சிறப்பு பதிவர் : மாதவ சோமன்
கடந்த நாற்பத்து சொச்ச வருடங்களில் தம் எழுத்தில் சுஜாதா நடையின் பாதிப்பு இல்லாமல் எழுதவல்ல வாசக எழுத்தாளர்கள் இங்கே அபூர்வாபூர்வம். (ஹப்பா…. கடைசியாக நானும் இந்த வழமையான பத்தியை ஒருமுறை எழுதிப் பார்த்துவிட்டேன் )
கணையாழி இதழின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா (1968 முதல் 1993 வரை) எழுதிய நூற்று (அல்லது இருநூற்று) சொச்ச கட்டுரைகளில் நாற்பது கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து ‘குமரிப் பதிப்பகம்’ 1993’ல் வெளியிட்ட புத்தகமே இது.
கணையாழி இதழின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா (1968 முதல் 1993 வரை) எழுதிய நூற்று (அல்லது இருநூற்று) சொச்ச கட்டுரைகளில் நாற்பது கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து ‘குமரிப் பதிப்பகம்’ 1993’ல் வெளியிட்ட புத்தகமே இது.
கணையாழியின் கடைசிப் பக்கங்கள் பற்றிப் பலமுறை பல இடங்களில் படித்திருந்தாலும் இப்போதே நான் முதல்முறை அவற்றை ஒரு தொகுப்பாக வாசிக்கிறேன். விகடனில் சக்கை போடு போட்ட ”கற்றதும் பெற்றதும்” தொடரின் மூதாதைக் கட்டுரைகள் என இவற்றைச் சொல்லலாம். விகடனில் எழுதியதைவிட இன்னமும் சுதந்திரமாக கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சுஜாதா எனத் தோன்றுகிறது. உ.ம்.: தன் பார்வையில் கதை சொல்லாமல், “அவன், இவன்” பாணிக் கதைகளை சுஜாதா அடிக்கும் நக்கல் (1968’ல் எழுதிய கட்டுரை).
கற்றதும் பெற்றதும் ஸ்டைல் என்றதுமே புரிந்துகொள்ளலாம். தொடருக்கு ஒரு குறிப்பிட்ட அப்ஜக்டிவ் என்று இல்லாமல் இசை, புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ,, இலக்கியம் (பழங்கால இலக்கியம், நிகழ்கால அடிதடி இலக்கியம் – இரண்டுமே), அறிவியல், அரசியல், கணினி, கணினித் தமிழ், சினிமா, விருதுகள், சொந்தக் கதை, இன்னபிற, இன்னபிற என்று ஆல் ரவுண்ட் பர்ஃபார்மன்ஸாக எல்லாவற்றையும் தொட்டுப் போகிறார்.
எண்பதுகளின் இறுதியில் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டு படுத்த படுக்கையாய் இருந்தபோது விவிதபாரதியில் கேட்ட தமிழ்ப் பாடல்களின் நிலைமை பற்றின சுஜாதாவின் பார்வையை இன்றைய இணையராஜா ரசிகர்கள் வாசிக்காமல் கடந்து போதல் நலம் எனும் எச்சரிக்கைத் தொடக்கத்தோடு மற்ற விஷயங்களைப் பார்ப்போம். (ப்ரூஃப் ரீடர் அது என்ன என்று கேட்கிறார். அஸ்கு புஸ்கு. நீங்களே புக்கு வாங்கிப் படித்துக் கொள்ளவும்).
புத்தகத்தில் பரவலாகப் பார்த்தால் பாசுரங்கள், குறுந்தொகை, கவிதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் (உ.ம்.: பதினைந்து பைசாவுக்கு முப்பது பாட்டு எழுதின மணவூர் முனுசாமி), புதுக்கவிதை, தளை தட்டல், கடைசியாக ஹைக்கூ என்று நிறையவே இந்தவகை இலக்கியத்திற்கு நிறைய இடம் ஒதுக்கியுள்ளார் சுஜாதா. அவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ஹைக்கூவை வைத்தே நிறைய அத்தியாயங்களில் ஜல்லியடி (சுஜாதா ரசிகர்காள் மன்னிப்பார்களாக). ஹைக்கூ எழுதும் உத்வேகம் வருகையில் ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து எழுத எழும் ஆவலை அடக்கிக் கொள்ளவும் என்று அட்வைஸ் சொல்லவும் தயங்கவில்லை (மீண்டும் ஜல்லியடி?).
கண்ணீரில்லாமல் யாப்பு என்ற ப்ராஜக்டிற்காக மரபுக் கவிதை சேர்ந்து கற்கலாம் வாரீர் என்று விடப்பட்ட அழைப்பிற்கு ‘அமோக” வரவேற்பு கிட்டியதாக ஆரம்பிக்கும் கட்டுரை சுய எள்ளலுக்கு நல்ல உதாரணம், அதற்கு ஏழு ரிப்ளைகள் கிட்டின என்று அடுத்த பத்தியில் சொல்கிறது. அந்த ஏழிலும்கூட ஒருத்தர் கணையாழி சந்தா பற்றித்தான் எழுதினாராம். மீதமிருந்த ஆறும் தளை தட்டோ தட்டோவென்று தட்டி வந்த கவிதைகளாகிப்போக எல்லாமே ரிஜக்ஷன் என்றாகிப் போய் ப்ராஜக்ட் க்ளோஸ் செய்யப்பட்டது போலும்.
இந்த ப்ராஜக்டிற்கு சுஜாதா நியமித்த தலைவர் “விருத்தம்” விசுவநாதன் யார் என்றும், அவர் இப்போது என்ன பண்ணுகிறார் என்று அறிய ஆவல். நம்ம இலவச கொத்தனாருக்கு (அட்லீஸ்ட், மானசீக) பெரியப்பாவாக இருப்பாரோ என்பது என் அனுமானம்.
மணிரத்னத்தின் ”அஞ்சலி” படம் பார்த்துவிட்டு அதை அசட்டுப் படம் என்கிறார் சுஜாதா. இப்படிப்பட்ட ப்ரேக் டான்ஸ் ஆடிக்கொண்டு மட்டும் இருக்கும் அபார்ட்மெண்ட் குழந்தைகள் (1990’ல்) எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வியும். ”காயத்ரி” காலத்தில் இருந்து (அ) அதற்கு முன்னதாகவே இருந்து, தமிழ் சினிமா உலகுடன் தொடர்புடன் இருந்தவருக்கு அஞ்சலி படம் புரியாமல் போனது ஆச்சர்யந்தான். அதே சுஜாதா அடுத்த பத்து வருஷ காலத்தில் ”பாய்ஸ்” போன்ற படத்தில் பணியாற்றியதை ‘காலத்தின் கோலம் எனலாமா தெரியவில்லை.
90’களில் கணையாழிக்கு பதினோரு கட்டளைகள் விடுக்கும் ஒரு கட்டுரையில், “எழுதுபவர்களுக்குப் பணம் தர வேணும்” என்று ஒரு கட்டளை (அல்லது வேண்டுகோள்). இலக்கிய உலகை எண்ணிச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
பாரதியின் ஒருநாள் காலை நிகழ்வுகளைக் கவிதை வடிவில் பாரதிதாசன் பதிவு செய்ததைக் குறிப்பிட்டு பாரதிதாசனின் கவிதை லகு பற்றிச் சொல்லும் கட்டுரை மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.
அகாடமி விருது வாங்கியதும் நம் எழுத்தாளர்கள் ‘தவிர்க்கத்தக்கன’ என்று சுஜாதா குறிப்பிடுவதை விடவும், குறிப்பிடும் விதம் “க்ளாஸ்”. <இது என்ன எனும் ப்ரூஃப் ரீடரின் கேள்விக்கேனும் பதில் சொல்லிவிடுகிறேன் – ஜஸ்ட் ஷட் அப்’தான். வேறென்ன? >
சுஜாதாவின் ஃபேவரிட் லிஸ்டில் பாவண்ணன் இருப்பது சந்தோஷம். ஆ.மாதவனும் இருக்கிறார். நாற்பது கட்டுரைகளில் ஜெயமோகனின் ”பல்லக்கு” சிறுகதை பற்றி இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறார்.
அப்புறம்…. இப்படி எழுதிக் கொண்டே போக நாற்பது கட்டுரைகளில் நானூறு விஷயங்கள் உண்டு. இது போன்ற புத்தகங்களின் சிறப்பு என்னவென்றால் புத்தகத்தை எங்கு வேண்டுமானாலும் திறந்து படிக்கும் வசதி நமக்குத் தன்னாலே அமைந்து விடுகிறது.
பிச்சுப் பிச்சு நிறைய விஷயங்களை வாசிக்க எளிதான வகையில் சொல்லிக் கொண்டே போகும் இந்தவகை சுஜாதா புத்தகங்கள் நம்மை குறைந்தபட்சம் “jack of many trades” செய்யவல்லன.
புதிய பக்கங்கள் | சுஜாதா | குமரிப் பதிப்பகம் | 168 பக். | விலை. ரூ. 21/- (1993 பதிப்பு)
(இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளூம் மேலும் பல கடைசிப் பக்கக் கட்டுரைகளும் இப்போது உயிர்மை பதிப்பக வெளியீடாக கணையாழியின் கடைசிப் பக்கங்கள்” என்ற தொகுப்பாகவே கிடைக்கிறது. விலை இருநூறு ரூபாய்க்குக் குறையாமல் இருக்கக்கூடும் )
No comments:
Post a Comment