ஏசுவின் தோழர்கள்
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 231
விலை: ரூ.90
ஐரோப்பிய யூனியனில் இருக்கும் நாடு - போலந்து. இரண்டாவது உலகப் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்நாட்டை ஜெர்மனி, ரஷ்யா இரு நாடுகளும் ஆக்ரமித்துக் கொண்டன. பின்னர், சோவியத் யூனியனின் கீழ் ’மக்கள் குடியரசாக’ இருந்த இந்த நாடு, உலக சரித்திரத்திலேயே கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி செய்த நாடாகும். 1989ல் கம்பூனிஸ்ட் அரசு தூக்கியெறியப்பட்டு ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டது. இந்த புரட்சி உச்சகட்டத்தில் இருந்த 1981-86 காலத்தில் இ.பா, போலந்தின் தலைநகராகிய வார்ஸாவில், பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் கண்ட மக்கள் / நாட்டின் பிரச்னைகள், நண்பர்கள், அவர்களின் கதை ஆகியவற்றை ஒரு அழகிய நாவலாக எழுதியுள்ளார்.
இந்தியத் தூதர், தூதரகத்தில் வேலை பார்த்த இந்தியர்கள், போலீஷ் நண்பர்கள் என பல்வேறு கதாபாத்திரங்கள். திருட்டுத்தனமாக போலந்தில் தங்கியிருக்கும் இந்தியர்கள், பெற்றோருடன் சண்டை போட்டு போலந்து வந்து மருத்துவராகி வேலை பார்த்து சிறிய வயதில் இறந்துபோன ஒருவர், முப்பது வருடங்களுக்கும் இந்தியாவே வராத ஒரு இந்தியர் என பல கிளைக்கதைகள். இந்தியாவைப் பற்றி போலீஷ்காரர்களின் கருத்து, போலந்தைப் பற்றி இந்தியர்களின் பார்வை, இந்தியர்கள் & போலீஷ் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள், கம்யூனிச ஆட்சியில் மக்களின் கஷ்டங்கள் என்று பல்வேறு விஷயங்களை இந்தப் புத்தகத்திலிருந்து அறிந்து கொள்லலாம்.
இ.பா வார்ஸாவில் இருந்த காலத்தில் அங்கு நடந்த புரட்சியால், டாய்லெட் பேப்பருக்குக் கூட தட்டுப்பாடாம். மக்கள் கையில் காகிதங்கள் அதிகம் கிடைத்தால், அதிலும் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்பதால் காகிதத்திற்குத் தடையாம். ஆகவே, மக்கள் புத்தகங்களை கிழித்து தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினார்களாம். அதே போல் மற்ற பொருட்களும். எதை வாங்க வேண்டுமென்றாலும் நீண்ட வரிசையில் நின்று வாங்க வேண்டும். இத்தகைய பிரச்னைகளைப் பற்றி அரசாங்கமும் ஆரம்பத்தில் அலட்டிக் கொள்ளவில்லையாம். ஆளுங்கட்சிப் பிரமுகர் இ.பா’விடம் ”நாங்கள் மக்களின் எதிர்ப்பைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களுக்கு சத்தம். எங்களுக்கு அதிகாரம். இதுதான் எங்கள் கொள்கை” என்றாராம். பின்னர், சில மாதங்களில் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து, அனைத்து பொருட்களும் தடையில்லாமல் கிடைக்க ஆரம்பித்ததாம்.
பல சுவையான கதாபாத்திரங்கள் நாவலில் உள்ளன. இதில் ஒரு சிலரை மட்டும் இங்கே பார்ப்போம்.
ஆஷா. போலந்திலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆஷாவின் தாயார் ஒரு முறை இந்தியா வந்திருந்தபோது இங்கு கயவர்களால் வன்புணர்வு செய்யப்பட்ட அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டாராம். அதனால் ஆஷாவிற்கு இந்தியாவின் மேல் வெறுப்பு வந்து, இந்தியா என்ற பேச்சை எடுத்தாலே எரிச்சலும், இந்தியாவிற்கு ஒரு முறைகூட வராமலும் இருந்திருக்கிறார். பின்னர் இ.பா மற்றும் பலரிடம் பேசியதால், அந்த வெறுப்பு நீங்கி, தன் தந்தையிடம் தன் உறவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு, கும்பகோணம், நாச்சியார் கோவில் ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்திருக்கிறார். அவரது அத்தையைத் தவிர மற்ற உறவினர்கள் அனைவரும் இவரது வருகையை விரும்பவில்லை என்று தெரிகிறது. அத்தை இவரை பல்வேறு கோயில்களுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஊரின்/ நாட்டின் பெருமையை விளக்கியிருக்கிறார். ஆஷாவும் அவரது அன்பில் நெகிழ்ந்து ஊருக்குத் திரும்ப, அவரது தந்தைக்கு கடுமையான காய்ச்சல் இருப்பது தெரிய வருகிறது. அந்த சமயத்தில் இந்திய பயணத்தைப் பற்றி, அவரது உறவினர்களைப் பற்றி தந்தையிடம் கூற, ஓரிரு நாட்களில் தந்தையின் உயிர் பிரிகிறது. அவரது குற்றவுணர்ச்சியை தான் தூண்டிவிட்டதால், அவர் இறந்து போனாரோ என்று இ.பா.விடம் அழுதிருக்கிறார்.
நரேன். இந்தியத் தூதரகத்தில் பணிபுரிபவர். இ.பா.வுடன் நெருங்கிப் பழகி, பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தவர். போலிஷ் பெண்ணான ஆஷாவை விரும்பி திருமணம் செய்து கொள்ள விரும்பியவர். ஆனால், ஒரு இந்திய அரசு ஊழியர் ஒரு வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து கொள்ள சட்டப்படி முடியாததால், வேலையை விட்டுவிடலாமா என்றும் யோசிக்கிறார். இதைப் பற்றிய ஒரு விவாதமும் இ.பாவுடன் செய்கிறார்.
ஒரு முறை இ.பா’விற்கு உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்து, பின்னர் திரும்பி வந்தபோது, அவரது நண்பர்கள் யாரையும் காணவில்லையாம். நரேன், ஆஷா இன்னும் பலர் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. புதிய பிறப்பு போல் அனைத்தும் புதியதாக இருக்கிறது என்று எழுதுகிறார். அப்போது ஆஷா எழுதிய கடிதம் கிடைக்கிறது. அதில் பலரது விவரங்கள் தெரியவருகின்றன. இப்படி எல்லாருமே சொல்லிக் கொள்ளாமல் போனதைக் கண்டு வருத்தமுற்று, தானும் இந்தியா திரும்ப முடிவெடுத்ததாக இ.பா எழுத, புத்தகம் முடிகிறது.
இதில் இந்தியா பற்றி போலீஷ் ஒருவரின் கருத்து பளிச்.
“இந்தியாவில் தேசிய உணர்வு என்பது அறவே இல்லை. இது என்னுடையது என்ற உணர்வு மேலோங்கியுள்ளதேயன்றி, இது நம்முடையது என்ற உணர்வு ஏன் உங்கள் நாட்டில் இல்லை? இந்துமதம் Individual Salvation பற்றித்தான் அதிகம் பேசுகிறதேயன்றி சமூக நல்வாழ்வைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்பதுதான் இதற்குக் காரணமா?”.
இ.பா’வின் மொழி நடையில் ரசித்த வரிகள்.
* பாரதிக்கு பனியைப் பார்த்த அனுபவம் இருந்திருந்தால், அது தமிழ் செய்த அதிர்ஷ்டமாக இருந்திருக்கும்.
* நான் ஐரோப்பாவுக்கு வந்தபோது, இங்கு இலையுதிர் காலம் முடிவடைந்து கொண்டிருந்தது. வயதளவில், எனக்கு இப்பருவம் ஆரம்பம்.
* விமான ஜன்னல் வழியே பார்க்கும்போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் பரிசுத்தமான நீலம், உவகையில் ஆழ்த்துகிறது. இந்த உவகையின் வெளிப்பாடுதான் ஹிந்துக்களின் கடவுளாகிய விஷ்ணுவோ என்று நினைத்தாள் ஆஷா.
ஒரு பயணக்கட்டுரை வடிவில் இல்லாமல், சுவாரசியமான கதை வடிவில் அந்த காலத்து போலந்து, கம்யூனிச ஆட்சி என பல விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு நல்ல புத்தகம்.
***
No comments:
Post a Comment