தி.ஜா வாரத்தில் அவரது படைப்புகளைப் பற்றி எழுத வேண்டும் எனும் முடிவை ஆம்னிபஸ் நண்பர்கள் சொன்னபோது சந்தோஷம் அடைந்தவன் எழுத ஆரம்பித்தபின் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டேன். என்னவென்று எழுதுவது? தி.ஜா எனும் எழுத்தாளரின் கதைகளைப் பற்றி மட்டுமல்ல, எந்தொரு கதையைப் பற்றியும் என்ன எழுதுவது. ஏதோ கதையென அவர்கள் எழுதியதை நாமும் படித்துப் பிடிக்கிறதா இல்லையாவென முடிபுகளை முழங்கும்போது கதைகளுக்கு ஏதாவது ஆகிவிடுகிறதா என்ன? இல்லை எழுத்தாளர்கள் திருப்தி அடைந்துவிடுவார்களா? எப்போதோ எழுதிய கதைகள் கிணற்றில் கல்லெனப் புத்தகங்களிலும், இணையத்திலும் தேமேவெனக் கிடக்கின்றன.
ஒரு படைப்பைப் பற்றி எழுதி என்னவாகப்போகிறது? ஏனோ வேஷம் கட்டின நடிகர்களாட்டம் சில மனிதர்கள் வருவதும் பேசுவதும் மூக்கைச் சிந்துவதும் கோவப்பட்டு கத்துவதும் ஏதோ சினிமா போல நடிப்புதானே? நமக்கும் பொழுது போக ஐந்தாறு பக்கங்களில் அவர்களை எல்லாம் உலவவிட்டு கதைபண்ணிவிட்டுப் செல்பவர் தானே எழுத்தாளர்?
இதற்குமேல் ரசித்த கதையைப் பற்றிப் பேசும்போது கதையை விளக்கமாகச் சொல்லக்கூடாது, தான் படித்துத் தெரிந்துகொள்வதுக்கு முன்னாடி முந்திரிக்கொட்டையாட்டம் முழுக்கதையையும் சொல்லணுமா என நண்பர் எரிச்சல் பட்டார். கும்பமுனி போல சிலருக்கு சட்டென கோபம் வந்துவிடுகிறது பாருங்கள் - `இதெல்லாம் என்ன ரசனை விமர்சனமா, நல்லாயிருக்கு நல்லாயில்லைனு சொல்லிவிட்டு போவியா. நாலு பக்கக் கதைக்கு முழு கதையுமே சொல்லி நாற்பது பக்க விமர்சனம்` என அலுத்துக்கொண்டார்.
கதை கதையாய் மனிதர்களைப் பற்றிப் பேசுவதை விட வாழ்க்கையில் என்ன லயிப்பு இருந்துவிட முடியும் எனும் கொள்கைவான் தி.ஜாவின் கதைகளைப் பற்றி எல்லா வகையிலும் பேசிப் பேசித்தான் ரசிக்க முடியும்.
ராமாயணத்தைக் காலட்சேபம் செய்பவர் ராமன் பட்டாபிஷேகத்தை அனுபவித்துப் பாடுகிறார், தசரதனிடம் விடைபெற்று காடு செல்லும் பாங்கை அனுபவிக்கிறார், சரிதான் எனப்பார்த்தால் ஆபரணங்களை முற்றும் துறந்து காட்டில் இருக்கும் ராமனையும் ரசிக்கிறார், அவரது அனுசரணையை பார்த்து கண்ணீர் விடுகிறார், மோகித்த ராட்சசியிடம் ராமன் காட்டும் பரிவைக் கொண்டாடுகிறார். இப்படி விடிகாலை வரை அங்குலம் அங்குலமாகப் பேசிப் பேசித்தானே நமது முன்னோர்கள் எதையும் ரசித்தனர்?
ரசித்து ஓரிரு வார்த்தை சொல்ல நமக்கும் ஒரு சுட்டுப்பொருள் வேண்டாமா? நமக்கேன் நண்பரின் பொல்லாப்பு. கதையைச் சொல்லியபடி ரசிப்போம். பாதகங்களையும் சாதகங்களையும்.
*
பிரபஞ்சன் தி.ஜாவைக் குடியரசுக் காலத்து பாணன் எனக் குறிப்பிடுகிறார். `புத்தகத்துக்கு நடுவே மயில் குட்டி போடாது எனத் தெரிந்துகொண்டபிறகு நாம் எதைத்தான் பெறப்போகிறோம்` எனச் சர்வசாதாரணமாக அவரது கதைகளில் வெளிப்படும் மானுட காருண்யத்தைக் குறிப்பிடுகிறார்.
தி.ஜா எல்லையற்ற மனோதர்மங்களைப் பற்றிப் பேசும் கதைகளை எழுதியுள்ளவர். ஓரிழை அறுந்தால் மரபுவாதி என அவப்பெயர் பெற்றுவிடக்கூடிய அளவுக்கு விளிம்பில் பயணிக்கும் வோல்வோ ஓட்டுனர். அவரது பல கதைகளில் வெளிப்படும் அசாத்தியமான நடைமுறைப் பார்வையை நான் ரசித்துள்ளேன். அக்பர் சாஸ்த்ரியின் அப்பாவாகட்டும், காண்டாமணியின் `மார்க்கம்` ஆகட்டும் எல்லையற்ற கனிவு கொண்டவர்களாகவும் சூழ்நிலையால் தவறிழைத்தவர்களாகவும் வருபவர்கள். தங்களது நிலைமையை எப்படியேனும் மாற்றிவிட வேண்டும் எனத் துடிப்புடன் அலைபவர்கள். பேசிப் பேசியே வாழ்க்கையை தங்கள் வசம் வரித்துகொள்பவர்கள், கைக்கருகே வரும்போது நழுவவிடுபவர்கள்.
’கோயம்புத்தூர்ப் பவபூதி’ சிறுகதையைப் பற்றிப் பார்க்கலாம். கோயம்புத்தூர் அருகிலிருக்கும் நடுத்தர டவுனுக்கு எழுபத்து நான்கு வயதான பாகவதர் வருகிறார். சீதா கல்யாணம், வாலி வதம், குமார சம்பவம் என அவர் காலட்சேபம் செய்யாத சரித்திரங்கள் இல்லை. `நின்னுண்டு சொன்னா பாகவதர், உட்கார்ந்து சொன்னால் புராணிகர். சரக்கு என்னமோ ஒண்ணுதான். ஆச்சா?` என ஒரே வரியில் அவரது நிலைமை நமக்குப் புரியவைக்க தி.ஜாவால் மட்டுமே முடியும். காசில்லை, பணமில்லை, வாய்ப்பில்லை என அவரது தவிப்பை அடுப்பில் பூனை தூங்கும் படத்தைப் போல் அப்பட்டமாகக் காட்டவேண்டிய தேவை மற்றவர்களுக்குத்தான்.
காளிதாசனுக்கு அடுத்த நிலையில் இருந்த கவிமேதை பவபூதி ஒரு போட்டியின் போது `காலம் நீண்டு கிடக்கு. இன்றில்லையேல் என்றேனும் யாராவது நான் பாடுவதைக் கேட்பார்கள்` என நம்பிக்கையோடு இருந்ததாகக் கதை. இந்தக் கதையும் அதே தான். அதே சமயம் நம்பிக்கைப் பற்றிய கதை மட்டுமல்ல, கலைஞனுக்கான வெளியை உருவாக்கும் வித்தை மற்றும் சிக்கல்களைப் பற்றியதும்தான்.
சூதாட்டமும், சினிமாவும், டிராமாவும் மூண்றணா கொடுத்து மூன்றாம் ஜாமம் வரை பார்க்க இருக்கும்போது காலட்சேபத்துக்கு வழி எங்கே? கிழவர் கதைசொல்லியின் வீட்டில் உள்ளவரிடம் பேசும்போது அவரது உந்துதல் ஆச்சர்யத்தை அளிக்கிறது. பரமேஸ்வர பந்துலு எனும் முசுடு, தாசில்தார் , கோவில் மேனேஜர், ஊர் பெரியவர் நாகமணி எனக் கதைசொல்லி சந்தித்திராத ஊர்ப் பெரியவர்களை அரைநாளில் தெரிந்துகொண்டு சந்தித்தும் விடுகிறார் கிழவர். ஒரு கட்டத்தில் கிழவர் சரியான பிடிவாதக்கார ஆள் என நமக்குத் தோன்றுகிறது.
சூதாட்டத்தில் ஜெயித்த ஹோட்டல் ஓனர் நாராயணனின் வீட்டுக்குச் சென்று காலட்சேபம் பற்றிக்கூறி வாய்ப்பு கேட்கிறார். மண் வாசனை போல ஒரே நேரத்தில் பல இடங்களில் திடுமெனத் தோன்றுபவரோ? ஆனால் நாராயணனுக்குப் பாராட்டு விழா நடத்தும் விழா இருப்பதால் ஊருக்கு பார்லியமெண்டு மெம்பர் வரப்போகிறார் எனச் சமயோஜிதமாகப் புரிந்துகொண்ட கிழவர் பக்கத்து ஊரான செவ்வாய்ப்பாடிக்கு வாய்ப்பு கேட்டு சென்றுவிடுகிறார்.
ஒரு திடமானக் கலைஞருக்கு இருக்கும் உறுதிப்பாடு அவரது செயலில் தெரிந்தாலும், காலத்துக்கு ஏற்ப நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டவராகவும் இருக்கிறார். சினிமா, சூதாட்டம் எனக் காலம் மாறிப்போனாலும் சூதாடிகளிடம் கூட வாய்ப்பு கேட்கத் தன்மானம் தடுக்கவில்லை. காலம் மாறிவிட்டது; பழைய கலைகளைப் பேணிக்காக்கும் கலைஞர்களுக்கு மரியாதை இல்லை. கலை, பாட்டு, கூத்து என அவற்றோடு உறவு கொண்டக் கூட்டம் மெல்ல மெல்ல காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. எஞ்சியுள்ளவர்கள் இடம் பெயர்க்கிறார்கள், தொழில் மாறுகிறார்கள். அதையும் மீறி கிழவர் போன்றவர்கள் வாழ்வின் சங்கடங்களின் ஊடாக தமக்கிடப்பட்ட விதியை நொந்தபடி கொள்கைகளை ஓரளவு தளர்த்திக்கொண்டு காலம் கனிவதற்காகக் காத்திருக்கின்றனர்.
காட்டில் சிறு குடில்களில் வாழ முற்படும் பாண்டவர்களைக் கிண்டல் செய்வதற்காக அவர்களது கூடாரத்துக்கு முன்னால் ஒரு மாளிகை கட்டி கெளரவர்களை இருக்கச் செய்வான் சகுனி. நிழலின் அருமை. அது போல, சூதாடி என்றாலும் மனித இயல்புக்கேற்ப நாராயணன் தனது திடீர் பணத்தை ஊருக்கு முன் செலவு செய்துகாட்டுவதற்காக கிழவரின் காலட்சேபத்துக்கு வருகிறான். மனிதனின் இயல்பு எப்படி இருக்கிறது பாருங்கள்? அதே போல் உண்மையில் காலட்சேபத்தில் ஈடுபாடு உள்ளதா எனத் தெரியாவிட்டாலும் கிழவர் மன்னரைப் புகழும் பாணர் போல நாராயணனைப் புகழ்கிறார்.
"`மகாலஷ்மி கடாஷத்தை அடைஞ்சிருக்கார் பையன். நல்ல குணம். பரம சாந்தர். போய், சமாசாரத்தைச் சொன்னேன். கட்டாயம் வரேன்னு சொல்லிப்பிட்டார். யாருக்கு வரும் மனசு?` என்று கிழவர் ஸ்தோத்திரம் செய்து தள்ளிவிட்டார் "
இது காலத்தின் கட்டாயமா அல்லது கிழவரின் மனத்திடத்துக்கான உரைக்கல்லா எனும் விவாதத்துக்குள் போகவேண்டாம். அதாவது, இந்த விமர்சனத்தில் போக வேண்டாம். ஆனால் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் கட்டாயம் எழும் சந்தேகம் இது. நமது அன்றாட நிகழ்வுகளில் இப்படிப்பட்ட `அட்ஜெஸ்மெண்டுகள்` இருக்கத்தான் செய்கின்றன. அலுவலகத்தில், பஸ்ஸில், சாலையில், குடும்பத்தில் என ஒவ்வோர் இடத்திலும் அதற்குத் தகுந்த விலையைத் தருவதில் தான் நமது இருப்பு அடங்கியுள்ளது.
இந்த சங்கடங்களையெல்லாம் மீறிக் கலை தன்னாலான வழிகளிலெல்லாம் தழைக்க முற்பட்டுக்கொண்டுஇருக்கிறது. ஜீவனுள்ள வரை எப்பாடுபட்டேணும் அதைப் பராமரிக்க வேண்டும், மனிதனின் வீழ்ச்சிக்கு உரம் சேர்க்கும் என நம்பிக்கையோடு கலையைத் தொடர நினைக்கும் சிறு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. தங்கள் வாழ்வை அரித்துத் திண்ணும் கலையைச் செழிக்கவைக்கப் பாடுபடுபவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். அதே சமயம், போலியான வெளிப்பாடு கலையெனப் பொய்த் தோற்றத்தில் உலா வருதைக் கண்டு `இதுவா கலை?` என மனம் நொந்து விலகி நிற்கும் கலைஞர்களும் உண்டு.
இந்த இரண்டு எல்லைகளை ஈடுபாடோடு கவனித்தபடி சில சமயம் மகிழ்ந்தும், பல சமயம் கவலையோடும் கவனத்தைக் குவிக்கும் கலைஞர்கள் எக்காலத்திலும் சாவதில்லை.
தி.ஜா இதை உண்மையாக்கியிருக்கிறார் - தமிழிலக்கியத்தில் என்றென்றும். ஆம்னிபஸ்ஸில் இந்த வாரம் முழுவதும்.
தலைப்பு - சிலிர்ப்பு தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ஆசிரியர் - தி.ஜானகிராமன்
உள்ளடக்கம் - சிறுகதைகள்
பதிப்பாசிரியர் - காலச்சுவடு பதிப்பகம்
இணையத்தில் வாங்க - உடுமலை
இணையத்தில் வாங்க - உடுமலை
பிரமாதம் ஸ்வாமி!
ReplyDelete