மனோஜின் "சுகுணாவின் காலைப் பொழுது" சிறுகதை தொகுப்பை வாசிக்கும்போது பாலாஜி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது : "மனித மனதின் நிலையாமை, எதிர்பாராத முடிவை அடையும் இந்தக் கதைகளில் வெளிப்படுகிறது - இதுவரை இருந்த தன் கொள்கைகளுக்கு மாறுபட்ட முடிவை சட்டென எடுக்கும் மனித பொது இயல்பை அடையாளப்படுத்துகிறது," என்று சொல்லியிருந்தார் அவர். மனித மனதின் நிலையாமை ஒன்று. கூடவே, 'நாமொன்று நினைக்க விதியொன்று நினைக்கும்' என்ற வழக்கில் வெளிப்படும் எதிர்பார்த்திருக்க முடியாத சூழ்நிலை மாற்றம், மூன்றாவதாக, வாசகனின் எதிர்பார்ப்புகளோடு விளையாடி கதை சொல்லும் போக்கு என்று குறைந்தபட்சம் மூன்றை இந்த எதிர்பாராத முடிவுகள் குறித்துச் சொல்லலாம். இந்த மூன்றில், எனக்கு முதலாவதுதான் பிடித்திருக்கிறது - வாசகனின் எதிர்பார்ப்புகளைப் புரட்டிப் போடும் கதைகளில் புனைவுத்தன்மை ஓங்கி நிற்கிறது. அது புத்திசாலித்தனம். மாறாக, நாம் இதுவரை அறிந்திருக்காத, ஆனால் உண்மையான ஒரு விஷயம் திடீரென்று வெளிப்படுவதுபோல் பாத்திரத்தின் சுபாவம் கதையின் ஒரு எதிர்பாராத முடிவில் வெளிப்படும்போது அது மிகவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. அது ஒரு புதிய தரிசனம் மாதிரியான ஒன்று, ஒரு அறிதல். இந்த சிறுகதைத் தொகுப்பில் மூன்று வகை கதைகளும் உண்டு.
இதில் உள்ள பன்னிரெண்டு கதைகளில் ஒன்றான "சுகுணாவின் காலைப் பொழுது" என்ற சிறுகதை மூன்றரை பக்க அளவுதான். ஆனால் பிரமாதமான கதை. கணவனை ஆபிஸுக்கும் குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பிவிட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கும் சுகுணாவுக்கு அதுவும் வழக்கப்படியான இன்னொரு காலைப் பொழுதுதான். கதையின் தலைப்பு சொல்வதுபோல் இது சுகுணாவுக்கே உரியதாக இருக்க வேண்டிய காலைப் பொழுது, ஆனால் அப்படியில்லாமல் வீட்டு வேலைகள் அவளை நெருக்குகின்றன. எந்த அளவுக்கு என்பது கதையின் முடிவில் தெரிகிறது - அந்த முடிவில்தான் நாம் சுகுணாவை முழுமையாக அறிகிறோம். இதே போன்ற இன்னொரு கதை, ஆயுதம். உலகெங்கும் வன்முறையாளர்களுக்கு அவர்களின் வேலையை முடித்துத்தர ஆயுதங்களும் பலிகளும் கிடைக்கின்றன. போஸ்னியா, சென்னை, ஆப்கானிஸ்தான் என்று கதை வெவ்வேறு இடங்களில் நிகழ்வதைச் சொல்கிறது. போஸ்னியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் போர்ப்படை, கே கே நகரில் பத்திரிக்கை. எல்லா இடங்களிலும் பலிகள் தேவைப்படுகின்றன, அவை இருப்பை நியாயப்படுத்துகின்றன. முடிவு ஓரளவுக்கு எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கிறது என்றாலும் நமக்கு ஏமாற்றமாக இல்லை - இந்தக் கதை எழுப்பும் கேள்விகள் நாம் பலமுறை கேட்டுக்கொண்ட ஒன்று : ஒரு விபத்தைப் புகைப்படம் எடுப்பவன் அந்த நேரத்தில் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கலாமே? ஆனால் அதையே ஆவணப்படுத்தி அதை அடுத்தவருக்கு எடுத்துச் செல்லும் பொறுப்புதான் சிலருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், இரண்டுமே முக்கியமான கடமைகள்தான். இந்த மாதிரி எந்த நியாயப்படுத்தலும் இல்லாமல், கசப்பு மருந்தை சாப்பிடுபவனிடம் காணப்படும் இறுக்கத்துடன் சொல்லப்பட்ட கதை.
'நடிகன்' கதையில் பள்ளி நாடகத்தில் நடிக்க படுபயங்கர ஆயத்தங்கள் செய்கிறான் மகன், அவனுக்கு மனைவியும் உடந்தை. கடைசியில் முடிவு வேறு மாதிரி இருக்கிறது - கதையைவிட அது சொல்லப்படும் விதம் நன்றாக இருக்கிறது. 'கோலாலம்பூர் நைட் கிளப்பில் ஒரு சனிக்கிழமை' கதையையும் இதைப் போன்ற ஒன்றாகச் சொல்லலாம். கோலாலம்பூர் போன இடத்தில், கூடாநட்பால் அடிபட்டு திரும்பும் கதை. இதையும் கதை சொல்லப்பட்ட விதத்துக்காக மீண்டும் மீண்டும் படிக்க முடிகிறது. 'ராஜகோபாலின் காதல்கள்' ஏறத்தாழ ஒரு டெம்ப்ளேட் கதை. நன்றாக எழுதியிருக்கிறார் என்பதால் இதையும் திரும்ப வாசிக்க முடிகிறது.
'மரணத்தின் மணம்' கதையின் நாயகனுக்கு இனி நடக்கப்போகும் துர்ச்சம்பவங்கள் முன்கூட்டியே தெரிந்து விடுகின்றன. என்ன நடக்கும் என்பது துல்லியமாகத் தெரிவதில்லை, ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்று தெரிகிறது- உதாரணத்துக்கு ஒரு ரயில் பெட்டியில் ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்று ஓடுகிறான், அவன் எதுவும் செய்வதற்குமுன் ஒரு சிறுமி கீழே விழுந்து செத்துப் போகிறாள். ஒரு வீட்டில் இந்த மாதிரியான மரணத்தின் மணம் வீசுகிறது, அங்கிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற உள்ளே ஓடுகிறான். அந்த வீட்டில் இருப்பவர்கள் உள்ளே வர விடாமல் தடுக்கிறார்கள், அவர்களையும் மீறி உள்ளே போய் குழந்தையைக் காப்பாற்றுகிறானா என்ன என்பதுதான் கதை. "இரும்புக் கதவு" என்ற கதையில் ஒரு பாட்டி தனியாக இருக்கிறாள், கிராமத்துக்காரி. ரோடு வெறிச்சோடி இருக்கிறது, வழியோடு போகிறவனை பேச்சுத் துணைக்கு உள்ளே அழைத்துக் கொள்கிறாள். அவன் பார்க்க அப்படி ஒன்றும் நல்லவனாக இல்லை. கதையின் கடைசி வாக்கியம் வரை என்ன நடக்கப் போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பில்தான் வாசிக்கிறோம். 'அருகில் ஒருவன்' கதையில் வருபவர்கள் வித்தியாசமானவர்கள். வாடகை கொடுக்காமல் வீட்டை ஆக்கிரமிக்கும் ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட ஒருவர் பஸ் ஸ்டாண்டில் இளைஞன் ஒருவனைப் பார்க்கும்போது அவரது தற்பாலின வேட்கைகள் தூண்டப்படுகின்றன, இந்த மனிதருக்கு பத்திரிக்கையாளர் என்ற பெயரில் ப்ளாக்மெயில் செய்பவர் துணை. மூன்று கதைகளிலும் நம் எதிர்பார்ப்புகளோடு விளையாடுவதான முடிவுகளைத் தந்திருக்கிறார் மனோஜ்.
'வெயில் வட்டம்' மற்றும் 'ஆப்ரேட்டர் அழகு' இந்த இரு சிறுகதைகளிலும் பள்ளிகால நினைவுகள் மிகவும் நன்றாக வெளிப்பட்டிருக்கின்றன. எதிர்பாராத முடிவுகளைக் கொண்டு கதைக்கு ஒரு புதிய திறப்பைக் கொடுத்து முடிப்பது இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளின் பொதுத்தன்மை. இவை இரண்டிலும் இது உண்டு, ஆனால் வெயில் வட்டத்தில் ஒரு உணர்வாக அது இருக்கிறது, ஆப்ரேட்டர் அழகுவில் புரிதலாக இல்லாமல் வெறும் தகவலாக நின்று விடுகிறது, சில கதைகளில்தான் மனித இயல்பின் உணர்த்தலாக இருக்கிறது.
நம்பிக்கையின் எல்லைகளைப் பேசும் 'எலோயி எலோயி லெமா சபக்தானி' ஒருவன் ஒரு விஷயத்தில் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைக்கலாம் என்ற கேள்வியை எழுப்புகிறது. நமது தீவிரமான நம்பிக்கைகள் அவற்றின் விளைவுகளுக்காக மட்டுமே ஆதரிக்கப்படுகின்றன, மற்றபடி நம்பிக்கைகளின் ஆதாரங்கள் எந்த நாளிலும் கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை. இந்தக் கதையிலும் 'வெளியேற்றம்' கதையிலும் நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்ட துவக்கங்கள் நினைத்த திசையில் செல்வதில்லை. எதுவரை செல்லலாம் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் சந்தர்ப்பங்களால் உந்திச் செல்லப்படும்போது பயங்கர விளைவுகளைச் சந்திக்க நேர்கின்றது.
எதிர்பாராத முடிவுகளை அடையும் கதைகள் மனித மனதின் நிலையாமையை, தானறியாத தன் முகத்தைக் காட்டும்போது மிக நல்ல கதைகளாக இருக்கின்றன. வெளியேற்றம் கதையில் வரும் ஒரு பக்கத்தை இங்கே மேற்கோள் காட்டுகிறேன், இதில் உள்ள நுட்பம் இந்தக் கதைகள் நெடுகவும் இருந்திருந்தால் அபாரமான கற்பனை, சுவாரசியமான நடை, நல்ல கிராஃப்ட் என்பதையும் தாண்டி இந்தத் தொகுப்பில் உள்ள மற்ற கதைகளும் "சுகுணாவின் காலைப் பொழுது" போல் இன்னும் பிரமாதமான கதைகளாக வெளிப்பட்டிருக்க முடியும்.
௦௦௦
வெளியேற்றம் கதையின் ஒரு பகுதி :
இதையும் கடந்து பஷீரின் மேல் ஈர்ப்பு வந்தது அவரது கருணை பொங்கி வழியும் கதைகள் மூலம்தான். மனிதர்கள் மீதான அவரது அன்பும், கருணையும் அவரது தந்தை வழி கிடைத்தது என்பதையும் அதன் கதையையும் அறிந்தபோது எனக்குள் உத்வேகத்தின் சிலிர்ப்பு ஏறியிருந்தது. பெருமழையால் ஊருக்குள் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஊழித் தாண்டவம். ஆறு பிள்ளைகளைக் கொண்டது பஷீரின் குடும்பம். பஷீர் மூத்த பிள்ளை. வீட்டுக்குள் வெள்ளம் ஏறுகிறது. திண்ணை வரை தண்ணீர் உயர்ந்து அலைமோதுகிறது. விஷத் தேள் ஒன்று திண்ணையில் ஒதுங்குகிறது. அதை அடித்துக் கொல்ல முயல்கிறார்கள். ஆனால் பஷீரின் தந்தை அவர்களைத் தடுக்கிறார். 'பெருமழையிலிருந்து தப்பி நம்மிடம் அடைக்கலம் கேட்டு வந்திருக்கிறது. அதை கொள்வது பாவம்," என்கிறார். வீட்டுக்குள் சுதந்திரமாக வளையவருகிறது தேள். பஷீரின் தாயின் தோள் மீது ஏறி பயம் காட்டுகிறது. வீட்டில் எல்லோரும் எதிர்ப்பு காட்டியதை அடுத்து, அந்த தேளை ஒரு சின்ன சட்டிக்குள் வைத்து தண்ணீரில் மிதக்க விடுகிறார். ஓடும் நீரில் எங்காவது கரை ஒதுங்கி பிழைத்துக் கொள்ளும் என்கிறார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக நடக்கிறது. அந்த சட்டி ஒரு அரை வட்டம் அடித்து மீண்டும் வீட்டோரமாகவே ஒதுங்குகிறது. இப்போது சட்டிக்குள் ஒரு இலை துண்டைப் போடுகிறார் பஷீரின் தந்தை. மறுபடி சட்டியை மெதுவாக தள்ளி விடுகிறார். தண்ணீரில் மிதந்து செல்லும் சட்டி எங்காவது மரத்தடி வேரில் தட்டி நிற்கும்போது, இலைத் துணுக்கு வழியாக மேலேறி வந்து தேள் பிழைத்துக் கொள்ளும் என்று சொல்கிறார். இந்த கனிவும் இரக்கமும்தான் பஷீரிடம் ஒட்டிக கிடந்தது. அதுதான் அவர் கதைகளிலும் வழிந்தது.
கோழிக்கொட்டின் வட்டக்கிணறு என்ற இடத்தில் நின்றிருந்தேன். அங்கிருந்து பஸ்சில் ஏறி நடுவட்டம் மாகி என கேட்கச் சொன்னார்கள்.நடுவட்டத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். ஒரு இடைவழி. தாவரச் செழுமையில் நிழல் அடர்ந்து கிடந்த பாதை நீண்டு போனது. வளைகுடா பணத்தில் மினுங்கிய ஓரிரு பெரும் வீடுகள் ஆங்காங்கே தென்பட்டன. மற்றபடி கேரள பாரம்பர்யத்தின் அழகு கொஞ்சும் ஓட்டு வீடுகள் பரம்புகளுக்குள் அழுந்திக் கிடந்தன. சைக்கிள் சிறுவன் ஒருவனை நிறுத்திக் கேட்டேன். அவன் சுட்டிய இடம் நோக்கி நடந்தேன். மாவும் தென்னையும் குலைந்து வளைந்து கிடந்த இடத்தை தாண்டி வீட்டின் முன் மறக்கைகள் நீண்ட சாய்வு நாற்காலியில் என் நாயகன் அமர்ந்திருந்தார். நீளமான மண் பரப்புக்கு பின்னே வீடு இருந்தது. பதட்டமும் பரவசமுமாக உள்ளே செல்ல காலடி வைத்தேன்.
"ஆரு" என்று அதிரும் குரல் அங்கிருந்து வந்தது.
கால்கள் ஆணியடித்தது போல் அங்கேயே நின்றுவிட்டது. தயக்கம் சூழ்ந்து தடுமாற வைத்தது. மறுகணம் திரும்பி நடந்தேன். "ஆரானு" என்று மறுபடி முதுகுக்குப் பின் குரல் தேடி வந்தது. விறுவிறுவென நடந்தேன். தளர்ந்து கிடக்கும் மனத்தை மீண்டும் ஒடித்துவிட்டால் என்ற பயம்தான் தயங்கியதற்கு காரணமாக இருக்க வேண்டும். எழுத்தோடு நிறுத்திவிட வேண்டும். எழுத்துக்காரனை சந்திப்பதால் என்ன வந்துவிடப் போகிறது என்று நினைத்தேன். சலிப்பும் வேதனையும் மிஞ்சியது. ஆளறியா இடத்தில் உயிரை மாய்த்துக் கொள்வதே இனி வழி.
No comments:
Post a Comment