சிறப்பு பதிவு - செல்வா ஜெயபாரதி
முகமது யூனுஸ் கிழக்குவங்கத்தைச் சேர்ந்தவர். தற்போது பெரிய அளவில் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் சிறுகடன் (Micro Finance) போன்ற எளிய மக்களுக்கான திட்டங்களை பெரிய அளவில் நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டவர். இப்புத்தகம் முகமது யூனுஸ் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்து எப்படி கிராமீன் வங்கியை நிறுவி வறுமை ஒழிப்பில் பெரிய பங்காற்றினார், அதில் கிராமீன் வங்கியின் பங்கு என்ன, இச்சிந்தனைக்கான விதை, நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு போராட்டங்களைக் கடக்க வேண்டியிருந்தது போன்ற விஷயங்களைப்பற்றி விரிவாக பேசுகிறது.
எனக்கு இப்புத்தகத்தில் மிகவும் பிடித்த விஷயம், நல்ல கல்வி என்பது எப்படி இருக்கவேண்டும், நல்ல கல்வியால் என்னென்ன மாற்றங்களையெல்லாம் சாத்தியப்[படுத்தலாம் என்பதற்கு இப்புத்தகம் ஒரு பெரிய சாட்சியம்.
முகமது யூனுஸ் கிழக்கு வங்கத்திலுள்ள தாக்கா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். பெரிய சிக்கல்கள் சவால்கள் அற்ற வாழ்க்கை. ஆசிரியப்பணியில் பொருளாதார கோட்பாடுகளை சிலாகித்து மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்.
1974-ல் கிழக்கு வங்கத்தில் பெரும் பஞ்சம் ஏற்படுகிறது. கிராமங்கள் தோறும் வறுமையாலும் வேலையின்மையாலும் பெரும் எண்ணிக்கையில் பட்டினிசாவுகள் ஏற்படுகிறது. எங்கும் ஒரே மாதிரியான உடல் ஒட்டிய, வறண்ட முகங்களுடன் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் காணப்படுகிறார்கள். பத்திரிக்கையை திறந்தால் படிக்க முடியாதளவிற்கு பட்டினிச்சாவுகள் பற்றிய செய்திகள். மக்களும் கிராமங்களை விட்டு நகரம் நோக்கி படையெடுத்தனர். நகரங்களில் ஆங்காங்கே திறந்து வைக்கப்பட்டிருந்த கஞ்சித்தொட்டிகளுக்கும் பெரும் கூட்டம். இந்த பஞ்சத்தையும் வறுமையையும் எதிர்த்து அரசாங்கத்தை கேள்விகேட்கக் கூட திராணியற்றநிலை நிலவியது.
முகமது யூனுசை இந்த நிகழ்வுகள் மிகவும் பாதிக்கின்றன. பெரும் மனச்சோர்வும் அமைதியின்மையும் ஏற்படுகிறது. கல்லூரியில் பொருளாதார கோட்பாடுகளை மாய்ந்து மாய்ந்து ஒப்பிப்பதால் யாருக்கு என்ன பயன்? இந்த கோட்பாடுகளுக்கு நடைமுறையில் என்ன அர்த்தம் இருக்கிறது? இந்த கோட்பாடுகள் பட்டினியால் செத்து மடிந்து கொண்டிருக்கும் ஒருவரை கரைசேர்க்க இயலுமா? யூனுஸுக்கு பேராசிரியராக இருப்பது வெறுமையை உண்டுபண்ணுகிறது. எதார்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என முடிவுசெய்கிறார். இறந்து கொண்டிருக்கும் இந்த மனிதர்களின் நிஜ வாழ்வு எப்படிப்பட்டது என அறிந்துகொள்ள நேரிடையாகவே கிராமங்களுக்கு செல்கிறார். அங்கு எந்த நம்பிக்கையுமற்று சாவை எதிர்நோக்கியிருக்கும் ஒருவருக்கு உதவி செய்தாலும் அதுவே போதும் என அவருக்குத் தோன்றுகிறது.எந்த நடைமுறை பயனுமற்ற கோட்பாடுகளை கற்ப்பிப்பதைக்காட்டிலும் இது மேலானதும் பயனுள்ளதும் எனத்தோன்றுகிறது.
கிராமங்களிலுள்ள ஏழைகளின் குடியிருப்புகளுக்கு செல்கிறார். அங்கு அவர் பார்க்கும் பெண்களிடம் உரையாட விளைகிறார். அவர்களோ வீட்டில் யாருமில்லை (ஆண்கள் இல்லை) எனக் கூறி கதவுப்பின்புறம் மறைந்து கொண்டு பதில் சொல்கின்றனர். முதலில் தயங்கினாலும், இவர் அப்பெண்களிடம் பயப்பட வேண்டாம் எனவும், தான் கல்லூரியில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்திக்கொண்டு மெல்ல உரையாடலை தொடங்குகிறார். ஒரு உரையாடல் இப்படி இருக்கிறது....
உங்க பெயர் என்ன?
சுபியா பேகம்
என்ன வயது?
21
இந்த மூங்கில் உங்களுடையதா?
ஆமாம்
எங்கு கிடைக்கும்?
நான் காசு கொடுத்து வாங்கியது.
எவ்வளவு கொடுத்து வாங்கினீர்கள்?
ஐந்து தாக்க.
உங்களிடம் ஐந்து தாக்க இருக்க?
இல்லை. நான் வட்டிக்கு வாங்கினேன்.
யாரிடம்?
வட்டிக்குவிடுபவர்களிடம்.
எந்த அடிப்படையில் பணம் தருகிறார்கள்? நீங்கள் எப்படி பணம் பெற்றீர்கள்?
இந்த மூங்கில் இருக்கைகளை அவர்களிடமே திரும்ப விற்க வேண்டும். கடன், வட்டி போக மீதம் தருவதுதான் எங்களுக்கான லாபம்.
எவ்வளவுக்கு விற்பீர்கள்?
ஐந்து தாக்க ஐம்பது பைசா
என்ன ஐம்பது பைசாதான் உங்கள் லாபமா?
ஆமாம்
அப்படியென்றால் ஐம்பது பைசாதான் உங்கள் ஒரு நாளைய உழைப்புக்கும் இந்த அழகிய மூங்கில் இருக்கை செய்ததற்குமான வருவாய்.
ஆமாம்
யூனுஸுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஐம்பது பைசாவுக்காகவா இவ்வளவு சிரமப்படுகிறார்கள். தான் கல்லூரியில் பொருளாதாரத்தில் லட்சங்களில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, இங்கு ஐம்பது பைசா ஒருவரின் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கிறது. இந்த கல்வி ஏன் வாழ்க்கையை பிரதிபலிக்கவில்லை என தோன்றுகிறது.
மனிதர்கள் உண்மையில் உழைக்க சோம்பேறிப்படவில்லை. உழைக்காததினால் ஏழையாக வாழவில்லை. மாறாக அவர்கள் சதாகாலமும் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் நம்மிடமுள்ள பொருளாதாரக் கொள்கைகளும் அதன் அமைப்புகளும் அது இயங்கும் விதங்களும் தான் வறுமையை உருவாக்குகின்றன.
இந்த உலகில் எல்லோர் தேவைகளுக்கும் எல்லாமும் இருக்கிறது. ஆனால் அது சரியான வகையில் எல்லோருக்கும் சமமாக கிடைக்கும்வண்ணம் அமைக்கப்படவில்லை என உணர்கிறார்.
சுபியா பேகம் போன்ற பெண்கள் கல்வியறிவில்லாவிடினும் தங்களுக்கு தெரிந்த தனித்திறமையை பயன்படுத்தி வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால் அந்த தனித்திறமையைப் பயன்படுத்தி ஏன் அவர்களால் முன்னுக்கு வர முடிவதில்லை? எது தடையாக இருக்கிறது?
யூனுஸ் அவரின் மாணவியை அனுப்பி சுபியா பேகம் போல எத்தனை பெண்கள் அந்த கிராமத்தில் வட்டிக்கு கடன் வாங்கிச் சிறுதொழில் செய்து பிழைப்பு நடத்துகின்றனர் என ஒரு கணக்கெடுத்து அறிந்துவரச் சொல்கிறார். 42-பேர் என அறியவருகிறது. அவர்கள் கடன் பெற்ற மொத்தத்தொகை 27 டாலருக்கும் குறைவானது. ஒரு 27 டாலருக்த்தான் இத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன என அறியும்போது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்.
யூனுசே இந்த பணத்தை அந்த 42 குடும்பங்களுக்கும் வட்டியின்றி கடனாகக் கொடுக்கிறார். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதை திருப்பித்தரலாம் எனவும், அவர்கள் லாபம் ஈட்டும் போது திருப்பித்தந்தாலும் சரி என சொல்கிறார். ஆனால் ஒன்று தோன்றுகிறது, தன்னால் எத்தனை கிராமங்களுக்கு இப்படி பண உதவி செய்ய முடியம்? உள்ளூர் வங்கி மேலாளரை அணுகி இம்மக்களுக்கு ஏதாவது சிறு கடன் உதவி செய்ய முடியுமா என கேட்கிறார். பின்வரும் உரையாடளை வாசியுங்கள். நம் மெத்தபடித்த அதிகாரிகள் எத்தனை அபத்தமாக பேசுவார்கள் என புரியவரும்.
அதிகாரி: அப்படி மிகச்சிறிய தொகையைக் கடனாக வழங்க முடியாது.
யூனுஸ்: ஏன்? என்ன காரணம்?
அதிகாரி: இப்படிப்பட்ட சிறு தொகையை கடனாக கொடுப்பதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவங்களுக்கு செய்யப்படும் செலவே அந்த கடன் தொகை அளவு இருக்கும். அதில் என்ன லாபம் கிடைக்கப்போகிறது. மேலும் இப்படிப்பட்ட சிறு கடன்களில் வங்கி நேரத்தை வீணடிக்க முடியாது.
யூனுஸ்: ஆனால் இந்த ஏழைகளின் கடன் பிரச்சனைகள் முக்கியமல்லவா. அதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?
அதிகாரி: முதலில் இந்த பாமரர்களுக்கு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யக் கூடத் தெரியாது. பின்பு எப்படி கடன் வழங்குவது?
யூனுஸ்: கிழக்குவங்கத்தில் 75% மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்தான். இந்த ஒரு காரணத்தைச் சொல்லி கடன் தர மறுப்பது அபத்தமில்லையா?
அதிகாரி: ஆனால் எல்லா வங்கிகளிலும் இந்த ஆணை உள்ளதே.
யூனுஸ்: அப்படியென்றால் வங்கியின் நடைமுறைகளைத்தான் மாற்றவேண்டும். வங்கிகள் படிப்பற்றவர்களுக்கு புறம்பானாதாக இயங்குகிறதோ?
அதிகாரி”: நீங்கள் எளிமைப்படுத்துவது போல் வங்கி நிர்வாகம் ஒன்றும் அத்தனை எளிதானது இல்லை. உலகம் முழுக்க இதுதான் நடைமுறை. நீங்கள் சொல்வதுபோல் செய்யவேண்டுமென்றால் படிவங்கள் பூர்த்திசெய்வதற்கே பல ஆட்கள் வேண்டும்.
யூனுஸ்: வேண்டுமென்றால் என் மாணவர்கள் சிலரை படிவங்கள் பூர்த்திசெய்ய உதவிக்கு அனுப்புகிறேன்.
அதிகாரி: நீங்கள் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். சும்மா ஏழைகளுக்கெல்லாம் கடன் வழங்க முடியாது.
யூனுஸ்: அதுதான் ஏன்?
அதிகாரி: அவர்களிடம் collateral எதுவுமில்லை. அது இருந்தால்தான், அதை வைத்து பணம் தர முடியும்.
யூனுஸ்: ரெம்ப அபத்தமாயிருக்கு. அவர்களே மிக கொடுமையான வறுமையில் வாழும் ஏழைகள். அவர்களிடம் எப்படி
அதிகாரி: நீங்கள் லட்சியவாதி போல் பேசுகிறீர்கள். ஆனால் நடைமுறை வாழ்க்கை வேறு வகையானது. நீங்கள் பேசுவதெல்லாம் கோட்பாடுகளாக பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டுமானால் சரிவரலாம். நடைமுறைக்கு சாத்தியப்படாது.
யூனுஸ்: ஆனால் நீங்கள் பேசுவதை பார்த்தால் பணக்காரர்கள் மட்டுமே கடன் பெற முடியும் போல. இதை கட்டாயம் மாற்றியாக வேண்டும்.
இந்த எதார்த்தம்தான் அன்று நடைமுறையில் இருந்தது. யூனுஸ் மாற்ற விரும்பினார். வங்கி உயர் அதிகாரிகள் பலரை சந்தித்து தொடர்ந்து உரையாடியும், விவாதித்தும் ஒரு வழியாக கடன் தர இசைந்தனர். யூனுசை பொறுப்பாகக் கொண்டு அக்கடன்கள் வழங்கப்பட்டது.
ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து, தன் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு கடன் வழங்குவது பின்பு அக்கடனை நாள் தவணையாகவோ அல்லது வார தவணையாகவோ வசூலிப்பது என முடிவானது. இவற்றை எல்லாம் பொருளாதாரம் பயிலும் மாணவர்களைக் கொண்டே செய்தார்.
இங்கு ஒன்று கவனிக்க வேண்டும். அதாவது இப்போதெல்லாம் உயர் கல்வியில் ப்ராஜெக்ட் என ஒரு பாடம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பாடம் என்பது வகுப்பறையில் சொல்லித்தரப்படுவதில்லை. மாறாக மாணவர்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் போய் இரண்டு மாதமோ ஐந்து மாதமோ ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஆய்வு செய்ய வேண்டும். இது ஒரு சிறு ஆய்வாகவும் நிறுவனங்களின் எதார்த்த நடைமுறைகளை அறிந்து கொள்ளவும் மாணவர்களுக்கு பயன்படுகிறது. ஆனால் இன்றைய நிலையில் இந்த ‘ப்ராஜெக்ட் வொர்க்’ என்பது எதாவது ஒரு நிறுவனத்தில் போய் குமாஸ்தா (clerical) வேலை செய்வதாகவே இருக்கிறது. புதிய அறிதலோ, ஆய்வோ இருக்காது. செய்வதெல்லாம் இணையத்தில் உள்ள தகவல்களை பிரதி எடுப்பது. ஆனால் யூனுஸ் பொருளாதாரம் பயிலும் மாணவர்களை உண்மையான களப்பணியில் ஈடுபடுத்தினார். அவர்களை கொண்டே அன்றைய கிழக்குவங்க பொருளாதார நிலைகளை அறிந்துகொண்டு அதற்கான நடைமுறை தீர்வுகளை நோக்கி பணியாற்ற சொன்னார்.
பல தொடர் போராட்டங்களுக்கும் விடாப்பிடியான முயற்சிகளுக்கும் பிறகு கிழக்குவங்க அரசாங்கம் யூனுஸ் பரிந்துரைத்த ‘மாதிரி’ வங்கியை நிறுவ ஒத்துக்கொண்டது. ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு அதை பரிசோதித்து பார்க்க முடிவு செய்தது. இதன் நடைமுறை சாதக பாதக விளைவுகளை அந்த வங்கியின் மூலம் பரிசோதித்து பார்த்தது. யூனுஸ் இதன் பிரதான பொறுப்பாளர். யூனுஸ் இம்முயர்ச்சியில் கணிசமான மாற்றங்களை உருவாக்கி காட்டினார். இப்படித்தொடங்கப்பட்ட சிறுமுயற்சிதான் பின்பு கிழக்குவங்கம் முழுக்க விஸ்தாரமாக வளர்ந்து விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை செய்தது.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் கிழக்குவங்க இஸ்லாமிய பெண்களின் ஆளுமையில் ஏற்படுத்திய மாற்றம். எதற்கும் வீட்டிலிருக்கும் ஆணை நம்பியே வாழவேண்டிய நிர்பந்தங்களிலிருந்து விடுபட்டு யாரையும் சார்ந்து வாழாமல் பொருளாதார சுதந்திரத்துடனும் தன்னிறைவுடனும் வாழ அவர்களுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது கிராமீன் வங்கிதான். அவர்களுக்கு அடிப்படையான சிறுதொழில் கல்வி வழங்கியதும் யூனுஸின் கிராமீன் வங்கிதான். ஒரு பெண்ணிற்கு கொடுக்கப்படும் கல்வியும் பொருளாதார தன்னிறைவும் சமூகத்தின் பல தளங்களிலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது – விதை போல – வளர்ந்து கனிந்து பெருகிக்கொண்டே இருக்கக்கூடியது.
யூனுஸ் அடிப்படையில் காந்திய சிந்தனை கொண்டவர். அதன் அடிப்படையிலேயே அவர் இத்திட்டங்களை வடிவமைது செயல்படுத்தினார். இப்பணிகளுக்காக யூனுசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. காந்தியி கனவு கண்ட, ஜே சி குமரப்பா வரையறை செய்த நிலைத்த பொருளாதாரம் என்பது இதுதான்.
இன்றைக்கும் இதை ஒரு முன்னுதாரணமாக கொண்டு நாம் நம் கிராமங்களின் உண்மையான வாழ்நிலையை அறிந்து கொண்டு அதற்கான திட்டங்களை அந்த அந்த கிராம அளவில் நடைமுறைப்படுத்தலாம். இயற்கை வளம், விவசாயம், வேலை வாய்ப்புகள், கல்வி, சுகாதாரம், பண்பாட்டு நடவடிக்கைகள் என பல தளங்களில் நல்ல மாற்றங்களை கொண்டுவரமுடியும்.
-செல்வா ஜெயபாரதி
Banker to the poor
முகமது யூனுஸ்
ஆங்கிலம், பொருளாதாரம், சரிதை
No comments:
Post a Comment