”புழல் ஜெயிலுக்குப் போயிடப் போறே”, என்ற மிரட்டல் இன்றைய காலகட்டத்தில் நம்மவர்களிடையே சகஜமாக இருக்கிறது. புழல் ஜெயிலுக்கு முன் இந்த மிரட்டலுக்கு நம்மவர்கள் வாயில் வந்து விழுந்தது “வேலூர் ஜெயில் ”. இவை இரண்டும் நம்மவர்களைப் பொருத்தவரை “ஃபேமஸ் ஜெயில்கள்”. அதுபோல ஆங்கிலேயர்கள் காலத்தில் பிரபலமான ஒன்று “அந்தமான் ஜெயில்”. ஒரு “மிரட்டல்” சிறை.
அந்தமான் நிக்கோபார் தீவுகள். உலக வரைபடத்தில் மியான்மருக்கும், மலேசியாவுக்கும் பக்கத்தில் இருந்தாலும் இவை இந்தியாவின் பகுதிகள் என்பது நாம் அறிந்த விஷயம். சோழர் காலத்தில் கங்கை கொண்ட ராஜேந்திர சோழன் இந்தத் தீவுகளின் மேல் படையெடுத்து வென்ற சரித்திரமெல்லாம் இருக்கின்றது.
அந்தமான் செல்லுலார் சிறை - இந்தத் தீவுகளில் உள்ள ஒரு தேசிய நினைவுச் சின்னம். இங்கே உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு நினைவுத் தூணும் இங்கே இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தவறாமல் போய் பார்க்கும் ஒரு இடம். கைதிகளின் தகவல்கள், சிலைகள், அருங்காட்சியகம், தூக்கு மேடை, புகைப்படக் கண்காட்சி - ஆகிய அனைத்தும் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஆனால், இவற்றின் பின்னால் உள்ள வரலாறு எப்படிப்பட்டது? சுதந்திரப் போராட்ட வீரர்கள், கைதிகள் போன்றோர் இந்தத் தீவுகளில், சிறையில் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர் என்கிற இருநூறு ஆண்டு வரலாற்றை சொக்கனின் இந்தப் புத்தகத்தில் படிக்கலாம்.
1789ம் ஆண்டு முதல்முதலாய் இந்தத் தீவுகளில் நம்மால் வசிக்க முடியுமா என்று பார்க்க வந்த ஆங்கிலேயர்கள் முதல், இந்திய சுதந்தரப் போராட்டத்தின் ஒரு பகுதியாய், 1937ல் இங்கு இருந்த கைதிகள் செய்த 36 நாள் போராட்டம் வரை, பற்பல சம்பவங்கள், திருப்பங்கள் மற்றும் இங்கே அரங்கேறிய கொடூரங்களை இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
இங்கிருந்த கைதிகளின் விடுதலைக்காக காந்தியடிகள், இரவீந்திரநாத் தாகூர் முதல் பல தேசியத் தலைவர்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இங்கு நேரடியாகவே வந்து சிறையை பார்வையிட்டிருக்கிறார். இவர்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபட்டதால், 1937 முதல் இங்கிருந்த அரசியல் கைதிகள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு இந்தியாவில் மற்ற சிறைகளில் அடைக்கப்பட்டனர். தீவையே காலி செய்யும் நிலைமைக்கு ஆங்கிலேயர் வந்தனர்.
1897ல் கட்டப்பட்டு, 1906 முதல் கைதிகளை அடைக்கத் தொடங்கிய இந்த செல்லுலார் சிறை 700 அறைகள் (செல்கள்) கொண்டது. அறைக்குள் இருபுறமும் கனமான முழுச் சுவர்கள். ஓரளவுக்கு வெளிச்சம் தரும் ஒரு சிறிய ஜன்னல். ஒருவர் கூட படுக்கமுடியாத அளவிற்கு ஒரு சிறிய கட்டில். இதுதான் அந்தமான் ஜெயில்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை என்றால், பாக்கி 12மணி நேரம் இதுதான் கைதிகளுக்கு தனிமைச் சிறை. அவர்களுக்கு கொடுக்கும் வேலைகள் எப்படிப்பட்டது? தேங்காயிலிருந்து நார் உரிப்பது, கயிறு திரிப்பது, செக்கிழுத்து கொப்பரைத் தேங்காயிலிருந்து எண்ணெய் எடுப்பது - இவை படிப்பதற்கு சுலபமாக இருந்தாலும், இந்தக் கொடுமைகளின் விளைவாக பல கைதிகள் தற்கொலை செய்துள்ளார்கள், பலருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது என்று படிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
சிறையில் சாப்பாடாவது நன்றாக இருக்குமா என்றால் அதுவும் கிடையாது. இந்துக்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு என இரு சமையலறைகள் இருந்தாலும் மெனு ஒன்றேதான் - வெந்தும் வேகாத சப்பாத்தி, சாதம், பருப்பு & பொரியல்.
எந்த வகைக் கைதிகள் இங்கே அனுப்பப்பட்டனர்? முதலில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை மட்டுமே அனுப்பி வந்தனர். 1857 முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு இந்தியா முழுவதும் அங்கங்கே போராட்டங்கள் துவங்கிவிட்டன. அரசியல் கைதிகள் அதிகமாகி விட்டனர். இவர்களுக்கு சரியானபடி தண்டனை வழங்கினால்தான் மற்றவர்கள் பயப்படுவார்கள் என்று எண்ணி, 1909ல் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் மட்டுமல்ல, எந்த வகைக் கைதிகளானாலும் சரி, அந்தமானுக்கு அனுப்பலாம் என்று ஆணை பிறப்பித்தனர்.
முக்கியமான கைதிகள் சிலரைப் பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் உள்ளது. சாவர்க்கர் சகோதரர்கள், ஆங்கிலேய வைஸ்ராய் மாயோ பிரபுவை கொன்ற ஷேர் அலி, கடுமையான தண்டனைக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்ட இந்து பூஷன் ஆகியோரைப் பற்றியும், அங்கு பணிபுரிந்து கொண்டு கைதிகளுக்கு அயராது மருத்துவம் பார்த்த டாக்டர் திவான் சிங் பற்றியும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
சிறையின் அமைப்பு, ஆங்கிலேய அதிகாரிகள், கைதிகளை கொடுமைப்படுத்தும் தண்டனை விவரங்கள் ஆகிய இன்னும் பல விஷயங்களை இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த செல்லுலார் சிறையில் மிகக் கொடூரமான நிலையில் துன்புறுத்தப்பட்டும் இந்திய சுதந்தரப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்களைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
***
அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - என்.சொக்கன்
பக்கங்கள்: 152 / விலை: ரூ.100
கிழக்கு பதிப்பகம்.
இணையம் மூலம் வாங்க: கிழக்கு
மிக நல்ல அறிமுகம் சத்யா..:)
ReplyDeleteMany Thanks for introducing my book in this series, Sathya!
ReplyDelete: N. Chokkan,
Bengalooru.