சென்னையில் சில வருடங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி ஒன்று நிறைவடைந்து வெளியில் வரும்போது தந்த பேட்டி ஒன்றில் எஸ்.வி.சேகர் இப்படிக் குறிப்பிட்டார்:
“இனிமே நாம ராத்திரி வீட்டுக்குப் போகும் போது கையில மல்லிப்பூ சரத்தை சுத்திக்கிட்டுப் போனாலோ, இல்லை நம்ம கார்ல மல்லிப்பூ உதிர்ந்து கிடந்தாலோ வீட்டு அம்மணி கிட்ட பயப்பட வேணாம்”. அப்போதுதான் சுடச்சுட பிரபல பாடகர் ஹரிஹரன் பாடி முடித்த கஜல் கச்சேரி ஒன்றை ரசித்துவிட்டு வெளியே வந்திருந்தார் சேகர்.
“ஹரிஹரன் கச்சேரிக்குப் போயிட்டு வந்தேன்’னு சொல்லிக்கலாம்”, என்றார் சேகர். கஜலின் போதைக்கு மேலும் போதையூட்ட அந்த கஜல் அரங்குக்கு வந்தவர்கள் கையில் மல்லிகைப்பூச் சரம் தரப்பட்டதாம். என்னே ஒரு ரசனை!
கையில் சுற்றின மல்லிகைச் சரம் போலத்தான் கஜல் பாடல்கள். கையில் சுற்றின சரத்தின் வாசம் நம்மைக் கிறங்கடிக்கும். சரத்தை அவிழ்த்த பின்னாலும் அதன் வாசம் காற்றில் நம்மைச் சுற்றிவரும்; நம் கையோடு சிலப்பல மணிநேரங்கள் அதன் வாசம் கலந்திருக்கும்.
கஜல் பாடல்களைக் கேட்கும்போதும் அப்படித்தான். கேட்கையில் மல்லிகையின் வாசமாய் மனத்தில் நிறைந்து நம்மைக் கிறங்க வைக்கும் கஜல்கள், நிறைந்தபின்னும் நம்மை விட்டு அகலாமல் மனத்தை அழுத்திக் கொண்டிருக்க வல்லன.
ஜக்ஜித் சிங், குலாம் அலி, மெஹ்தி ஹசன், அனூப் ஜோட்லா, பங்கஜ் உதாஸ் என்று கஜல் வானில் உஸ்தாத்’கள் பலர் இருந்தாலும் நமக்கு நன்கு பரிச்சயமான ஹரிஹரனின் கஜல்கள்தான் எனக்கு ஃபேவரிட். எனக்குக் கொஞ்சமே கொஞ்சமேனும் புரியும் வகையில் அவை சுலபமாக இருப்பது காரணமாயிருக்கலாம். கொஞ்சம் மேலே போனால் அஹ்மத் & முஹ்மத் ஹசன் பாடல்கள் சில நம் ஃபேவரிட் லிஸ்டில் உண்டு.
மல்லிகைச் சரத்திற்கு வருவோம்.
லபோ பர்ழ் ஹே ரப்ஸா குலாபி குலாபி
நிகாஹோங் கே ஜூம்பிஷ் ஷராபி ஷராபி
துமாரே ஏ ச்செஹரா க்கித்தாபி கித்தாபி…
துமே ப்யாரு கர்னே கோ ஜீ ச்சா ஹதா ஹை
…இப்படி காதலியின் இதழ், பார்வை, முக வனப்பு பற்றி ’அஷோக் கோஸ்லா’ பாடும் கீத் கேட்கும்போது ஆகட்டும்,…
பஹுத்(து) ஹஸீன்(னு) ராத்(து) ஹே
தேரா ஹஸீன்(னு) ஸாத்(து) ஹே
நஷே மே குச் நஷா மிலா
ஷராப் லா ஷராப் தே…
இப்படி “அழகிய இரவில் அதியுன்னத அழகாய்த் தோன்றும் காதலியை மயக்கம் சூழ் இரவில் (அல்லது மது சூழ் நேரத்தில்) மேலும் மயக்கம் (போதை) சேர்க்க வாராய்”, என்று ஹரிஹரன் அழைக்கும் கஜல் ஆகட்டும்…..
ஆப் ஹமாரே சாத் நஹீ
சலியே கோயீ பாத் நஹீ
ஆப் கிஸீ கே ஹோ ஜாயே
ஆப் கே பஸ் கீ பாத் நஹீ
என்ற, “எங்கிருந்தாலும் வாழ்க” ரக “போனால் போகட்டும் போடா” ரக புலம்பல்கள் ஆகட்டும்….
…இவையெல்லாமும், இவை போன்ற பல கஜல்களும் எனக்கு மயக்கும் மல்லிகைச் சரங்கள்.
ஹிந்திக்காரர்களுடன் புழங்க நேரிடுகையிலோ அல்லது கஜல் பாடலொன்றைக் கேட்கையில் அர்த்தம் புரியாமல் தவிக்கையிலோ ஹிந்தி மொழியைக் சரிவர கற்காமல் விட்டதற்காக வருந்துவதுண்டு. எனினும், கஜல் சரிவர புரிதல் ஹிந்தி அறிந்தவர்களுக்கே சிரமமான காரியம். காரணம் கஜல் பாரசீக மொழி வழியாக உருதுவிற்கு வந்து இறங்கிய வடிவம் என்பதுவே. எனவே, ஹிந்தியில் கஜல்கள் வடிக்கப்பட்டாலும் அவற்றில் உருதுத் தூவல்கள் அவசியம் ஆகிறது.
கஜல்களுக்கான அர்த்தம் தேடி நம்மூரில் ஹிந்தி அறிந்தவர்களை அணுகினால், “பாஸ், இது நியாயமா? நமக்குத் தெரிஞ்சதே அரைகுறை. டென்னிஸ் பால் கிரிக்கெட்டருக்கு கிரிக்கெட் பால்’ல பவுன்ஸர் போட்றீங்களே” என்பார்கள். ”உங்களுக்குத்தான் ஹிந்தி தெரியுமே பாஸ்”, என்றால், “அட தெரியாததை தெரிஞ்சாப் போல சமாளிக்கிறோம் பாஸ்”, என்பார்கள்.
சரி போகட்டும் என வடக்கத்திய நண்பர்கள் யாரையேனும் கேட்கப் போனால், விஸ்வரூபம் படத்தில் தீபக்கைப் பார்த்து ஃபாரூக் சிரிக்கும் சிரிப்பைச் சிரிப்பார்கள். அதற்கு அர்த்தம் மிக எளிது. நான் கொண்டு போன கஜல் பாடலை துப்பாக்கியால் பின்னே சுட்டுப் பொசுக்கி அதன் அர்த்தத்தைக் கொல்லப் போகிறார்கள் என்பதுவே அது.
இப்படியாக கஜல்களைப் புரிந்து கொள்வது எப்படி என்று நாம் பாயைப் பிராண்டிக் கொண்டிருந்தபோது கண்ணில் அகப்பட்டதுதான் “கஜல்” பற்றிய அபுல் கலாம் ஆசாத் எழுதிய இந்தப் புத்தகம். என்னைப் போன்ற அரைகுறை கஜல் ரசிகர்களுக்கு என்றே கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வந்துள்ளதாகத் தோன்றுகிறது. இதன் ஆசிரியர் அபுல் கலாம் ஆசாத் சவுதியில் வசிப்பவர்.
தென்னிந்தியா தாண்டினால் வீணை சித்தார் ஆகி, ஜலதரங்கம் சந்தூராக உருமாறி, மாண்டலின் சரோடாக மாறி கர்நாடக இசை ஹிந்துஸ்தானியாக மாறிவிடும். இதுதான் எனக்குத் தெரிந்தவரையில் சாஸ்திரிய இசை என்பது. ஆக, தென்னிந்தியா தாண்டினதும் சினிமா இசை தவிர்த்து எதைக் கேட்டாலும் அது ஹிந்துஸ்தானி என்று நினைத்திருந்தவனுக்கு முதலில் கஜல் அறிமுகமாயிற்று. சரி, ஹிந்துஸ்தானி தவிர்த்த மற்றவை எல்லாம் கஜல் வடிவங்களா? பின்னர் கீத் என்று ஏதோ சொல்கிறார்கள். அந்த வடிவத்திற்கும் கஜல்களுக்கும் லேசாகத்தான் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. எனினும் அவை சரிவர பிடிபடவில்லை.
இந்தப் புத்தகத்தில் கஜல், கீத், ருபை, நக்ம், ஷாய்ரி என்று ஒவ்வொரு வடிவம் பற்றியும் தெளிவாகவும் சுருக்கமாகவும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
கீத் என்பது “பாடல்”,. ”நக்ம்” என்பது நாம் குறிப்பிடும் விருத்தத்திற்கு நிகர். ஷாய்ரி என்பது இலக்கணம் ஏதுமற்ற புதுக்கவிதை. ருபை என்பது நான்கு அடிகளால் அமைந்த பாடல். இவை குறித்து மேலும் நீங்கள் புத்தகத்தில் படித்து அறிந்து கொள்தலே நலம்.
நக்ம் என்ற சொல்லில் இருந்தே நக்மா என்ற பெயர் வந்ததாம். விருத்தம் போன்ற ஓர் அழகி என்பதே அர்த்தம். ”ஹிஹ்ஹீ! கரீட்டுதாம்பா”, என்ற உங்கள் மனக்குரல் எனக்குக் கேட்கிறது பாருங்கள்.
புத்தகத்தில் மொத்தம் இருபத்தி ஐந்து அத்தியாயங்கள். முதலில் கஜல் பற்றிய அடிப்படை அறிமுகம். அதன் வரலாறு, இந்தியாவில் அதன் வருகை பற்றிய தகவல்கள், தென்னிந்தியாவிற்கு கஜல் என்ற வடிவம் பயணப்பட்ட சேதி, பின்னர் அதன் கட்டமைப்பு பற்றிய நுட்பத் தகவல்கள் என்று சுருக்கமாக முன்னுரையாக வரும் முதல் இரண்டு முன்னுரை (அல்லது) முன்-அத்தியாயங்களில் விவரித்துவிட்டு முதல் அத்தியாயத்தில் டாப் கியர் எடுக்கிறது புத்தகம்.
இருபத்தி ஐந்து கஜல்களைத் (சில கீத்’கள்) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். அபுல் கலாம் ஆசாத் தமிழிலும் வலுவான ஞானம் கொண்டதால் அந்த உருதுப் பாடல்களை சந்தம் சிதையாமல் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். இந்த பிரபலப் பாடல்களைத் தேடிப் பிடித்து இந்தப் புத்தகத்தின் துணைக்கொண்டு கேட்கவும் அவற்றின் அர்த்தத்தை உள்வாங்கவும் நாம் தயாராகலாம். அதன்மூலம் மேலும் பல நல்ல கஜல்களைக் கண்டடைய இந்தப் புத்தகம் நமக்கு ஒரு திறப்பாகவும் அமையலாம்.
இந்தப் புத்தகத்தை வாசிக்காமல் அந்தப் பாடல்களையும் அவற்றின் மொழிபெயர்ப்பையும் சிலாகித்தல் சிரமம் என்பதால் அந்த மொழிபெயர்ப்புகளை நீங்கள் புத்தகத்திலேயே பார்த்துக் கொள்ளல் நலம் என்று இங்கே அவற்றைக் கொண்டு வாராது தவிர்க்கிறேன்.
மொழி ஞானத்தினையும் தாண்டி ஒரு நல்ல கஜலின் அர்த்தத்தை நாம் உள்வாங்க அது உருவான பின்னணி, அதன் காலகட்டம் மட்டுமல்லாது அந்த கஜல் உருவான மண்ணின் கலாசாரத்தையும் அறிவது அவசியம் என்று குறிப்பிடும் ஆசிரியர் அதற்கு உதாரணமாகத் தமிழ்ப் பாடல் ஒன்றினைக் குறிப்பிடுகிறார்
“மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் உனைப் பூசுகிறேன்”,
இந்த வரிகளை உள்வாங்க மன்மதனையும், சந்தனம் பூசும் சம்பிரதாயத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இது கஜல் குறித்த ஆரம்ப அறிமுகத்தில் ஆசிரியர் முன் வைக்கும் ஒப்பீடு.
ஒரு மிகத் தேர்ந்த வாசகனால்தான் ஒரு நல்ல நூலாசிரியன் ஆக இயலும் என்பதை மறுபடியும் அபுல் கலாம் ஆசாத் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தப் புத்தகத்தில் ”காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்”, என்று வாலியையும் அழைக்கிறார், “அவர்கள் என்னை அடிக்கவில்லை; அவளுக்குப் பிடித்தவளாய் என்னைச் செதுக்குகிறார்கள்”, என்று கவிக்கோ கவிதையையும் குறிப்பிடுகிறார். இப்படிப் புத்தகம் நெடுக நமக்குப் புரியும் ஒப்பீடுகள் வாயிலாக ஒரு கஜல் உருவாகும் சூழலை, அதன் அர்த்தத்தை விளக்கியிருப்பதே புத்தகத்தின் தனிச் சிறப்பு எனலாம்.
கஜல்களில் நிறைய உபயோகிக்கப்படும் ஷராப், ஷராபி என்னும் சொற்கள் (மது, போதை) குறித்து நான் இதுவரை கொண்டிருந்த அர்த்தத்தை அப்படியே போட்டு உடைத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத். அவை ஒரு மது மயக்க மன்னனின் குழறல் என்று நான் நினைத்திருக்க, அது ஒரு குறியீட்டுச் சொல்லே என்கிறார் ஆசிரியர்.
அதற்கான உதாரணம்:
ஆண்: அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்
பெண்: கன்னத்திலிருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்.
இங்கே பெண் குறிப்பிடும் மதுவானது ‘country liquor” அல்லது “jhonny walker” வகையறா அல்ல.
மேலும் கவிமணி’யின் “வெயிற்கேற்ற நிழலுண்டு” பாடலின் “ கலசம் நிறைய மதுவுண்டு”, என்பது சாராயத்தையா குறிக்கிறது என்ற ஆசிரியரின் கேள்வி அதி அற்புதமானது.
பின்னர் வரும் அத்தியாயத்தில் ஆசிரியரே மதுவை முதலில் மதுவல்ல என்றேன், அதை நானே தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று உண்மையிலேயே மதுவையும் போதையையும் குறிப்பிடும், ”யே கமே ஸிந்தகி முஜ்கோ தே மஷ்வாரா”, எனும் பாடலில் பங்கஜ் உதாஸ் அவள் இல்லத்திற்கும் மதுச்சாலைக்கும் இடையில் நின்று திண்டாடும் நிலை பாடும் பாடலைப் பற்றிப் பேசுகிறார். ஆக, மது என்பது குறியீட்டுச் சொல்லா அல்லது மதுவே தானா என்பதை அந்தந்தப் பாடலின் தன்மையை வைத்து உணரவேண்டும் என்று புரிகிறது.
இப்படி தத்துவம், உளறல், உவமை, காதல், வர்ணிப்பு, மது மயக்கம் என்று கஜலின் முக்கிய வடிவங்கள் எல்லாவற்றுக்கும், கஜலின் முக்கியப் பாடகர்களின் பிரபலப் பாடல்கள் சிலவற்றின் துணைக் கொண்டு மொழிபெயர்ப்பு தந்திருக்கிறார் அபுல் கலாம் ஆசாத். கஜல் பாடல்களை இயற்றிய முக்கிய கவிஞர்களின் சுருக்கமான வரலாறும் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளது.
கஜல் பாடல்களை ரசிப்பதில் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு நல்ல அறிமுக நூல்.
கஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத் – 112 பக்கங்கள், விலை ரூ. 45/- (2005 பதிப்பு) – இணையம் மூல்ம் புத்தகம் வாங்க: கிழக்கு
No comments:
Post a Comment