எதுவும்
வேண்டாம் என்று ஓடிப் போகிறவர்களைக்கூட நம் மக்கள் எல்லாம் தரக்கூடிய
மகானாக வழிபட்டு அவரைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமாய் கூடிச் சிறை
பிடித்துவிடுகிறார்கள்.
சென்னை
திருவல்லிக்கேணியில் உள்ள திருவட்டீஸ்வரன்பேட்டைதான் சென்னையின்
வரைபடத்தில் பிரதானமாக இருந்தது - நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன்.
சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள போளூர் ஒரு
காலத்தில் அங்குள்ள சம்பத் கிரி என்ற மலையையொட்டி பொருளூர் என்று
அழைக்கப்பட்டது, அதன் அருகாமையில் உள்ள பர்வத மலை சங்க காலத்தில் நவிர மலை
என்று பாடப்பட்டிருகிறது, நாம் சாதாரணமாக செங்கம் என்று அறியும் ஊர்
செங்கண்மாநகராக வெளிர் குடி மன்னர்களின் தலைநகரமாக இருந்தது என்பன போன்ற
உபரி தகவல்கள் மலர்மன்னன் எழுதிய, "விட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச்
சித்தர்." என்ற புத்தகத்தில் கிடைக்கின்றன.
காவலாளி தோதாவின் உடம்பை அழுந்தத் துடைத்துவிட்டதும், சிவந்த சருமத்தில் மஞ்சள் வெயில்பட்டு அவன் பொற்சிலை போலப் பிரகாசிக்கலானான். கூட்டத்தில் ஒரு பொற்கொல்லனும் இருந்தான். சொக்கத் தங்கமா ஜொலிக்கற இந்த சாமி கைபட்டதெல்லாங்கூட தங்கமாயிடுமா என்று மனதுக்குள் வியந்துகொண்டான் அவன். இவ்வாறு அவன் நினைத்த மாத்திரத்தில் அதுவரை வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்த தோதா சட்டெனப் பொற்கொல்லனைப் பார்த்துப் புன்னகைத்தான். பொற்கொல்லன் சிறிது துணிவு வரப்பெற்றவனாக தோதாவின் அருகில் சென்றான். தன் இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையில் கையை நுழைத்து ஒரு செப்புக் காசை வெளியில் எடுத்தான். தோதாவின் வலது உள்ளங்கையில் அதை வைத்து அழுத்தினான். தோதா அதை ஒரு பார்வை பார்த்தான். உடனே செப்புக் காசை வாயில் போட்டுக்கொண்டு குதப்பத் தொடங்கினான். சில நிமிடங்களுக்குப் பிறகு 'தூ' என்று அதைத் துப்பினான். அது வெளியே சிறிது தொலைவில்போய் விழுந்தது.
"தோதா துப்பிய செப்புக் காசை அனைவரும் பார்த்தனர். அது இப்போது ஒரு பொற்காசாக மின்னிக் கொண்டிருந்தது! 'ஆ' என்று ஒரு வியப்புக் குரல் கூட்டத்திலிருந்து வீறிட்டெழுந்தது. பொற்கொல்லன் ஓடிச் சென்று அந்தக் காசைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். அங்கிருந்தவாறே தோதாவை நோக்கி விழுந்து வணங்கி எழுந்தான். எங்கே யாராவது தன்னிடமிருந்து அதைப் பிடுங்கிக்கொண்டுவிடுவார்களோ என்று அஞ்சியவன் போல் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தான். அதைப் பார்த்த தோதா தூ, தூ என்றான். முகத்தில் ஏளனம் படர்ந்தது. அங்கே இருக்கப் பிடிக்காமல் எழுந்து சத்திரத்தைவிட்டுப் புறப்பட்டான். 'சாமீ, சாமீ' என்று அனைவரும் அவனைப் பின் தொடர்ந்தனர். தோதா அருணாசலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தான்."
|