எழுத்துக்களைப் போலவே எழுத்தாளர்களும் முக்கியமானவர்கள். எழுத்து எழுத்தாளனின் ஒரு தோற்றம் மட்டுமே என்றுகூடச் சொல்லலாம். ஆகவேதான் உலகமெங்கும் எப்படி இலக்கியம் பேசப்படுகிறதோ அப்படி இலக்கியவாதிகளின் வாழ்க்கையும் பேசப்படுகிறது. பெரும்பாலும் அவற்றை பிற எழுத்தாளர்கள்தான் எழுதியிருக்கிறார்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தக் குறிப்புகள் தமிழிலக்கியம் என்ற அமைப்பின் சென்ற அரை நூற்றாண்டு சலனத்தை மட்டுமல்ல… தமிழ் அறிவுலகின் அலைகளையும் காட்டக்கூடியவை.
- 2012 சிறந்த பத்து புத்தகங்கள், ஜெயமோகன்
எஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' கட்டுரை தொகுப்பின் முன்னட்டையில் மஞ்சள் ஆடை அணிந்த ஒரு மேலை நாட்டு இளமங்கை, தான் தன் இடக்கையில் ஏந்தியிருக்கும் கையடக்கப் பிரதி ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறாள். மணிக்கட்டு வரை நீண்டிருக்கும் அவளது சட்டையின் கைகளும் அவற்றின் நுனியில் விரியும் சிறகுகள் போன்ற அலங்காரத் தையலும், வெண்பஞ்சு குஷன் போல் அவளது தலையைத் தாங்கும் அந்த கவுனின் வேலைப்பாடும், மார்ப்பகுதியில் பூத்திருக்கும் மலர் போன்ற ரிப்பன் மடிப்புகளும் இந்தப் பருவப்பெண் பதினெட்டு அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்று சந்தேகிக்க வைக்கிறது. அவளது கவிந்த முகத்தின் கண்கள் புத்தகத்தை உற்று நோக்குவதாய் தெரிந்தாலும், அவளது நேர் நிமிர்ந்த அமர்வில் இருக்கும் கவனமும், சற்றே முன்னோக்கிச் சரிந்த முகத்தின் துவளலும் அவள் தன்னில் ஆழ்ந்திருக்கிறாள் என்று நினைக்க வைக்கின்றன. நமக்குக் கோடுகளாய் தெரியும் அந்தப் புத்தகத்தின் சொற்கள் அவளை வேறொரு உலகுக்குக் கொண்டுச் சென்றிருக்க வேண்டும். இந்தப் பெண் ஒரு உன்னத வாசகி - வாசக பர்வத்தின் உள்ளடக்கத்தை அவளால் வாசிக்க முடியாது.
பின்னட்டையில் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு நாற்காலியில் சரிந்து அமர்ந்திருக்கிறார். அவர் அப்படி அமர்ந்திருப்பது ஒரு பிரம்பு நாற்காலியாக இருக்கலாம். முன்னட்டையில் உள்ள ஆதர்ச வாசகி போலன்றி, ராமகிருஷ்ணனின் கைகளில் கனத்த அட்டை கொண்ட ஒரு தடிமனான புத்தகம் இருக்கிறது. அவளைப் போல் ஒய்யாரமாய் இதை விரித்துப் பிடித்து வாசிக்க முடியாது - குறைந்தது நானூறு பக்கங்களாவது இருக்கக்கூடிய இந்த கனத்த புத்தகத்தை கால் மேல் கால் போட்டு அமர்ந்து, உயர்ந்திருக்கும் தன் இடது முழங்காலில் தாங்கிப் பிடித்திருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன். அந்த ஆதர்ச பெண் புத்தகத்தின் பக்கங்களை அழுத்திப் பிடித்திருக்கிறாள் என்றால், எஸ் ரா வின் வலது கையின் முதலிரு விரல்கள் புத்தகத்தின் பக்கங்களை மிகுந்த பொறுமையின்மையுடனும் பேராசையுடனும் புரட்டிக் கொடுக்கின்றன.
ராஜபரம்பரையோ என்று எண்ண வைக்கும் உயர் வகுப்புக்குரிய அந்த வாசகியின் ஆடை அலங்காரங்கள் எதையும் நம் கதாசிரியர் பாவிப்பதில்லை - எளிய வெண்ணிறச் சட்டையில் வெளிர்நீலக் கோடுகள், மயிலின் இறகு போல் பாக்கெட்டில் நம் பார்வைக்குத் தப்ப முடியாத பேனா - புனைவெழுத்தாளனின் ட்ரேட் மார்க். இவரை ஒரு ஆதர்ச எழுத்தாளனாக எடுத்துக் கொள்ளலாம். தாழ்ந்த கண்களும் சிரிப்பில் விரியக் காத்திருக்கும் உதடுகளும் பரபரப்பாய் பக்கங்களைப் புரட்டிக் கொடுக்கத் தயாராயிருக்கும் விரல்களும் எஸ்ராவும் வேறொரு உலகில் வெகு வேகமாய் பயணப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.
வெவ்வேறு காலங்களையும் வெவ்வேறு பண்பாடுகளையும் சேர்ந்த இந்த வாசகியும் எழுத்தாளனும் சீசன் டிக்கெட் எடுத்த பயணிகளைப் போல் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாற்று உலகொன்றில் வெவ்வேறு வேகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். அகவயப்பட்ட மனோலயத்தால் ஒன்றுபட்ட இவ்விரு ஆதர்சங்களும் அதே காரணத்தால் ஒருவரையொருவர் உண்மையாக அறிந்து கொள்ளூம் வாய்ப்பையும் இழந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது, ஆனால் அது முக்கியமில்லை.
எஸ். ராமகிருஷ்ணன், வாசக பர்வத்தில் பதினெட்டு எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். மிகச் சிறந்த கட்டுரைகள்.
ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் எஸ் ராமகிருஷ்ணன் சொல்லும் கதை அவரைப் பற்றிய ஒரே கதையாகும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. "பஷீர் - கதைகளைத் தின்னும் ஆடு" என்ற கட்டுரையில், 'பாத்துமாவுடைய ஆடு குறுநாவலில் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் பணம் பணம் என்று பிடுங்கும்போது தன்னிடமிருந்த பணத்தை ஆடு தின்பதற்காக பஷீர் எடுத்துத் தருவார். ஆடு அதை மெதுவாக அசைபோடத் துவங்குவதாக ஒரு நிகழ்ச்சி இடம்பெறும். அதை வாசிக்கையில் குடும்ப இடர்பாடுகள் எந்த அளவுக்கு ஒரு மனிதனை நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடியது என்பதைப் பக்டியோடு புரிந்து கொள்ள முடியும்," என்று எழுதி, "அவரது எழுத்தில் துக்கம்தான் பரிகாசமாகிறது. எங்கெல்லாம் நாம் சிரிக்கிறோமோ அங்கே மறைக்கப்பட்ட வலியொன்று ஒளிந்திருக்கிறது," என்று தொடரும்போது நமக்கு பஷீரின் கதைகள் மட்டுமல்ல, பஷீரே புரிந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு வருகிறது. பஷீரை தான் வாசித்தது, தான் சந்தித்தது, தன் நண்பர் நேசித்தது என்ற அனைத்தும் இந்த உணர்வுக்கு நம் மனதில் நீங்காத இடம் பிடித்துத் தருகின்றன.
"சிங்காரத்தின் வாழ்க்கை அவரை எப்போதுமே நினைவிலே அமிழ்ந்து போக வைத்திருக்கிறது. மனதில் கொளுந்து விட்டெரியும் கடந்த காலத்தின் சுவாலைகளோடு மௌனமாக வாழ்ந்து கொண்டிருந்தார் சிங்காரம்," என்று எழுதும் எஸ் ராமகிருஷ்ணனின், 'ப. சிங்காரம் - அடங்க மறுக்கும் நினைவு' என்ற கட்டுரை, சிங்காரத்தின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவரது நாவல்களில் வெளிப்பட்ட நினைவுகளோடு அவரது எழுத்தையும் தனிமை கவ்விச் சென்றுவிட்டது என்ற சித்திரத்தை உருவாக்குவதாக இருக்கிறது. இந்தக் காட்சிக்கு முரணான ஒரு சொல் கட்டுரையில் இல்லை.
சுஜாதாவின் மறைவையொட்டி எழுதப்பட்ட "சுஜாதா - பிரிக்க முடியாத மௌனம்," இத்தொகுப்பின் கட்டுரைகளில் மிகவும் மாறுபட்ட ஒன்று. எழுதும் காலத்தில் நிகழ்ந்த மரணத்தின் தாக்கம் இருப்பதால், சுஜாதாவின் எழுத்து, அவரைச் சந்தித்தது என்றெல்லாவற்றையும் விவரித்துவிட்டு, "அவர் பேச விரும்பியதெல்லாம் எழுத்தானது," என்று சொல்லி, "போய் வாருங்கள் வாத்தியாரே. எழுத்தாக எப்போதும் இருப்பீர்கள்," என்று விடை கொடுக்கிறார் எஸ்.ரா. இரங்கல் கட்டுரை எழுதுவதில் இது ஒரு மாஸ்டர் கிளாஸ்.
"பிரமீள் - துடித்து வீழ்ந்த பகல்" என்ற கட்டுரை பிரமிள், அவரைச் சந்தித்தது, வாசித்தது என்பதற்கப்பால் பிரமீளின் பிறந்த தினத்தன்று அவரோடு வெயிலில் அண்ணா மேம்பாலம், எக்மோர், ஹை கோர்ட் என்று நாளெல்லாம் நடையாய் நடந்து அலைந்துவிட்டு, இரவு பிரிகிறார் எஸ்ரா - "நெருதாவும், ஆக்டோவியா பாசும், ரில்கேயும், டி.எஸ். எலியட்டும் உலக கவிஞர்களின் உன்னத நட்சத்திரங்கள் போலக் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் அந்த கவிஞர்களுக்குச் சற்றும் குறைவில்லாத கவிதைகளை எழுதிய மாபெரும் தமிழ்க்கவி யாருமற்ற தனிமையில் இருளில் நடந்து அலைந்து கொண்டிருக்கிறார்".
இவை முதல் நான்கு கட்டுரைகள், இவற்றைத் தவிர பிற கட்டுரைகளின் தலைப்பை மட்டும் இணைய வாசகர்களுக்காக ஆவணப்படுத்துகிறேன்
- சி.சு. செல்லப்பா : சுமந்து சென்ற எழுத்து
- விக்ரமாதித்யன் : பெருநகர பாணன்
- கோபி கிருஷ்ணன் : வலி தரும் பரிகாசம்
- பிரபஞ்சன் : எப்போதுமிருக்கும் நட்பு
- வண்ணநிலவன் : அவர் அப்படித்தான்
- ந. முத்துசாமி : உடல் மொழியின் நாடகம்
- அசோகமித்திரன் : அன்றாட வாழ்வின் சரித்திரம்
- ஏ. கே. ராமானுஜன் : நாட்டார் கதைகளின் நாயகன்
- கவிஞர் மீரா : அச்சில் வராத அதிசயம்
- கி. ராஜநாராயணன் : கரிசலின் உன்னதக் கதைசொல்லி
- வண்ணதாசன் : எழுத்தில் ஓடும் ஆறு
- சுந்தர ராமசாமி : நினைவுகளின் கதவுகளைத் திறந்து பார்க்கிறேன்
- கோணங்கி : மாயக்கதையாளன்
- ஜெயகாந்தன் : தன்னை அறிந்த கர்வம்
ஏறத்தாழ எல்லா கட்டுரைகளிலும் சில பொது இயல்புகள் இருக்கின்றன. மேற்கண்ட எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம், அவர்களது எழுத்தின் இயல்பு, சாதனைகள், அவர்களைச் சந்தித்துப் பழகிய அனுபவங்கள். இவர்கள் அனைவரையும் கல்லூரி காலம் முதலே எஸ் ராமகிருஷ்ணன் விரும்பி வாசித்திருக்கிறார், தேடித் தேடி வாசித்திருக்கிறார். ஒரு வாசகனாக இவர்களை பிரமிப்புடன் பார்த்திருக்கிறார், சந்தித்துப் பேசும் விருப்பத்தை இந்த பிரமிப்பு தணிக்கிறது - பின்னர் ஏதோ ஒரு வேகம், மனத்தடைகளைத் தாண்டி அவர்களிடம் கொண்டு செல்கிறது. ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்ட சிறந்த எழுத்தாளர்கள் இவர்கள் - என்றாலும், ஆரம்ப கட்டத்தில் இருக்கும் எஸ் ராமகிருஷ்ணனை சக எழுத்தாளனாக சமநிலையில் மதிக்து உரையாடுகின்றனர். வெகு நேரம் காத்திருக்கிறார், இருக்க இடமின்றி திரிகிறார் - வாழ்க்கையின் அன்றாட தேவைகளைத் தாண்டிய ஏதோ ஒரு உன்னதத்தை நோக்கிய பயணமாக எஸ் ராமகிருஷ்ணன் எழுத்தைத் தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருக்கிறார், ஒரு வாசகனாகவும் எழுத்தாளனாகவும்.
இந்த பதினெட்டு படைப்பாளிகளின் சித்திரத்தைத் தரும்போதே எஸ் ராமகிருஷ்ணன் குறித்த சித்திரத்தையும் நமக்குத் தந்துவிடுகின்றன இந்தக் கட்டுரைகள். நூலை வாசித்து முடிக்கும்போது ஒரே கதை என்று ஒன்று பார்த்தால் அது எஸ் ராமகிருஷ்ணனின் கதையாகத்தான் இருக்கிறது. இவரது கருத்துகள், நினைவுகளின் ஊடாகவே இந்தப் பதினெட்டு பேரின் உருவமும் நமக்குக் கிடைக்கின்றன. சோகமாக இருக்கும்போதும் பொன்வண்ணத்தில் ஒளிர்பவை இவை. அன்பு நிறைந்தவை, வெறுப்பற்றவை, நேசத்தில் தோய்ந்தவை. ஒரு எழுத்தாளனும் வாசகனும் எப்படி இருக்க வேண்டுமென்றால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அளிப்பவை.
இவற்றை ஒற்றைக் கதை என்று சொல்வது தவறான பொருளில் அல்ல. ஒற்றைக் கதையாக நின்றுவிடக் கூடிய அளவுக்கு அருமையாக எழுதப்பட்டிருக்கின்றன. இதில் உள்ள எழுத்தாளர்கள் குறித்த வேறு கதைகளும் நம்மை வந்தடையலாம். ஆனால் அவற்றில் எத்தனை இவ்வளவு சிறப்பான உணர்வுகளைக் கொண்டிருக்கும் என்பது சந்தேகம்தான். பொய் மெய் என்ற கருப்பு வெள்ளை கதைசொல்லலாய் இதை வாசித்து விசாரிக்கக் கூடாது. பொன்னிற நம்பிக்கைகளும் பசிய நினைவுகளும் ஒளியூட்டும் ஆதர்ச உலகமிது. அவநம்பிக்கையுடன், புனைவாகவே வாசித்தாலும்கூட மெய்ம்மையின் வலிமை கொண்ட சொற்களிவை.
யோசித்துப் பார்த்தால், நல்ல கதை என்பதைத் தாண்டி கதைசொல்லிக்கும் வாசகனுக்குமிடையே என்ன ஒப்பந்தம் இருக்க முடியும்? அதை முழுமையாகவே நிறைவேற்றியிருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன், வாசக பர்வத்தில்.
வாசக பர்வம், எஸ். ராமகிருஷ்ணன்,
உயிர்மை பதிப்பகம்,
புகைப்படத்துக்கு நன்றி : sramakrishnan.com (வாசக பர்வம் வெளியீட்டு விழா குறிப்புள்ள பக்கம்)
No comments:
Post a Comment