சிறப்புப் பதிவர்: என். சொக்கன்
நம் ஊரில் ராமாயணக் கதையைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. வால்மீகி எழுதிய ஒரிஜினலாகட்டும், அதிலிருந்து பிறந்த பலமொழிக் காவியங்களாகட்டும், புதுமையான பெயர்களுடன் வெளிநாடுகளில் வளைய வருகிற விதவிதமான ராமாயணங்களாகட்டும், எல்லாமே கிட்டத்தட்ட ஒரே சரித்திரத்தைதான் சிறு மாற்றங்களுடன் விவரித்துச் செல்கின்றன. மேடைப் பேச்சாளர்கள் இப்போதும் அதை வாரக்கணக்கில் விரிவுரையாற்றிக் கொண்டிருக்கிறா ர்கள்.
இத்தனைக்கும் அது ஒரு பெரிய, விரிவான கதைகூடக் கிடையாது. சந்தேகமிருந்தால் அமர் சித்ர கதாவைப் பாருங்கள், காமிக்ஸ் மகாபாரதத்தை 1500 ரூபாய் விலைக்குப் பெரிய வால்யூமாக வெளியிட்டிருக்கிறார்கள், ஆனால் காமிக்ஸ் ராமாயணம்? வெறும் நூறு ரூபாய்தான்!
ஆனால் அந்தத் தக்கனூண்டு கதையை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பாத்திரத்தையும், ஒவ்வொரு பாடலையும், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு கோணங்களில் மிக விரிவாக அலசிப் பிழிந்து காயப்போடுவதில் நமக்கு ஒரு சந்தோஷம். அதே கதையை, அதே சம்பவத்தை இவர் எப்படிச் சொல்லப்போகிறாரோ என்று தெரிந்துகொள்கிற ஆர்வம்.
அதனால்தான், இப்போதும் யாராவது ராமாயணத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், காரசாரமாக வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள், விருத்தம், வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, ட்விட்டர் என்று எத்தனை வடிவத்தில் வந்தாலும், அந்தக் கதைமீது நமக்கு ஈர்ப்பு குறைவதில்லை.
நூலாக வெளிவந்த ராமாயணங்கள் நூறு என்றால், சொற்பொழிவுகளாக, பட்டிமன்றங்களாக, வழக்காடுமன்றங்களாக, கலந்துரையாடல்களாக, விவாதங்களாகக் காற்றில் கரைந்துபோன ராமாயணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். ரசிகமணி டி. கே. சி., கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், புலவர் கீரன், கி. வா. ஜகந்நாதன், அ. ச. ஞானசம்பந்தன், நீதியரசர் மு. மு. இஸ்மாயில் என்று தொடங்கிப் பல்வேறு அறிஞர்கள் ராமாயணக் கதையை, மாந்தர்களை, நிகழ்வுகளை, சாத்தியங்களை, உணர்வுகளைப் பலவிதமாக அலசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நேரில் உட்கார்ந்து கேட்டவர்கள் பாக்கியவான்கள், வேறென்ன சொல்ல?
அபூர்வமாக, இவற்றுள் சில உரைகள்மட்டும் ஒலி நாடாக்களாக, புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன, அவையும் இன்றுவரை விற்பனையில் இல்லை, டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாக்கப்படவும் இல்லை, இனிமேலும் அதற்கான வாய்ப்பு ஏற்படுமா என்று தெரியாது.
இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, விகடன் பிரசுரம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘கம்பனில் ராமன் எத்தனை ராமன்’ உரைத் தொகுப்பு நூல் ஓர் ஆனந்த அதிர்ச்சியாகவே உள்ளது. ’இதையெல்லாம் இந்தக் காலத்துல யார் படிக்கப்போறாங்க’ என்று அலட்சியமாக ஒதுக்காமல் இதனைச் சிறப்பானமுறையில் பதிப்பித்திருக்கும் விகடன் குழுமத்தைப் பாராட்டவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடைபெற்ற ஏழு சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. சுதா சேஷய்யன், கு. ஞானசம்பந்தன், சத்தியசீலன், அறிவொளி, செல்வக்கணபதி, தெ. ஞானசுந்தரம், பெ. இலக்குமிநாராயணன் ஆகியோர் ராமனை மகனாக, மாணவனாக, சகோதரனாக, கணவனாக, தலைவனாக, மனித நேயனாகப் பல கோணங்களில் அலசியிருக்கிறார்கள். கே. பாசுமணி இவற்றைத் தொகுத்திருக்கிறார்.
இந்த நூலின் சிறப்பு அம்சம், சொற்பொழிவுகளின் எழுத்து வடிவம் என்கிற விஷயமே தெரியாதபடி தேர்ந்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைப்போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. எளிமையான மொழி, பொருத்தமான மேற்கோள்கள், ஆசிரியர்கள் (சொற்பொழிவாளர்கள்) பற்றிய நல்ல அறிமுகம் எல்லாம் உண்டு. ஒவ்வொரு கட்டுரையும் அதே பாத்திரத்தை (ராமன்) வெவ்வேறுவிதமாக அணுகுவதால் நமக்கு ஒரு முழுமையான பார்வை கிடைக்கிறது.
தொகுப்பின் மிக நேர்த்தியான கட்டுரை, முனைவர் சத்தியசீலன் எழுதியுள்ள ‘கம்பனில் ராமன் : ஒரு கணவனாக...’. பொதுவாகப் பலரும் விவாதிக்கத் தயங்கும் அக்கினிப் பிரவேசக் காட்சியையே எடுத்துக்கொண்டு அதனை உளவியல் நோக்கில் ஆராய்ந்து தன் வாதங்களைச் சிக்கலில்லாமல் முன்வைக்கும் அவரது லாகவம் எண்ணி வியக்கவைக்கிறது.
இதேபோல், முனைவர் இலக்குமிநாராயணனின் கட்டுரை ராமன் ஏன் ஒரு சிறந்த மாணவன் என்று விவரிக்கிறது. அதன்மூலம் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் என்னென்ன என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறது.
குறைகள் என்று பார்த்தால், ஆழமான கட்டுரைகளுக்கு நடுவே சில மேம்போக்கான கட்டுரைகளும் தலைகாட்டுகின்றன. குறிப்பாக, சில ’பிரபல’ பேச்சாளர்கள் கம்பனைச் சும்மா ஊறுகாய்மாதிரி தொட்டுக்கொண்டு மற்ற கதைகளையே சொல்லி மேடையில் நேரத்தை ஓட்டியிருப்பதை ஊகிக்கமுடிகிறது. அவையெல்லாம் இங்கே பக்க விரயமாகத் துருத்திக்கொண்டு நிற்கின்றன.
இன்னொரு பிரச்னை, கம்பனில் பல ஆயிரம் பாடல்கள் இருப்பினும், பல பேச்சாளர்கள் சுமார் 25 முதல் நூறு பாடல்களைதான் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவார்கள். இந்தத் தொகுப்பிலும் பெருமளவு அவையே இடம்பெறுவது மிகவும் ஆயாசம் அளிக்கிறது. அதிகம் அறியப்படாத அற்புதமான கம்பன் பாக்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்கிற ஆதங்கம் எழுகிறது.
இதுபோன்ற சில சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது ஓர் அருமையான முயற்சி. இன்னும் அச்சு வடிவத்தில் வெளியாகாத நல்ல கம்ப ராமாயண உரைகள் இதேபோல் தொகுக்கப்படவேண்டும். முக்கியமாக, தூர்தர்ஷன் யாரும் பார்க்கமுடியாத நேரங்களில் அடிக்கடி ஒளிபரப்புகிற பழைய கம்பர் கழகச் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டால் புண்ணியம்!
என்.சொக்கனின் வலைப்பதிவு: மனம் போன போக்கில்
கம்பன் FM வலைப்பதிவு: கம்பன் இணைய வானொலி
கம்பனில் ராமன் எத்தனை ராமன்
விகடன் பிரசுரம்
160 பக்கங்கள் : ரூ 70)
விகடன் பிரசுரம்
160 பக்கங்கள் : ரூ 70)
இணையம் மூலம் வாங்க: விகடன் / 600024.காம்
இணைப்புகளுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteஅருமையான அறிமுகம்... சிறப்புப் பதிவரும், என் அபிமான எழுத்தாளருமான சொக்கனுக்கு நன்றி...
ReplyDelete