சி.சு.செல்லப்பா பற்றி கடந்த சில
மாதங்களாகவே நிறைய கட்டுரைகளைப் பார்க்கிறோம். சொல்வனத்தில் வெங்கட் சாமிநாதன் எழுதிவரும்
சி.சு.செல்லப்பா ஒரு வாமனாராத நிகழ்வு என்ற தொடர் அவற்றுள் முக்கியமானது. இந்தக் கட்டுரைகள்
எல்லாம் சி.சு.செல்லப்பா என்ற மனிதரையும் இலக்கியத்தில் அவர் எவ்வளவு தீவிரமாக சமரசம்
இன்றி செயல்பட்டார் என்பதைச் சொல்வதாகவே இருக்கின்றன. ஆனால், சி.சு.செல்லப்பாவின் படைப்புகளில்,
வாடிவாசல் தவிர்த்து மற்ற படைப்புகள் பரவலாக அறியப்படவில்லை. இந்த புத்தகத்தின் பின்னால்
கொடுக்கப்பட்டிருக்கும் நாவல்களும் எண்ணற்ற சிறுகதைகளும் இன்றைக்கு வாசித்து விவாதிக்கப்படுகிறதா
என்பது சந்தேகமே. இதே நிலை தான் க.நா.சுவின் படைப்புகளுக்கும் என்று நினைக்கிறேன்.
அவருடைய பொய்த்தேவு பெரிதும் வாசிக்கப்படுவது தெரியும். ஆனால், அசுரகணம், ஒரு நாள்,
கோதை வந்தாள் இன்னும் பல நாவல்கள் பரவலான வாசிப்புக்கு வரவில்லை. இப்போது நற்றினை பதிப்பகம்
க.நா.சுவின் நாவல்களைப் புதிய பதிப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள்.
காலச்சுவடு வெளியிட்டிருக்கும்
வாடிவாசல் பதிப்பின் முன்னுரையில் எழுத்தாளர் பெருமாள்முருகன், “இன்றைய பார்வையில்
அவருடைய படைப்புகளைத் தயக்கத்தோடு மறுதலிக்கும் ஒரு உத்தியாகச் சிறுபத்திரிகைத் தியாகம்
முன்னிறுத்தப்படுகிறது. எனினும் அவருடைய படைப்புகளைப் பொருட்படுத்தும் பேச்சே அவற்றைவிட
அர்த்தமுடையதாக இருக்கும்” என்கிறார். அவருடைய படைப்புகள் அதிகம் பேசப்படாமல் இருப்பதற்கு
‘தயக்கம்’ காரணமா என்று தெரியவில்லை. சரியான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.
வாடிவாசல், 1959ல் எழுதப்பட்ட
இயல்பான கதை. இயல்பான கதை என்றால்? வாடிவாசல் தத்துவங்களைத் தேடவில்லை, மனிதனுடைய மனவோட்டத்தையும்
அதன் சிக்கல்களையும் சொல்ல முற்படவில்லை, சமூகத்தைப் பற்றிப் பேசவில்லை. இன்றைக்கு
அந்தக் குறுநாவலை நாம் வாசிக்கும்போது அது அன்றைய சமூக நிலைகளை (ஜமீந்தாருக்கு
இருக்கும் மரியாதை, ஜமீந்தாரிடம் பிச்சி காட்டும் மரியாதை) நாம் கண்டுபிடிக்கலாம்.
ஆனால், இந்தக் குறியீடுகளை வேண்டுமென்றே செல்லப்பா செலுத்தியிருப்பார் என்று நினைக்கத்
தோன்றவில்லை. இணையத்தில் ஒருவர் (பேயோன் என்று தான் நினைக்கிறேன்), மூல ஆசிரியர்களைவிட
உரையாசிரியகளுக்குத் தான் கற்பனா சக்தி அதிகம் இருக்கிறது என்பது மாதிரி சொல்லியிருந்தார்.
இங்கே எழுதும் போது கூட எனக்கு அந்த விதமான சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த முழு பத்தியே முதலில் எழுத வேண்டும் என்ற திட்டத்தில் இல்லை. ஆனால், அதுவாக வந்து
விழுகிறது. நாளைக்கு இதைப் படித்துப் பார்த்தால் நான் தான் எழுதினேனா என்று என்னால்
உறுதியாகச் சொல்லமுடியாது.
வாடிவாசலின் மையம் சம்பவங்களைக்
காட்சிப்படுத்துவதாகவே இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தைப் பற்றிய விவரணைகளோடு
கதை தொடங்குகிறது. அப்படியே நாவல் முழுவதும்
இருந்திருந்தால் படிக்க சோர்வாக இருந்திருக்கும். ஆனால், அதன் பின் கதை இரண்டு குரல்களாக
மாறுகிறது. நடக்கும் சம்பவங்களை செல்லப்பா காட்சிப் படுத்திக் கொண்டே போகையில், கிழவனார்
– பிச்சியினுடன் நடத்தும் உரையாடல் மூலம் – நமக்கு கதை சொல்கிறார். கதையென்பது இங்கே
சாதாரணமானது. தன்னுடைய காட்சிப்படுத்துதலில் செல்லப்பா ஆச்சரியப்படுத்துகிறார். செல்லப்பாவுடைய
வேலை கிட்டத்தட்ட ஒரு விளையாட்டு அறிவிப்பாளருடையது. செல்லப்பாவினுடைய எழுத்து நடை,
மொழி விவரணைகள் ஜல்லிக்கட்டை நம் கண்முன்னே கொண்டுவருகிறது. பாளையூர் காளையை பிச்சி
அடக்குவதை விவரிக்கும் பத்திகளில் செல்லப்பா ஜல்லிக்கட்டு வல்லுநர் போல எழுதுகிறார்.
உண்மையில் ஜல்லிக்கட்டை நேரில் பல வருடம் பார்த்தவர்கள் செல்லப்பா எந்தளவுக்கு நிஜ
ஜல்லிக்கட்டை எழுத்தில் கொண்டுவந்திருக்கார் என்பதைச் சொல்லமுடியும். பிச்சி காரி காளையை
அடக்குவது தான் நாவலின் உச்சம். இவ்விரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு இந்நாவல் செல்லப்பாவின்
மாஸ்டர் பீஸ் என்று சொல்லிவிடலாம்.
முன்னுரையில் பெருமாள்முருகன்,
“ராஜமய்யரின் ‘கமலாம்பாள் சரித்திர’த் தாக்கத்தால் கூட’வாடிவாசல்’ உருவாகியிருக்கலாம்.”
என்கிறார்.
எழுத்து பத்திரிக்கையின் முதல்
இதழில் செல்லப்பா, ராஜமய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’ பற்றி எழுதியிருக்கிறார். ஒரு
நல்ல கட்டுரை. ஆரம்பத்திலேயே “கமலாம்பாள் என்ற ஒரே நாவலின் மூலம் சென்ற நூற்றாண்டின்
சிறந்த நாவலாசிரியர் என்ற புகழ் ஒரு முகமாகக் கிடைக்கப்பெற்ற நாவலாசிரியர் பி.ஆர்.ராஜமய்யர்”
என்கிறார். இந்தக் கட்டுரையில் ‘கதை’ என்று தலைப்பிட்டு கதைச் சுருக்கத்தைக் கொடுக்கிறார்
செல்லப்பா. ‘ஆம்னிபஸ் என்பது கதைச் சுருக்கம் வெளியிடும் தளமா?” என்று கேட்டவர்களுக்கு
இது தான் பதில். கமலாம்பாள் சரித்திரத்தில், கதையின் ஒரு திருப்பத்தில் ஜல்லிக்கட்டு
வருகிறது போல. கமலாம்பாள் சரித்திரத்தையும் வாடிவாசலையும் தவிர்த்து ஜல்லிக்கட்டு பற்றிப்
பேசும் கதை ‘வீரம்மாளின் காளை’ என்று பெருமாள்முருகனின் முன்னுரை மூலம் அறிய முடிகிறது.
வாடிவாசல் பற்றி இணையத்தில் தேடிக்
கொண்டிருந்த போது விதானம் என்ற தளத்திற்கு கூகுள் இட்டுச்சென்றது. ரஞ்சித் பரஞ்சோதியின்
வலைதளம் அது. அவர் வாடிவாசலைப் படித்துவிட்டு, ஓவியமாகத் தீட்டியிருக்கிறார். காரி
காளையின் முன்னால் எப்படி பிச்சி விழுந்து கிடந்ததாக செல்லப்பா சொல்கிறாரோ அப்படியே
அதை ஓவியத்தில் கொண்டுவந்திருக்கிறார். அருமை!
http://vidhaanam.wordpress.com/ |
ரஞ்சித் பரஞ்சோதி சொல்புதிது என்ற
தளத்திலும் எழுதுகிறார். விதானமும் சொல்புதிதும் தொடர்ந்து வாசிக்கவேண்டிய வலைதளங்கள்.
வாடிவாசல்
சி.சு. செல்லப்பா
காலச்சுவடு பதிப்பகம்,
பக்கங்கள் 70, விலை ரூ.50
அறிமுகமே கடுமையாக இருக்கும் பட்சத்தில் கதை என்ன பாடுபடுத்துமோ.. !?
ReplyDelete