பொய்த்த நிலையில் ஆயுர்வேதம் நோக்கி வந்திருந்தார்கள். தினமும் காலை நானும் என் நண்பனும் அங்கு செல்வோம். அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே எங்களால் கொடுக்க முடிந்தது. பதினைந்து நாள் சிகிச்சை கழிந்த பின்னர், போதுமென்று நிறுத்திக்கொண்டார்கள். அதற்கு பின் பதினைந்து நாட்களில், வாசுதேவன் மரணமடைந்துவிட்டார் எனும் செய்தி கிடைத்தது. உணர்வற்ற வெறும் ஓலம் மட்டுமே அவ்வப்போது வெளிவரும் வாசுதேவன் மெல்ல மானுட அடையாளங்களை இழந்திருந்தான். அவன்தான் நான் கண்ட கிரேகர் சம்சா.