எழுத்துக்களைப் போலவே எழுத்தாளர்களும் முக்கியமானவர்கள். எழுத்து எழுத்தாளனின் ஒரு தோற்றம் மட்டுமே என்றுகூடச் சொல்லலாம். ஆகவேதான் உலகமெங்கும் எப்படி இலக்கியம் பேசப்படுகிறதோ அப்படி இலக்கியவாதிகளின் வாழ்க்கையும் பேசப்படுகிறது. பெரும்பாலும் அவற்றை பிற எழுத்தாளர்கள்தான் எழுதியிருக்கிறார்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தக் குறிப்புகள் தமிழிலக்கியம் என்ற அமைப்பின் சென்ற அரை நூற்றாண்டு சலனத்தை மட்டுமல்ல… தமிழ் அறிவுலகின் அலைகளையும் காட்டக்கூடியவை.
- 2012 சிறந்த பத்து புத்தகங்கள், ஜெயமோகன்
எஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' கட்டுரை தொகுப்பின் முன்னட்டையில் மஞ்சள் ஆடை அணிந்த ஒரு மேலை நாட்டு இளமங்கை, தான் தன் இடக்கையில் ஏந்தியிருக்கும் கையடக்கப் பிரதி ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறாள். மணிக்கட்டு வரை நீண்டிருக்கும் அவளது சட்டையின் கைகளும் அவற்றின் நுனியில் விரியும் சிறகுகள் போன்ற அலங்காரத் தையலும், வெண்பஞ்சு குஷன் போல் அவளது தலையைத் தாங்கும் அந்த கவுனின் வேலைப்பாடும், மார்ப்பகுதியில் பூத்திருக்கும் மலர் போன்ற ரிப்பன் மடிப்புகளும் இந்தப் பருவப்பெண் பதினெட்டு அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்று சந்தேகிக்க வைக்கிறது. அவளது கவிந்த முகத்தின் கண்கள் புத்தகத்தை உற்று நோக்குவதாய் தெரிந்தாலும், அவளது நேர் நிமிர்ந்த அமர்வில் இருக்கும் கவனமும், சற்றே முன்னோக்கிச் சரிந்த முகத்தின் துவளலும் அவள் தன்னில் ஆழ்ந்திருக்கிறாள் என்று நினைக்க வைக்கின்றன. நமக்குக் கோடுகளாய் தெரியும் அந்தப் புத்தகத்தின் சொற்கள் அவளை வேறொரு உலகுக்குக் கொண்டுச் சென்றிருக்க வேண்டும். இந்தப் பெண் ஒரு உன்னத வாசகி - வாசக பர்வத்தின் உள்ளடக்கத்தை அவளால் வாசிக்க முடியாது.
பின்னட்டையில் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு நாற்காலியில் சரிந்து அமர்ந்திருக்கிறார். அவர் அப்படி அமர்ந்திருப்பது ஒரு பிரம்பு நாற்காலியாக இருக்கலாம். முன்னட்டையில் உள்ள ஆதர்ச வாசகி போலன்றி, ராமகிருஷ்ணனின் கைகளில் கனத்த அட்டை கொண்ட ஒரு தடிமனான புத்தகம் இருக்கிறது. அவளைப் போல் ஒய்யாரமாய் இதை விரித்துப் பிடித்து வாசிக்க முடியாது - குறைந்தது நானூறு பக்கங்களாவது இருக்கக்கூடிய இந்த கனத்த புத்தகத்தை கால் மேல் கால் போட்டு அமர்ந்து, உயர்ந்திருக்கும் தன் இடது முழங்காலில் தாங்கிப் பிடித்திருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன். அந்த ஆதர்ச பெண் புத்தகத்தின் பக்கங்களை அழுத்திப் பிடித்திருக்கிறாள் என்றால், எஸ் ரா வின் வலது கையின் முதலிரு விரல்கள் புத்தகத்தின் பக்கங்களை மிகுந்த பொறுமையின்மையுடனும் பேராசையுடனும் புரட்டிக் கொடுக்கின்றன.
ராஜபரம்பரையோ என்று எண்ண வைக்கும் உயர் வகுப்புக்குரிய அந்த வாசகியின் ஆடை அலங்காரங்கள் எதையும் நம் கதாசிரியர் பாவிப்பதில்லை - எளிய வெண்ணிறச் சட்டையில் வெளிர்நீலக் கோடுகள், மயிலின் இறகு போல் பாக்கெட்டில் நம் பார்வைக்குத் தப்ப முடியாத பேனா - புனைவெழுத்தாளனின் ட்ரேட் மார்க். இவரை ஒரு ஆதர்ச எழுத்தாளனாக எடுத்துக் கொள்ளலாம். தாழ்ந்த கண்களும் சிரிப்பில் விரியக் காத்திருக்கும் உதடுகளும் பரபரப்பாய் பக்கங்களைப் புரட்டிக் கொடுக்கத் தயாராயிருக்கும் விரல்களும் எஸ்ராவும் வேறொரு உலகில் வெகு வேகமாய் பயணப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.
வெவ்வேறு காலங்களையும் வெவ்வேறு பண்பாடுகளையும் சேர்ந்த இந்த வாசகியும் எழுத்தாளனும் சீசன் டிக்கெட் எடுத்த பயணிகளைப் போல் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாற்று உலகொன்றில் வெவ்வேறு வேகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். அகவயப்பட்ட மனோலயத்தால் ஒன்றுபட்ட இவ்விரு ஆதர்சங்களும் அதே காரணத்தால் ஒருவரையொருவர் உண்மையாக அறிந்து கொள்ளூம் வாய்ப்பையும் இழந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது, ஆனால் அது முக்கியமில்லை.
