சிறப்புப் பதிவர்: ஈரோடு நாகராஜன் (@erode14)
Cinema is of two kinds. Movies Now and Move, ease now என்று நேற்று ஃபேஸ்புக்கில் (முகநூல், முகப்பு-த்தகம் எல்லாம் இல்லை) போட்டிருந்தேன். சற்று மிகையாகச் சொன்னால், நம்மவர்களுக்கு எதிலுமே வெச்சா குடுமி சிரைச்சா மொட்டை போன்று முன், இடை விளையாட்டுகள் தவிர்த்த நேர் உச்சத்துக்கான விழைதல் உண்டு. ஆவணப்படுத்துதலும் அங்ஙனமே. முன்பு, எதையுமே பதிவுசெய்யவில்லை, இன்று எல்லாவற்றையுமே பதிவு செய்கிறோம். முன்பு தேட எதுவுமில்லை; இன்று தேடி முடித்த களைப்பில் நாமே இல்லை. எனினும், மிகச் சிலரே ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்தம் வாழ்நாளுக்குப் பிறகும் வரலாறு என்பது பிரதேச எல்லைகளை சர்ச்சையின்றிக் கடந்து வழிந்தோடிய வெளிகளிலெல்லாம் செழிக்கச் செய்தவர்கள்.
அப்படி, தன் வாழ்ந்த காலத்தே தாமே மிகச்சிறந்த ஒரு ஹரிகதா வித்வானாகவும் அதே சமயம் அவர் காலத்து மேதைகளைப் பற்றி சுவாரஸ்யமான குறிப்புகளையும் கல்கி இதழில் எழுதியவர் சூலமங்கலம் ஸ்ரீ வைத்யநாத பாகவதர் (1868-1943) அவர்கள். கல்கியின் முதற்பதிப்பு 1941 என்கிறது விக்கிபீடியா. ஆகையால், 41, 42 -களில் வெளிவந்திருக்கக்கூடும். அவற்றைத் தொகுத்து ‘கர்நாடக சங்கீத வித்வான்கள்’ என்ற தலைப்பில், டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் முன்னுரையுடன் பாகவதரின் பேரன் திரு. எம். ராம்மோஹன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.
