தி.ஜா வாரத்தில் அவரது படைப்புகளைப் பற்றி எழுத வேண்டும் எனும் முடிவை ஆம்னிபஸ் நண்பர்கள் சொன்னபோது சந்தோஷம் அடைந்தவன் எழுத ஆரம்பித்தபின் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டேன். என்னவென்று எழுதுவது? தி.ஜா எனும் எழுத்தாளரின் கதைகளைப் பற்றி மட்டுமல்ல, எந்தொரு கதையைப் பற்றியும் என்ன எழுதுவது. ஏதோ கதையென அவர்கள் எழுதியதை நாமும் படித்துப் பிடிக்கிறதா இல்லையாவென முடிபுகளை முழங்கும்போது கதைகளுக்கு ஏதாவது ஆகிவிடுகிறதா என்ன? இல்லை எழுத்தாளர்கள் திருப்தி அடைந்துவிடுவார்களா? எப்போதோ எழுதிய கதைகள் கிணற்றில் கல்லெனப் புத்தகங்களிலும், இணையத்திலும் தேமேவெனக் கிடக்கின்றன.
ஒரு படைப்பைப் பற்றி எழுதி என்னவாகப்போகிறது? ஏனோ வேஷம் கட்டின நடிகர்களாட்டம் சில மனிதர்கள் வருவதும் பேசுவதும் மூக்கைச் சிந்துவதும் கோவப்பட்டு கத்துவதும் ஏதோ சினிமா போல நடிப்புதானே? நமக்கும் பொழுது போக ஐந்தாறு பக்கங்களில் அவர்களை எல்லாம் உலவவிட்டு கதைபண்ணிவிட்டுப் செல்பவர் தானே எழுத்தாளர்?
இதற்குமேல் ரசித்த கதையைப் பற்றிப் பேசும்போது கதையை விளக்கமாகச் சொல்லக்கூடாது, தான் படித்துத் தெரிந்துகொள்வதுக்கு முன்னாடி முந்திரிக்கொட்டையாட்டம் முழுக்கதையையும் சொல்லணுமா என நண்பர் எரிச்சல் பட்டார். கும்பமுனி போல சிலருக்கு சட்டென கோபம் வந்துவிடுகிறது பாருங்கள் - `இதெல்லாம் என்ன ரசனை விமர்சனமா, நல்லாயிருக்கு நல்லாயில்லைனு சொல்லிவிட்டு போவியா. நாலு பக்கக் கதைக்கு முழு கதையுமே சொல்லி நாற்பது பக்க விமர்சனம்` என அலுத்துக்கொண்டார்.
