ஒருமுறை அறிஞர் அண்ணாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றுமாறு கல்லூரி ஒன்றிலிருந்து அழைத்திருந்தார்கள். அழைத்தவர் அந்த கல்லூரி நிர்வாகத்தின் தலைவர். அந்தத் தலைவர் அறிந்திராத விஷயம் என்னவென்றால், அவர் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க யாரிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தாரோ அந்தக் குழுவினர் அரசியல் அல்லது பிற காரணங்களுக்காய் அறிஞர் அண்ணாவின்பால் அளவற்ற வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். அவர்களின் பின்னால் அந்தக் கல்லூரியில் பெரிய கூட்டமே இருந்தது.
அண்ணா பெரும்பாலும் எழுதி வைத்துக் கொண்டெல்லாம் பேசமாட்டாராம். மேடையேறி மைக்கைப் பிடித்தாரென்றால் மடைதிறந்த வெள்ளமெனத் தன்னால் வருமாம் பேச்சு.
அப்படிப்பட்ட அண்ணாவை அவமானம் செய்யவேண்டும் என்ற நோக்கில் அண்ணா பேசுவதற்கு மேடையேறியதும் அவரிடம் அழைத்த மக்கள் அவருக்குத் தந்த தலைப்பு, “செருப்பு”.
