அமரர் சுஜாதா
கதைகளில் அவரது பாத்திரங்கள் ஏதாவது ஒரு புதிய புத்தகத்தைப் பற்றி சொல்வது
போலச் சித்தரிப்பார். புத்தகத்தைப் படிக்கும் வாசகனின் வாசிப்பை
விரிவுபடுத்தும் ஒரு அழகிய உத்தியாக அது இருந்தது. கணேஷ் ஏதாவது ஒரு புதிய
துப்பறியும் கதாசிரியரைப் பற்றிச் சொன்னால், உடனே அந்த கதாசிரியரை புத்தகக்
கடையில் தேடி (அந்த காலத்தில் கூகிள் எல்லாம் கிடையாது), வாங்கி வாசிப்பது
பழக்கமாகி இருந்தது. இப்படி, சுவாரசியமான நிகழ்வுகள் புத்தகப் படிப்பை மிக
ஜாலியாக வளர்த்தது காலப் போக்கில் மாறி விட்டது.
இப்போதெல்லாம் வாரக் கடைசிகளில், சில சமயம் TED என்ற அறிவார்ந்த
கருத்தரங்கு விடியோக்கள் பார்ப்பது ஒரு உருப்படியான பொழுது போக்காக
இருக்கிறது. அப்படி ஒரு வாரக் கடைசி மாலையில் பார்த்த விடியோ, ஒரு நல்ல
புத்தகத்தைப் படித்து மகிழ உதவியது. அனில் அனந்தஸ்வாமி என்பவர், படித்த பல
லட்சம் இளைஞர்களைப் போல மென்பொருள் துறையில் குப்பை கொட்டி வந்தவர். இவர்,
உலகின் மிகவும் ரிமோட்டான (சரியான தமிழ் வார்த்தை சிக்கவில்லை)
இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு விஞ்ஞானிகள் பிரபஞ்சம் பற்றிய
ரகசியங்களைத் தெரிந்து கொள்ள மனம் தளராமல் எப்படியெல்லாம் உழைக்கிறார்கள்
என்று ஆராய்ச்சி செய்து, விவரணப் படங்கள் எடுத்து வருகிறார் - 'The Edge of Physics'
இவர் அளித்த சுருக்கமான கருத்தரங்கு சொற்பொழிவு இங்கே…
இவர் குறிப்பிடும் மிக முக்கியமான புத்தகம், “The Universe and Dr.
Einstein” என்ற லிங்கன் பார்னெட் எழுதிய புத்தகம். ரஷ்யா, ஆர்ஜண்டினா,
அண்டார்டிகா மற்றும் வட துருவம் வரை பயணம் செய்து விஞ்ஞான உழைப்பாளிகளைப்
பற்றி ஒருவரை எழுதத் தூண்டிய புத்தகம் சாதாரணப் புத்தகமாக இருக்க முடியாது.
படித்துத்தான் பார்ப்போமே என்று தேடிப் பிடித்து படித்ததன் விளைவு,
இக்கட்டுரை!
ஐன்ஸ்டீனை பற்றிய புத்தகம் என்றவுடன் உங்களுக்கு தலை சுற்றுவது
புரிகிறது. ஐன்ஸ்டீனைப் பற்றிய பல புத்தகங்கள் வாசித்திருந்தாலும்,
அவருடைய ஒப்புமைக் கொள்கை (relativity theory) சற்று புரிந்தது போல
பட்டாலும், சில நாட்களுக்குப் பின் மறந்து விடும். நான் கல்லூரி நாட்களில்
ரஷ்ய பதிப்பாளர்கள், மீர் பதிப்பகத்தின் பல மோசமான ஆங்கில மொழிபெயர்ப்பு
நூல்களைப் படித்து குழம்பியதில் ஒப்புமைக் கொள்கை பற்றிய புத்தகமும் ஒன்று.
இந்தப் புத்தகம் மிகவும் பழையது, மிகவும் சிறியது. 1950 –க்கு முன்
வெளி வந்த புத்தகம். ஆனால், இந்த கொள்கையை மிகவும் எளிமையாக விளக்கும்
பணியில் வெற்றி பெற்றுள்ளது. கொஞ்சமே கொஞ்சம் பெளதிக அறிவு போதுமானது.
அதாவது, உயர்நிலைப்பள்ளி அளவே போதும்.
மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் இப்புத்தகம் மிக ஆழமான கருத்துக்களை
அழகாக விளக்குகிறது. ஐன்ஸ்டீனின் புராணம் எதுவும் கிடையாது. அவரது
சிந்தனையை மிகத் தெளிவாக விளக்குவது எழுத்தாளரின் நோக்கம்.
இப்புத்தகத்தில்
மிக நேர்த்தியாக விளக்கப்படும் விஷயங்களில் எனக்கு பிடித்த ஒன்று இடம்-நேர
தொடரகக் கொள்கை – Space Time Continuum. நாம் சாதாரண வாழ்க்கையில் –
சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஒருவர் இருந்தால் அவருக்கு வெற்றி
நிச்சயம் என்று சொல்கிறோம். நேரம் போனால் வராது என்று தத்துவம் பேசுகிறோம்.
ஆனால், ஒரு மணி நேரம் என்றால் என்ன?
உடனே, 60 நிமிடங்கள் ஒரு மணி நேரம் என்று பதில் வரும்.
சரி, ஒரு நிமிடம் என்றால் என்ன?
உடனே, 60 வினாடிகள் ஒரு நிமிடம் என்று பதில் வரும்.
இப்படி
பதில் சொல்லிப் பழகி, ஆரம்பக் கல்வியில் சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை
போல திருப்பிச் சொல்லும் நினைவு போட்டி போல நம் சிந்தனையாற்றலை மாற்றி
விட்டோம். ஐன்ஸ்டீன், இதையே அனுபவம் என்ற பெயரில் மனிதர்கள் செய்யும்
தவறுகள் என்று கருதினார்.
சற்று மாற்றி யோசிப்போம். ஒரு நாள் என்பது என்ன? 24 மணி நேரம் என்று
மட்டும் பதில் சொல்லாதீர்கள்! பூமி தன்னைச் சுற்றி வருகையில் ஒரு மணி
நேரத்தில் 1.000 மைல்களைக் கடக்கிறது. ஒரு நொடிக்கு சூரியனைச் சுற்றி 20
மைல்களைக் கடக்கிறது. இப்படி பூமி தன்னைத்தானே சுற்றி வரும் தூரத்தில் ஒரு
15 டிகிரி சுழற்சிக்கு என்ன பெயர் ? ஒரு மணி நேரம் – அவ்வளவுதான்! அதாவது
நேரம் என்பது வேறு ஒன்றும் அல்ல – இடமாற்றத்தின் அளவு, அவ்வளவுதான்! ஒரு
ஆயிரம் வருடங்களாக நேரமும் இடமும் வெவ்வேறாக நினைத்திருந்த உலகிற்கு
ஐன்ஸ்டீன் இப்படி ஒரு புதிய சிந்தனையை அழகாக முன் வைத்ததை நான் எந்த
புத்தகத்திலும் இவ்வளவு தெளிவாகப் படித்ததில்லை.
இதுபோல பல ஒப்புமைக் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்கள்
இப்புத்தகத்தில் மிகவும் எளிமையாக பார்னெட் விளக்கியுள்ளார். நியூட்டன்
மற்றும் கெப்லர் போன்றோரின் அசைக்க முடியாத கொள்கைகளை எப்படி அழகாக சவாலாக
எடுத்துக் கொண்டு பல சிந்தனை சோதனைகள் மூலம் (thought experiments)
ஐன்ஸ்டீன் நளினமான விடை கண்டார் என்பது புரியும்படி விளக்கியுள்ளது
எழுத்தாளரின் தனித்திறமை.
பிரபஞ்சம் பற்றிய அடிப்படை அறிவை சரியாக பெற்றுக் கொள்ளத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இது மிக அவசியமான புத்தகம்.
The Universe and Dr. Einstein | Lincoln Barnett | Dover Publications | 128 Pages | Rs.451 | இணையத்தில் வாங்க, வாசிக்க
மிகவும் சிறப்பான அறிமுகத்துக்கு நன்றி!
ReplyDeleteஇதுவரை ஐன்ஸ்ட்டீனின் Relativity தத்துவத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்களா என்று தெரியவில்லை? ஒரு நாள் என்பது 15 டிகிரி இடப்பெயர்வு என்று உங்கள் பதிவைக் கொண்டே நான் தெரிந்து கொண்டேன். Relativity பெரும்பான்மையினர்க்கு புரியாமல் போவது சொல்ல வந்ததை எளிதாக சொல்ல முடியாமல் போவதால் தான். அத்தகைய குறையை இப்புத்தகம் போக்குகிறது என்று தங்கள் வார்த்தைகளில் அறிந்தேன்.
ReplyDeleteஉங்களின் பதிவு மிக சிறப்பாக இப்புத்தகத்தை அறிமுகம் செய்கிறது! மேலும் அனில் ஆனந்தசுவாமி ஆற்றிய உரையை தாங்கள் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு. விஞ்ஞானிகள் பிரபஞ்ச ரகசியத்தை அறிய எங்ஙனம் கடுமையாக உழைக்கிறார்கள் என்று எல்லோர்க்கும் உணர்த்துகிறது.
மேலும் தங்களுடைய ஓய்வு நேரத்தை நீங்கள் எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறீர்கள் என்று தெள்ளத்தெளிவாக இது போன்ற பதிவுகள் பிரதிபலிக்கிறது. இவ்வகையில் நீங்களும் நூலாசிரியர் போல, அனில் ஆனந்தசுவாமி போல, விஞ்ஞானிகள் போல அனைத்துப் பாராட்டுக்களுக்கும் தகுதி பெறுகிறீர்கள்.
தமிழில் நீங்கள் எழுதும் நடை, சொல்லாடல் அல்லது சொல் ஆளுமை இப்பதிவிற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. ஆகச் சிறந்த முயற்சி, பதிவு!!