சிறப்புப் பதிவர்: சுசிலா ராமசுப்ரமணியன்
.....என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது.... - .....இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்” என்ற நாவலாக ஆகிவிட்டது.
மோகமுள் - இந்த வித்யாசமான தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது. கதையின் நாயகன் பாபு. சற்றே மரபு மீறிய காதலாய் தன்னைவிட மூத்தவளான யமுனாவின் மீது அவன் கொள்ளும் மோகம்; அந்த மோகம் இசையுலகின் உயர்ந்த இடத்தை அவன் அடையும் லட்சியத்திற்கும் அவனுக்கும் இடையில் நின்று நிரடும் நிரடல், இவர்களைச் சுற்றி பலப்பல கதாபாத்திரங்கள் என்று சுமார் 700 பக்கப் புதினம். முன்னூறு அல்லது ஐநூறு வார்த்தைகளில் இந்தப் புத்தகத்திற்கு அறிமுகமோ அல்லது விமர்சனமோ எழுதித் தள்ளுதல் என்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.
