- சிறப்புப் பதிவர் : P. சங்கர்
இந்த நூலைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் "பிரமாதம்". எளிய தமிழில் இத்துணை அழகாய் என் தமிழாசிரியர்கள் கூட இலக்கண வகுப்பு எடுக்கவில்லை. பள்ளி நாட்களில் இந்த நூல் என் கையில் கிடைத்திருந்தால் தமிழ் தேர்வுகளில் வெண்பாவை எழுதித் தள்ளி இருப்பேன். அவ்வயதில் இலக்கியம் படைக்க நிறைய ஊக்கிகள் வேறு இருந்தன, இந்த நூல் அப்போது கிடைக்கவில்லையே என்று ஒரே வருத்தமாக உள்ளது.
நூலில் என்னை மிகவும் கவர்ந்தது, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், இதுவரை என்னென்ன சொல்லப்பட்டதோ அதனைச் சுருக்கமாய், வரிசைப்படுத்திக் கூறுவது. இது மிக மிக பயனுள்ளதாய் இருந்தது. தளை தட்டல் பற்றி படிக்கும் போது மோனை பற்றி படித்ததை மறக்க வேண்டாம், மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம் என்பதைப் போல.
வெறும் இலக்கண நூலைப் போல மொக்கையைச் செல்லாமல், ஒரு கதை போல சில மாந்தர்களை இடையில் புகுத்தி, ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு காட்சியை மனக்கண் முன் நிறுத்திய விதம் மிக அருமையாக இருந்தது. இரண்டு ஆசிரியர்கள் பேசிக் கொள்வதையும், குடும்பத்தினர் பேசிக் கொள்வதையும் என் மனத்தினுள் நான் காட்சிப்படுத்திப் பார்க்கும்படி இருந்தது மிகவும் வசதியாக இருந்தது. இத்தகைய ஓட்டமும், காட்சிப்படுத்தலும் இல்லாவிடில் சீக்கிரமே தூக்கம் வந்து விடும் (பாடப் புத்தகம் போல). ஆனாலும் ஒரு காதல் காட்சி வைத்திருந்திருக்கலாம். வேறு சிலர் குத்துப்பாட்டு, ரவுடியிடம் பன்ச்டயலாக் என்று வேறு சில காட்சிகளை விரும்பலாம்.
