சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
எத்தனையோ வருடப் பாரம்பரியம் இருக்கும் போதும், இந்தியத் தொல்லிசை பற்றியும் இசைக்கலைஞர்கள் பற்றியும் புத்தகங்கள் மிகக் குறைவாக இருப்பது ஆச்சரியம். குறிப்பாக, மேற்கத்திய இசையின் ஒவ்வொரு வகையையும் சார்ந்த இசைக்கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, நம்மிடையே இருப்பது சொற்பம். தொல்லிசையை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட, மகா கலைஞர்களின் வாழ்க்கைகள் விரிவாக ஆவணப்படுத்தப்படவில்லை. செய்தித்தாள்களிலும் பத்திரிக்கைகளிலும் சிதறிக் கிடக்கும் கட்டுரைகளைக் கொண்டு தான் இவர்களில் பலரைப் பற்றி அறிய முடிகிறது. சிலரைப் பற்றி, இது மாதிரி சிதறல்கள் கூட இல்லை. பெரிய கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களும் வெறும் தனி மனித வழிபாட்டோடு நின்றுவிடுகின்றன. அக்கலைஞர்களைப் பற்றி மிகக் குறைவான அளவிலேயே விமர்சன ஆய்வு செய்யப்பட்டிருக்கும் அல்லது அவர்கள் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றி நாம் எதுவும் அறிந்துகொள்ள முடியாமலிருக்கும்.
கலைஞர்களோடு நெருங்கிப் பழகியதோடு, அவர்களைப் பற்றி விமர்சன ரீதியிலும் சரளமாகவும் எழுதக்கூடியவர்கள் எழுதிய புத்தகங்கள் இன்னும் அபூர்வம். கர்நாடக சங்கீதத்தில் இப்படிப்பட்ட புத்தகம் ஒன்றாவது இருப்பதாகத் தெரியவில்லை; ஆனால் ஹிந்துஸ்தானியில் இதைப் பற்றி சில புத்தகங்கள் இருக்கின்றன. ஷீலா தார் எழுதிய ராகா & ஜோஷ், குமார் பிரசாத்தின் தி லாஸ்ட் வேர்ல்ட் ஆஃப் இந்துஸ்தானி மியூசிக் மற்றும் நமீதா தேவிதயாளின் தி மியூசிக் ரூம். இதில் கடைசி புத்தகத்தைப் பற்றி இங்கே பேசுவோம். அதிகம் பிரபலமாகாத, ஆனால் தன்னுடைய வாழ்க்கையை இசைக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞரைப் பற்றிப் பேசுவதால் இந்த புத்தகத்தை நான் தேர்ந்தெடுத்தேன்.
நமீதா தேவிதயாள் ஒரு பத்திரிக்கையாளர். ஜெய்பூர் அட்ரவுலி க்ராணாவின் டோண்டுதாய் குல்கர்னியிடம் இசை பயின்றார். எல்லா சிறுவர்களையும் போல், நமீதாவையும் -அவருக்கு இசையில் அவ்வளவு விருப்பமில்லை என்றாலும் கூட- பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ள வீட்டைவிட்டு அனுப்பிவைத்துவிட்டார்கள். டோண்டுதாய் வீட்டிற்குப் போகும் அனுபவமே ஒரு கற்றல் தான். நமீதா, ஒரு வசதியான குடும்பத்திலிருந்து, தன்னுடைய உயர் நடுத்தர சுற்றத்தைவிட்டுவிட்டு தன்னுடைய குரு வசிக்கும் கீழ் நடுத்தர சுற்றத்துக்கு பயணிக்கிறார். தொடக்கத்தில் இசையைக் கற்க விருப்பமில்லாத போதும், கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய குருவின் அர்பணிப்பாலும் அவருடைய இசையறையாலும் ஈர்க்கப்படுகிறார்.
நமீதாவும் டோண்டுதாயும் (மேலும் சில படங்கள்) |
புத்தகம் இரண்டு பாதைகளில் பயணிக்கிறது. ஒன்று நமீதாவினுடையது; அவருடைய வளர்ச்சி, குருவுடனான சந்திப்புகள், இசையை அவர் கண்டறிந்தது, வாழ்க்கையில் அவர் எடுத்த முடிவுகள் எல்லாம் சொல்லப்படுகின்றன. இன்னொரு பாதையில் அவர் தன்னுடைய குருவின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறார்; முக்கியமாக குருவின் பார்வையில் ஜெய்ப்பூர் அட்ரவுலியின் ஜாம்பவான்களான, கரானாவின் கலிஃபா உஸ்தாத் அல்லாதியா கான், அவருடைய மகன்கள் மாஞ்சி கான் மற்றும் புர்ஜி கான், பேரன் “பாபா” பற்றி ஏராளமான தகவல்களைப் பதிவு செய்கிறார். இவற்றைவிட முக்கியமாக, ஜெய்பூர் கரானாவின் புகழ்பெற்ற பாடகரும் டோண்டுதாயின் குருவுமான கேசர்பாய் கேர்கர் பற்றிய மிகச் சிறந்த பார்வை நமக்குக் கிடைக்கிறது.
டோண்டுதாயின் பார்வையில் பின்னோக்கிச் செல்லும் பகுதிகள், புத்தகத்தில் சுவாரசியமானவை. இந்த பகுதிகளில் பழைய காலம் உயிர்ப்பெற்று நம் மனக்கண்ணில் விரிகிறது. உஸ்தாத் அல்லாதியா கான் அனைவராலும் மதித்துப் போற்றப்பட்ட காலமது. கோலாபூரில் உள்ள அனைவரும், மகாலக்ஷ்மி கோவியில் அவர் பாடுவதைக் கேட்க ஆவலோடு காத்திருந்த காலமது. இந்த பாரம்பரிய பழக்கத்தை அவருக்குப் பின் அவருடைய மகன்களும் பேரனும் தொடர்ந்திருக்கிறார்கள். உஸ்தாத் அல்லாதியா கானின் பேரனான, ‘பாபா’ அஸ்ஸுதின் கானைப் பற்றி பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. பயபக்தியோடு டோண்டுதாய் அவரை அணுகுவதும், அவர்களுடைய சந்திப்பும் அருமையாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ‘பாபா’வின் மூலம் அல்லாதியா கானின் புகழ்பெற்ற மகன்களான மாஞ்ஜி கான் மற்றும் புர்ஜ் கான்களைப் பற்றி பல கதைகள் நமக்குக் கிடைக்கின்றன.
அடுத்ததாக கேசர்பாய் கேர்கர் பற்றி நிறைய தகவல்கள். இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை, ஏனென்றால் இவர் தான் டோண்டுதாயின் குரு. கேசர்பாயின், தன் குரலை தன் எண்ணப்படி கையாளும் திறமையைப் பற்றியும் அவருடைய தான்களைப் பற்றியும் விளக்கமாக டோண்டுதாய் நமீதாவிற்கு விளக்கியிருக்கிறார். கேசர்பாயின் புகழைப்பற்றியும் அவரைக் கேட்க மக்கள் எவ்வளவு உற்சாகத்தோடு இருப்பார்கள் என்பதையும் டோண்டுதாய் நமீதாவுடன் பகிர்ந்துகொள்கிறார். நமீதா, அந்தகாலங்களை அப்படியே உயிர்ப்புடன் கொண்டு வந்திருக்கிறார்.
நமீதாவின் பார்வையில் டோண்டுதாய் பற்றிய சிறந்த சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. ஆன்மிகத்தில் தீவிரமானவராகவும், தன்னுடைய கலையின் தூய்மையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ள விரும்பாதவராகவும், நமீதாவிடம் அவர் வைத்திருக்கும் அன்பும் உயர்ந்த நம்பிக்கைகளும், அவருடைய இசையறை, அவருடைய வயதான தாயார், ‘ஆயி’ மீதிருக்கும் பக்தியும் நம் கண்முன்னே விரிகிறது. அதிகம் அறியப்படாத ஒரு இசைக் கலைஞராக வாழ்க்கையை நடத்துவது எவ்வளவு கடினமென்பதும் நமக்குப் புரிகிறது. டோண்டுதாயின் வறுமையும், அரசாங்கம் வழங்கிய குடியிருப்பில் அவர் குடியேறிய போது கொண்ட மகிழ்ச்சியும் வேறு பல சம்பவங்களும் நேர்மையாக எழுதப்பட்டிருக்கின்றன. தன்னுடைய குருவால் ஏன் பெரிதாக வளர முடியவில்லை என்பதை நமீதாவும் புரிந்துகொள்ள முயற்சி செய்து, அதையொட்டி தன்னுடைய வாதத்தையும் வைக்கிறார்.
இந்தப் புத்தகம் வாசிப்பதற்கு மிகவும் இலகுவானது, முந்தைய பகுதிகள் அடுத்தடுத்த பகுதிகளுக்கு நம்மை இழுத்துச் சென்றுவிடும். நமீதாவுக்கு டோண்டுதாயிடம் இருக்கும் அனுதாபமும், பாரம்பரியத்தின் மீதிருக்கும் மரியாதையும் அழகாக வெளிப்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் பல முக்கியமான ஆளுமைகளைப் பற்றி விலைமதிப்பில்லாத எண்ணற்ற தகவல்களைத் தருகிறது. இசைக் காதலர்கள், குறிப்பாக ஹிந்துஸ்தானி இசையை விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.
The Music Room - Namitha Devidayal
Random House India
320 Pages, Rs. 295
இணையத்தில் வாங்க
The Music Room - Namitha Devidayal
Random House India
320 Pages, Rs. 295
இணையத்தில் வாங்க
No comments:
Post a Comment