எலிசபெத் பேக்கர் எழுதியிருக்கும் ‘பேக்கரின் மறுபக்கம்’ எனும் நினைவு குறிப்பு பேக்கரின் சுவாரசியமான வாழ்க்கைக்கு நல்ல சாட்சியமாகும். கோட்டயத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, வேலூர் கிறித்தவ மிஷன் கல்லூரியில் டாக்டர். இடா ஸ்கட்லரின் கீழ் மருத்துவம் பயின்றவர் எலிசபெத். டாக்டர். இடாவின் ஆளுமையால் உந்தப்பட்டு கிராமப்புறங்களில் மருத்துவ சேவையில் ஈடுபட்டார். லாரி பேக்கரை மணப்பதற்கு முன் கரீம் நகரில் (ஆந்திரம்) மிஷன் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். திருமணத்திற்கு பின்னரும் கூட இமாலய மலையடிவாரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் மருத்துவ சேவையை தொடர்ந்தார், பின்னர் கேரளாவின் மேற்குச் தொடர்ச்சி மலை கிராமங்களிலும் தொடர்ந்தது அவருடைய மருத்துவ சேவை.
பேக்கர் அவர் உருவாக்கிய கட்டிடங்களுக்காக என்றும் நினைவுகூரப்படுபவர். பெருந்திரள் மக்களை மனதில் கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், சூழியல் பிரக்ஞையுடன், மகத்தான லட்சியத்தை மனதில் சுமந்து, நம் மண்ணுக்கு உகந்த தனித்துவமான கட்டிடக்கலை பாணியை உருவாக்கியது இந்திய மக்களுக்கு அவருடைய மகத்தான் பங்களிப்பு. இந்நூல் கட்டிடக்கலை ‘நிபுணர்’ பேக்கரின் நிபுணத்துவத்தை, கட்டிடக்கலை நுட்பங்களைப் பற்றி அதிகம் தொட்டு காட்டவில்லை (அதனால் தான் இது பேக்கரின் மறுபக்கம்!). மாறாக, அவருடைய நிறை வாழ்வை அண்மையில் நின்று அவதானித்த அன்பு ததும்பும் கண்கள் விட்டு செல்லும் எளிய சித்திரமே இந்நூல். இதனூடாக நினைவுகளைப் பதியும் எலிசபெத்தின் சித்திரமும் உயிர் பெருகிறது.