- சிறப்புப் பதிவர் : P. சங்கர்
இந்த நூலைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் "பிரமாதம்". எளிய தமிழில் இத்துணை அழகாய் என் தமிழாசிரியர்கள் கூட இலக்கண வகுப்பு எடுக்கவில்லை. பள்ளி நாட்களில் இந்த நூல் என் கையில் கிடைத்திருந்தால் தமிழ் தேர்வுகளில் வெண்பாவை எழுதித் தள்ளி இருப்பேன். அவ்வயதில் இலக்கியம் படைக்க நிறைய ஊக்கிகள் வேறு இருந்தன, இந்த நூல் அப்போது கிடைக்கவில்லையே என்று ஒரே வருத்தமாக உள்ளது.
நூலில் என்னை மிகவும் கவர்ந்தது, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், இதுவரை என்னென்ன சொல்லப்பட்டதோ அதனைச் சுருக்கமாய், வரிசைப்படுத்திக் கூறுவது. இது மிக மிக பயனுள்ளதாய் இருந்தது. தளை தட்டல் பற்றி படிக்கும் போது மோனை பற்றி படித்ததை மறக்க வேண்டாம், மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம் என்பதைப் போல.
வெறும் இலக்கண நூலைப் போல மொக்கையைச் செல்லாமல், ஒரு கதை போல சில மாந்தர்களை இடையில் புகுத்தி, ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு காட்சியை மனக்கண் முன் நிறுத்திய விதம் மிக அருமையாக இருந்தது. இரண்டு ஆசிரியர்கள் பேசிக் கொள்வதையும், குடும்பத்தினர் பேசிக் கொள்வதையும் என் மனத்தினுள் நான் காட்சிப்படுத்திப் பார்க்கும்படி இருந்தது மிகவும் வசதியாக இருந்தது. இத்தகைய ஓட்டமும், காட்சிப்படுத்தலும் இல்லாவிடில் சீக்கிரமே தூக்கம் வந்து விடும் (பாடப் புத்தகம் போல). ஆனாலும் ஒரு காதல் காட்சி வைத்திருந்திருக்கலாம். வேறு சிலர் குத்துப்பாட்டு, ரவுடியிடம் பன்ச்டயலாக் என்று வேறு சில காட்சிகளை விரும்பலாம்.
இத்தனை நல்ல நூல் வெறும் முப்பது ரூபாய்க்கு விற்பது என்பது மிகக் கொடுமையான ஒன்று: எத்தனையோ மோசமான ஆங்கில நாவல்களை மக்கள் 200 ருபாய் எல்லாம் கொடுத்து வாங்கும் போது, இத்தனை நல்ல நூல்கள் போதிய விளம்பரம் இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கதே. சுண்டைக்காய் எட்டணா சுமை கூலி பத்தணா என்ற வரிக்கேற்ப முப்பது ரூபாய் நூலான இதற்கு 40 ருபாய் delivery charges தேவைப்படுவது சற்றே வருந்தத்தக்க செயல். இது நூறு ரூபாய்க்கு மேல் விற்கப்பட வேண்டிய நூல். ஆனால் முப்பது ரூபாய்க்கே எத்தனை பேர் வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை :(
குறைகள் என்று சொல்ல முடியா விட்டாலும், இந்நூலில் இரண்டு விஷயங்கள் நெருடலாய்ப் பட்டன. (1) ஆரம்பத்தில் சென்னைத் தமிழில் நூல் ஆரம்பிக்கிறது. இது வரை இருந்த தமிழ்களிலேயே மிகவும் கொச்சையானது சென்னைத் தமிழ் என்பது என் எண்ணம். இது படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. "மேரி" என்ற சொல் "மாதிரி" என்ற பொருளில் பல இடங்களில் புழங்கப்பட்டிருந்தது. இதனை நான் "இயேசுவின் தாயார்" என்றே ஒவ்வொரு முறையும் புரிந்து கொண்டு குழம்பினேன். ஒருவேளை முழு நூலும் இப்படி சென்னைத் தமிழில் தான் இருக்குமோ என்று முதல் அத்தியாயம் படிக்கும் போது அஞ்சினேன். நல்ல வேளையாக பின்வந்த அத்தியாயங்கள் பழகிய தமிழில் எளிமையாகப் புரிந்தன. (2) நேர் நேர் = சூர்யா, வில்லன் குரூப், ஈரோயின் குரூப், ஆணுக்குப் பின் நிரை, பெண்ணுக்கு பின் நேர், போன்றவை புரிந்து கொள்ள மிக எளிமையாக இருந்தன. ஆனால் கடைசி அத்தியாயத்தில் இவற்றின் உண்மையான பெயர்கள் என்ன என்பதையும் ஆசிரியர் குறிப்பிட்டிருந்திருக்கலாம்.
இந்நூலைப் படித்து வெண்பா எழுதக் கற்றுக்கொண்ட மக்கள் தேமா புளிமா என்றால் என்னவென்று அறியாதிருத்தல் சரியல்லவே :)
அதைப்போல இன்னும் இரு சின்ன திருத்தங்கள். (1) அட்டையில் நேஹா அனுஷ்கா சோனியா மதுமிதா, என்று கூறி விட்டு உள்ளே மாற்றி சூர்யா, வடிவேலு, ஜோதிகா, ரகஸ்யா என்று சொல்லுவதைத் தவிர்த்திருக்கலாம். உள்ளே இருக்கும் பெயரையே அட்டையிலும் பயன்படுத்தி இருந்திருக்கலாம். ஒரு வேளை ஆசிரியர் அனுஷ்கா ரசிகரோ!? இல்லை அனுஷ்கா பெயர் போட்டால் நூல் அதிகம் விற்கும் என்று ப்ளான் பண்ணி செய்தார்களோ ;-) (2) ஏதோ ஒரு பக்கத்தில் எழுத்துப் பிழை இருந்தது. இதை நான் டுவிட்டரிலும் குறிப்பிட்டிருந்தேன் இருந்தேன்.
நான் அடுத்த முறை எவருக்கேனும் நூல் பரிசளிக்க விரும்பினால், இந்த நூலைத்தான் தருவது என்று முடிவு செய்திருக்கிறேன். தமிழ் தமிழன் என்று வாய்கிழிய பேசி விட்டு, ழகரம் கூட சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள் வாழும் நம்மூரில், ஆங்கிலம் மட்டுமே படிக்கத் தெரிந்த தலைமுறையினரிடம் இந்நூலின் ஆசிரியர் தமிழ்ப் பா வகைகளை கொண்டு சேர்க்க எடுத்திருக்கும் இம்முயற்சி மிகவும் மதிப்பிற்குரியது. நன்றி :)
பி.கு.: இந்த நூலைப் படித்தவுடன் வெண்பா எழுதும் ஆர்வம் எனக்கும் வந்து, கொஞ்சம் வெண்பாக்களை https://gist. github.com/3619300 என்ற முகவரியில் தட்டச்சலாம் என்று இருக்கிறேன்.
ஈஸியா எழுதலாம் வெண்பா -
ஆசிரியர்: இலவசக் கொத்தனார்
பக்கங்கள்: 80. விலை ரூ.40/-
ஆன்லைனில் வாங்க: கிழக்கு (இப்போதைக்கு: Out of Stock) :))
...
விலை அதிகமாக இருந்தால் தான் விசயம் நிறைய இருக்குமாம்... நிறைய பணம் கொடுத்து வாங்கி அழகாக வைத்திருக்க வேண்டாமா...?
ReplyDeleteநல்ல நூல் அறிமுகத்திற்கும் விளக்கத்திற்கும் நன்றி...
/// (இப்போதைக்கு: Out of Stock) :) ///
அநேகமாக அடுத்த முறை விலை ஏறி விடும் என்று நினைக்கிறேன்...