எப்படி ஜெயித்தேன்?
ஆசிரியர்: எம்.ஜி.ஆர்
நாதன் பதிப்பகம்.
பக்கங்கள்: 88
விலை: ரூ.50
***
எனக்குத் தெரிந்த மென்பொருள் நிறுவன உதாரணங்களிலிருந்து சொல்றேன். ஒரு திட்டம் ஆரம்பிக்கப் போறாங்கன்னா, அதுக்கு சிலபல பேர் தேவைப்படுவார்கள். மேலாளர் என்ன பண்ணுவார்னா, நிறுவனத்தில் சும்மா இருக்கும் - ஆனா தகுதியுடைய சிலருக்கு தொலைபேசி, இந்த மாதிரி திட்டம் இருக்கு. நீங்க வந்து வேலை செய்தீங்கன்னா, உங்களுக்கும் நல்லது. வருங்காலத்தில் இப்படி இப்படி ஆகலாம்னு, குதிரைக்கு முன் கேரட் காட்டுவது போல் காட்டி, ஆள் சேர்ப்பாரு. ஒருவழியா ஆட்கள் சேர்ந்து, திட்டமும் துவங்கிடும். பிறகு அவர் கண்லேயே படமாட்டாரு. குழுத்தலைவர்களே திட்டியவாறு, வேலை கொடுத்து, வேலை வாங்கி ஒப்பேத்திடுவாங்க. திட்டமும் முடிஞ்சிடும். ஒரு வேளை நல்லவிதமா முடிஞ்சிடுச்சுன்னாதான் விளையாட்டே இருக்கும். அந்த பலனை யார் அடைவது? அப்போதான் திட்ட மேலாளர் மறுபடி ‘எண்ட்ரி’ கொடுப்பாரு. மொத்த பெருமையையும் தானே எடுத்துக்கிட்டா நல்லாயிருக்காதேன்னு குழுவில் உள்ள (அவருக்கு மிகப் பிடித்த) சிலருக்கு பாராட்டுகளை அள்ளி வீசுவாரு. அதுக்குப் பிறகு, இவர்களை சுத்தமா மறந்துட்டு அடுத்த திட்டத்திற்கான அடுத்த செட் ஆட்களைத் தேடி ஓடுவாரு. இப்படியெல்லாமா நடக்கும்னு கேட்கக்கூடாது. கண்டிப்பா இப்படித்தான் நடக்கும்(!!).
நாடோடி மன்னன். MGR. கதைக்கு உதவி செய்து, இரு வேடங்களில் நடித்து, இயக்கி, தயாரிக்கவும் செய்த படம். படம் நன்றாக ஓடினால் நான் மன்னன், ஓடவில்லையென்றால் நாடோடி என்று சொன்னாராம். ஆனால், படம் சூப்பர் ஹிட். அதன் வெற்றி விழாவில், வாத்யார் பேசிய பேச்சின் விவரம்தான் இந்தப் புத்தகம். மொத்தம் 23 கட்டுரைகள். முதல் பதிப்பே நவம்பர் 2012ல்தான் வந்திருக்கிறது. ஏன் இவ்வளவு தாமதம்? தெரியவில்லை. போகட்டும். முதல் பாராவில் ஒரு மேலாளரைப் பற்றி பார்த்தோம். அதைப் போலவே செய்தாரா MGR? யாரையெல்லாம் நினைவு கூர்ந்தார்? யாருக்கெல்லாம் நன்றி கூறினார்? மேலே படிங்க.
1937-38ல் வாத்யார் கல்கத்தாவில் ஒரு படம் பார்த்தாராம். If I were King. அப்போதே இந்த படத்திற்கான (நாடோடி மன்னன்) கருப்பொருள் அவருக்கு தோன்றிவிட்டதாம். பிறகு இந்தப் படத்தை உருவாக்க முற்பட்டபோது, இது ‘The Prisoner of Zenda' படத்தின் தழுவல் என்று பேசப்பட்டதாம். ஆனால் அது நிஜமில்லை, அந்த படத்திற்கும் நாடோடி மன்னனிற்கும் உள்ள (ஆறு!) வித்தியாசங்கள் என ஒரு பட்டியலைக் கொடுக்கிறார். இன்னொரு விஷயம்: இதே போன்ற கதையுடன், இன்னொரு படத்தை நடிகை பானுமதி எடுத்துக் கொண்டிருந்தாராம். அதைக் கேள்விப்பட்ட MGR பேசப் போனபோது பானுமதி என் படத்தை நிறுத்திவிடுகிறேன், நீங்களே தொடர்ந்து எடுங்கள் என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டாராம். பின்னர் அவரையே இந்தப் படத்திலும் நடிக்க வைத்தார் MGR.
ஏகப்பட்ட பேர்களுக்கு நன்றிகள் சொல்கிறார். படத்தின் துவக்கத்திலிருந்து வேலை செய்தவர்கள், நடுவில் வந்து சேர்ந்தவர்கள், நடுவில் விட்டுப் போனவர்கள், வேலை செய்தவர்களுக்கு உதவி செய்தவர்கள் என எவரையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு கடைநிலை பணியாளரையும் பேர் சொல்லி குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கிறார்.
உதாரணத்திற்கு சொல்லப் போனால், படத்தின் ஒளிப்பதிவாளரான இராமுவிற்கு வண்ணத் திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு பயிற்சி கிடையாது. ஆகவே அவர் MGRஇடம் வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளவும் என்றிருக்கிறார். அதற்கு MGR, நீங்களே கற்றுக் கொண்டு எடுங்கள், அப்படியில்லையென்றால் இந்தப் படம் கருப்பு-வெள்ளையிலேயே இருக்கட்டும் என்றாராம். திறமைக்கு மதிப்பு கொடுக்கும் நல்ல பண்பை வாத்யார் வெளிப்படுத்தியதற்கான சம்பவம் இது. இதே போல் ஒலிப்பதிவும். மேனன் என்பவர் செய்த ரிகார்ட்டிங்கில் திருப்தியுற்ற MGR அவரையே ரீ-ரிகார்டிங் செய்ய வைத்தாராம். பொதுவாக மிகுந்த திறமையுள்ள யாரையாவது வைத்தே செய்யப்படும் அந்த வேலையை மேனன் மேல் வைத்த நம்பிக்கையால் அவரையே வைத்து செய்து முடித்தாராம்.
இப்படியே நம்பியார், M.N.ராஜம், சரோஜா தேவி, சந்திரபாபு, P.S.வீரப்பா இன்னும் பலருடன் வேலை பார்த்த அனுபவத்தைச் சொல்லி அவர்களை பெருமைப்படுத்துகிறார் தலைவர். பலரது கூடவே ஸ்டூடியோ & மற்ற உபகரணங்களைக் கொடுத்து உதவிய நாகிரெட்டி, வாசன் ஆகியவர்களுக்கும் நன்றி கூறுகிறார்.
புத்தகத்தின் கடைசி கட்டுரை, MGRயும், திரைப்படத்தையும் புகழ்ந்து அறிஞர் அண்ணா பேசிய பேச்சு.
88 பக்கங்களே கொண்ட சின்ன புத்தகம்தான். ஆனால் வாத்யாரைப் பற்றி அறிந்து கொள்ளவும், வெற்றியாளர்களிடம் இருக்கவேண்டிய பண்பு பற்றி தெரிந்து கொள்ளவும், படிக்க வேண்டிய புத்தகம்.
***
No comments:
Post a Comment