சிறப்புப் பதிவர்: ஈரோடு நாகராஜன் (@erode14)
Cinema is of two kinds. Movies Now and Move, ease now என்று நேற்று ஃபேஸ்புக்கில் (முகநூல், முகப்பு-த்தகம் எல்லாம் இல்லை) போட்டிருந்தேன். சற்று மிகையாகச் சொன்னால், நம்மவர்களுக்கு எதிலுமே வெச்சா குடுமி சிரைச்சா மொட்டை போன்று முன், இடை விளையாட்டுகள் தவிர்த்த நேர் உச்சத்துக்கான விழைதல் உண்டு. ஆவணப்படுத்துதலும் அங்ஙனமே. முன்பு, எதையுமே பதிவுசெய்யவில்லை, இன்று எல்லாவற்றையுமே பதிவு செய்கிறோம். முன்பு தேட எதுவுமில்லை; இன்று தேடி முடித்த களைப்பில் நாமே இல்லை. எனினும், மிகச் சிலரே ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்தம் வாழ்நாளுக்குப் பிறகும் வரலாறு என்பது பிரதேச எல்லைகளை சர்ச்சையின்றிக் கடந்து வழிந்தோடிய வெளிகளிலெல்லாம் செழிக்கச் செய்தவர்கள்.
அப்படி, தன் வாழ்ந்த காலத்தே தாமே மிகச்சிறந்த ஒரு ஹரிகதா வித்வானாகவும் அதே சமயம் அவர் காலத்து மேதைகளைப் பற்றி சுவாரஸ்யமான குறிப்புகளையும் கல்கி இதழில் எழுதியவர் சூலமங்கலம் ஸ்ரீ வைத்யநாத பாகவதர் (1868-1943) அவர்கள். கல்கியின் முதற்பதிப்பு 1941 என்கிறது விக்கிபீடியா. ஆகையால், 41, 42 -களில் வெளிவந்திருக்கக்கூடும். அவற்றைத் தொகுத்து ‘கர்நாடக சங்கீத வித்வான்கள்’ என்ற தலைப்பில், டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் முன்னுரையுடன் பாகவதரின் பேரன் திரு. எம். ராம்மோஹன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.
சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் சைதை ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்றிருக்கிறார். அப்போது அவருடைய வகுப்புத் தோழர்கள் ரைட் ஹானரபிள் ஸ்ரீநிவாஸ சாஸ்த்ரி மற்றும் வி.ஆர்.ஸ்ரீநிவாஸ ஐயங்கார். பிறகு, மன்னார்குடியில் மேற்பார்வை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். சங்கீத ஞானம் நிரம்பப் பெற்றவராக இருந்தமையால், ஆர்வம் மேலிட அப்போது ஹரிகதை செய்வதில் பிரசித்தி பெற்றவராயிருந்த ஸ்ரீ கிருஷ்ண பாகவதரின் வழியில் அம்மரபிலேயே ஹரிகதை செய்யலானார். சரித்திரங்களைச் சொல்லுகிறபோது தகுந்த இடங்களில் தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடி, மெருகு சேர்த்தார். அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதையையும் முழுக்க முழுக்க தமிழ்ப்பாடல்களைக் கொண்டே கதாகாலட்சேபம் செய்து தமிழிசை முன்னோடியாகவும் இருந்தார். சம்ஸ்கிருதம், தெலுங்கு, மராட்டி, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நாட்டிய சாஸ்திரத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததோடு நாடகாசிரியராகவும் இருந்தார். டி.கே.எஸ். சகோதரர்கள் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை போன்ற பிரபலங்கள் அவற்றை மேடையேற்றியும் இருக்கிறார்கள்.
நாற்பதாண்டு காலம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஆராதனையையும் ஏற்று நடத்தியிருக்கிறார். அதே கால அளவில் தமது வீட்டிலேயே ராதா கல்யாண உத்சவமும் நடத்தி அதிலே மஹா வைத்தியநாத சிவன், பூச்சி ஐயங்கார், நாராயணஸ்வாமி அப்பா, மான்பூண்டியா பிள்ளை, தக்ஷிணாமூர்த்தி பிள்ளை, திருக்கோடிகாவல் கிருஷ்ணய்யர், புல்லாங்குழல் சரப சாஸ்திரிகள் எல்லோரும் கலந்து கொண்டுமிருக்கிறார்கள் என்பதால் ஞானமும் நேரடி அநுபவமும் கொண்டு அவர் எழுதியிருக்கிறார்.
நாற்பத்தியாறு வித்வான்களைப் பற்றிய குறிப்புகள் இதிலுள்ளன. இசையில் நேரடித் தொடர்பு என்றில்லாமல் சமூஹ வாழ்வின் நெறிமுறைகளை விரும்பும் ஒருவர் கூட, வியக்கும் சில விவரங்கள் அடங்கிய தொகுப்பு இது என்றே நினைக்கிறேன். உதாரணமாக மஹா வைத்தியநாத ஐயரைப் பற்றி எழுதுகையில், அவரின் குரல் வளம், மேதாவிலாஸம், கடினமான தாள வகைகளில் கூட அவர் கொண்டிருந்த லாகவம் (லாவகம் அல்ல) பற்றிச் சொல்வதோடு, மூன்று ஆக்டேவ்களிலும் சுலபமாகப் பாடுவது, ஒளி பொருந்திய முகம், சிவபக்தி, பிற மாதரை சகோதரியாக எண்ணும் பாங்கு, பழகுவதற்கு எளிமை, பெரியவர்களிடத்தில் மரியாதை’ என்று அவரின் அரிய குணங்களை சிலாகிக்கிறார்.
பட்டணம் சுப்ரமணிய ஐயர் பாட்டு – அவர் மைத்துனர் ஃபிடில் – நன்னுமிய்யா சாஹிப் டோலக் என்ற காம்பினேஷனில் இவர் கேட்ட கச்சேரியைப் பற்றிச் சொல்கிறார். பட்டணம் சுப்ரமணிய ஐயர் ஒரு சாஹித்ய கர்த்தாவும் கூட. அதில், வெங்கடேச என்ற அவர் முத்திரை இல்லாவிடில் தியாகராஜ கீர்த்தனை போலவே இருக்குமாம். அவ்வளவு உசத்தி என்கிறார். நன்னுமிய்யா முஹம்மதியர். டோலக்கில் அவருக்கு இணை அவரே. சாதாரண பாடகரின் பாட்டு கூட இவர் வாசித்தால் எங்கேயோ போய்விடுமாம். Fast tempo phrases - மேல்காலச் சொற்கள் எனப்படும் ஃபரன் வகைகளில் புகுந்து விளையாடுவாராம்.
நாராயணஸ்வாமி அப்பா (மிருதங்கம்) வாசிப்பும் அப்படித்தான். லக்ஷிய-லக்ஷண ஞானங்களின் Perfect blend-ஆக இருந்தவர். மீட்டு, சாப்பு, தொப்பி எனப்படும் இடந்தலையின் சப்த விசேஷம், கும்கியின்(Gumki) நாதம் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவர். முதலில் அரசாங்க உத்யோகத்தில் இருந்திருக்கிறார். உடலில் எங்கும் அனாவசிய அங்க சேஷ்டைகள் இல்லாமல், விரல்களைப் பார்த்தால் தான் மிருதங்கம் வாசிப்பதாய்த் தெரியுமாறு வாசிப்பாராம். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் இல்லத்தில் பஜனை மஹோத்சவம் நடைபெறும். அவரே பாடியபடி வாசிப்பாராம்; ஜனங்கள் வசீகரிக்கப்பட்டு கட்டுண்டு கிடப்பராம். தந்தி வாத்யங்களுக்கு வாசிப்பதிலும் விசேஷ நிபுணர்.
மேல்கால ஃபரன்கள் எப்படி விர்ரென்று இருக்கும், அதிலும் ஏதோ வண்டிச்சக்கரத்தில் சாட்டையைக் கொடுத்தது போல வறண்ட சப்தமாக இல்லாமல், பரபரவென்றும் க்ளாரிட்டியின் உச்சத்திலும் அதோடு மிருதங்க நாதமுடன் அவற்றை எப்படி வாசிக்கலாம் என்பதற்கு வாழும் உதாரணமாக இருக்கும் என் மதிப்பிற்குரிய குருநாதர் சங்கீத கலாநிதி பத்மவிபூஷன் உமையாள்புரம் ஸ்ரீ சிவராமன் சார் வாசித்த நிமிட க்ளிப்பிங் (00:00 to 01:45) பார்த்துக் கேட்டு உணரலாம். திஸ்ர கதியில் வரும் மேல்காலச் சொற்கள் பிரமிக்க வைக்கும். பிறிதொரு சமயம் towards climax in a thani Avartham -ல் அவர் அள்ளித்தெளிக்கும் வர்ணஜாலங்கள் கொண்ட மேல்கால ஃபரன்களைப் பதிவேற்றம் செய்கிறேன். இப்போதைக்கு, fast tempo phrase என்பதன் அறிமுகமாக இது இருக்கட்டும்.
குன்றக்குடி கிருஷ்ணய்யர் தன் வித்வத் பலத்தால் அடிக்கடி பிற வித்வான்களிடம் வாதம் செய்வாராம். இப்போது பிரபலமாயிருக்கும் ஒரு பல்லவியின் வரியிலேயே இரண்டு அல்லது நான்கு ராகங்கள் என்ற முறையை அறிமுகப்படுத்தியதும் இவர் தானாம். உதாரணமாய், சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி, தர்பாருக்கு என்ற ஒரு வரியிலேயே, சங்கராபரணம், தோடி, கல்யாணி, தர்பார் என நாலு ராகங்கள் இருக்கும். அதோடு, நாட்டைக் குறிஞ்சி என்பார் – சிறந்த எங்களது (நாட்டை…) என்று பாடுவர். அதை நாட்டைக்குறிஞ்சி என்ற ராகத்தில் பாடி, பின்னர் நாட்டையிலும் (மஹா கணபதிம் ராகம்), குறிஞ்சியிலும் (சீதா கல்யாண வைபோகமே) பாடுவர்.
ராமனாதபுரம் சமஸ்தானத்தில் ஒரு முறை பல வித்வான்கள் முன்னிலையில், நிறைய சொற்களைக்கொண்ட ஒரு பல்லவியை மஹா வைத்தியநாதரிடம் பாடிக்காண்பித்து இதைப் பாடவேண்டும் என்றாராம்.
‘இன்னொரு முறை பாடிக் காண்பியுங்கள்’
‘இந்த சாதாரண பல்லவியை இன்னொரு முறை சொல்லவேண்டுமோ’
‘பல்லவியாய் இருந்தால் மறுமுறை சொல்ல அவசியம் இல்லை. ஆனால், இது தமிழில் உள்ள கட்டளைக் கலித்துறை’, என்றாராம் மஹா வைத்தியநாத ஐயர். அந்த அளவிற்கு மொழி வன்மை மிகுந்து இருந்திருக்கிறது அவர்களிடத்தில். நாம் ஈஸியா எழுதலாம் வெண்பா என்றால் கூட, ‘இருக்கட்டும், that’s not my cup of tes you know.. ஃப்ரீயா விடு’ என எண்ட்டர் கவிதையெதி, சில பல எழுத்தாளர்களையும் நண்பர்களையும் அதில் டேக் செய்து ப்ராணனை வாங்கி மகிழ்ந்துகொள்கிறோம்.
அண்டமீன் சிவராம பாகவதரைப் பற்றிய குறிப்பில் அண்டமீன் என்பது ஊரா எங்கிருக்கிறது என்றும் சேர்த்திருக்கலாம். அண்டம் ஈன்ற என்பதுதான் அப்படித் திரிந்ததா தெரியவில்லை. பந்தணைநல்லூர் வீருசாமி அவர்களின் நாதஸ்வரம் தேன் பாலையெல்லாம் விட இனிமை, பட்டமரம் பாலாயுருகும் என்பதை இவர் வாசிப்பில் அறியலாம், சீவாளியில் ஷட்ஜம் பஞ்சமம் சேர்த்தவுடனேயே ஜனங்கள் மெய் மறப்பார்களாம். அகந்தை அற்றவர்.
மான்பூண்டியா பிள்ளை பற்றிக் குறிப்பிடுகையில் அவர் லயஞானத்தைச் சொல்வதோடு, லக்ஷக்கணக்கான ரூபாய்கள் சம்பாதித்து சிவனடியார்களுக்கும் நண்பர்களுக்கும் செலவு செய்தார் எனக்கூறுகிறார்.
திருமருகல் நடேசன் அவர்கள் நாதஸ்வரம் இசைத்தால் ப்ரக்ஞை உள்ளவரும் அற்றவரும் கூட கேட்டுமகிழ்வராம். ராகத்தின் ஸ்வரூபத்தை தரிசிக்க வைப்பார். மன்னார்குடி பக்கிரியா பிள்ளை அவர்களும் பிரசித்தமாயிருந்தாராம். காரைக்குடி நகரத்தார்கள் இருவரும் சேர்ந்து வாசிக்குமாறு ஒரு கச்சேரி ஏற்பாடு செய்தனர்.
இனியொருவர் வாசிக்க ஏதும் சங்கதிகளில்லை எனும் வகையில் பக்கிரியா பிள்ளை கீரவாணி ராகத்தை வந்தது வராமல், அதிவேக மனோவேக பிருகாக்களையும் புகுத்தி வாசிக்க, நடேசப் பிள்ளை சீவாளியை வைத்து ஆரம்பித்ததுமே அந்த நாதத்தில் மெய்மறந்தனராம் மக்கள். பக்கிரியா பிள்ளையும் அளவற்ற மகிழ்ச்சியுடன், ‘ அண்ணன் அவர்கள் பூர்வ புண்ணியத்தால் அடைந்திருக்கும் ஊற்றின் பெருமையை, ஒருவராலும் ஜெயிக்க முடியாது’ என்றாராம்.
விஷ்ணு பாவா – மராட்டிய ஹரிகதை வல்லுனர். வட தேசத்திலிருந்து தஞ்சை வந்த ராமச்சந்திர பாவாவின் புதல்வர். அந்த பாஷை தெரியாதவர்களும் கேட்டு இன்புறும் வகையில் இருக்குமாம். ஹரிகதையில் மிருதங்கம் வாசிப்பவர் பெஞ்சில் அமர்வது, பின் பாட்டு பாடுபவர்களை ஜோடியாய் பின் நிறுத்தி நாதம் சிதறாமல் ஒலிக்களன் அமைத்து கதை சொல்லும் முறை இவர்கள் தான் நிலைநாட்டினார்களாம். கச்சேரி போல் கையினால் தாளம் போடாமல் வெண்கல தாளம் போட்டு, அதிலும் ஏழு அடி தாளம், உசி முதலான எளியவகைகளில் லயத்தை அமைத்துக்கொண்டு பாடியதும் இவர்கள் தானாம். அதற்கு முன்பு, ஏகப்பட்ட பின் பாடகர்கள் நிறைய ஜாலர்கள் இருக்குமாம். நின்றபடியே ஐந்தாறு மணிநேரங்கள் கதை சொல்வார்களாம்
இன்னும் நாமக்கல் நரசிம்ம ஐயங்கார், வீணை தனம்மாள், மஹாதேவ நட்டுவனார், அணஞ்ச பெருமாள் பிள்ளை (ஹரிச்சந்திர நாடகக் காலாட்டம்-என்று குறிப்பிடப்பட்டுள்ளது, நாட்டிய நாடக வகையா என்று தெரியவில்லை), கீவரூர் கந்தன் (நாதஸ்வரம்), டைகர் வரதாச்சாரியார், கந்தபுராணக் கீர்த்தனைகள் அருணாசலக்கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகளை நிறையப் பாடிய ஆளுடையார்கோயில் ஆத்மனாத பாரதி, பதினைந்து மண்டபம் சாம்பசிவ ஐயர் (ஃபிடில்) என்று நிறைய வித்வான்களைப் பற்றிய குறிப்புக(ழ்)ள்.
இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு கலைஞருக்குமே ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு விஷயங்கள் இருந்திருக்கலாம். எனினும், இக்குறிப்புகளாவது கிடைத்த மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் எந்த வருடத்திலிருந்து எது வரை வாழ்ந்தனர் என்ற விவரங்களைக் குறிப்பிட்டிருக்கலாம். பிற்சேர்க்கையாக இதில் உள்ள தாரதம்மியம் (சமநிலையற்ற, வித்யாசம்), உபக்ரமம் (ஆரம்பித்தல்), துரியாச்ரமம்(கடைசி ஆசிரமம்-சன்யாசம்), சிரம மன்னியில் (effortlessness), நைபுண்யம் (நிபுணத்துவம்) பழையகால சொல்லாடல்களுக்கு என்ன பொருள் என்று ஒரு glossary போட்டிருக்கலாம்.
கிடைக்குமிடம்: M.Ram Mohan, 11-B, Surya Apartments, 18, Balaih Avenue, Luz, Mylapore
Chennai – 600004 or The Karnatic Music Book Centre. (தமிழிலும் ஆங்கிலத்திலும்)
No comments:
Post a Comment