எண்பதுகளின் ஆரம்பத்தில் சுஜாதா எழுதிய ஒரு மிக சுவாரசியமான சின்ன நாவல்.
வெளியே பார்த்தான். சோர்ந்த மாடு ஒன்று வாயில் நுரையுடன் வர்ணக் கொம்புகளை ஆட்டிக் கொண்டு வண்டியிழுக்க அதை அனாவசியமாக, “இந்த!” என்று அதட்டி வண்டிக்காரன் ஒரு வீறு வீறினான்.
சுளீர் என்று புண்ணியகோடியின் உடம்பில் அந்த அடி பட்டது!
“ஏண்டா! அடிமடியிலேயே கையை வைக்கறீயா! போனாப்போறதுன்னு ஏழை அனாதைன்னு வீட்டில வேலை கொடுத்து வீட்டோட வைச்சுக்கிட்டா இந்த வேலை செய்றீயா நீ! ராஸ்கல்” பழையபடி ஒரு சுளீர்
|
ஒரு காட்சியின் முடிவைக் “கட்” செய்து அதே காட்சியில் முடியும் நிகழ்வை வைத்து அடுத்த காட்சியை “ஓபன்” செய்யும் டெக்னிக் சமீபகாலமாக நம் சினிமாக்கள் கற்ற வித்தை. இதை இப்படி எண்பதுகளின் ஆரம்பத்திலேயே தன் நாவலில் புகுத்தியிருக்கிறார் சுஜாதா. நம் சினிமா ஜனங்கள் அவரிடம் கட் செய்துகொண்டு தங்களிடம் அந்த வித்தையை ஓபன் செய்து கொண்டுவிட்டன.
நாராயணன் என்று ஊர் உலகுக்குத் தன்னை சொல்லிக் கொள்ளும் புண்ணியக்கோடி ஒரு லோக்கல் கிரிமினல். சின்னத் திருட்டு, பெரிய கொள்ளை, கிட்டத்தட்ட கொலை என்று செய்தவன். இந்தக் கதையின் நாயகன். ஜெயிலுக்குப் போய் அங்கிருந்து தப்பி வந்தவன். விதிவசத்தால் துரத்தப்பட்ட, துணையற்ற திலகம் அவனுக்கு அறிமுகம் ஆகிறாள். இவளுக்குத் துணையாய் அவனும், அவனுக்கு ஆதரவாய் அவளும் என நாட்கள் நகர்கின்றன.
எல்லா ஜில்லாக்களிலும், மாநிலங்களிலும் தேடப்படுபவன். சிறை தப்பியவனைத் தேடும் உள்ளூர் இன்ஸ்பெக்டராக தர்மலிங்கம் வருகிறார். நாராயணன் தப்பியோடும் தடங்களைத் தொடர்ந்து அவனை நெருங்கி நெருங்கி வருகிறார். கட்டிட வேலை, தச்சு வேலை, எனத் தப்பியோடலில் பிழைப்பை மாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கிறான் நாராயணன்.
திலகத்தின் வருகை அவனது ஓட்டம் கொண்ட வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. அவன் வீட்டில், தினப்படி செயல்களில் நேர்த்திகளைக் கொண்டு வருகிறாள் அவள். தன் வாழ்க்கையின் தப்பியோடும் ஓட்டத்தை ஒருபுறம் நிறுத்திவிட்டு அவளுக்காய் உலகின் ஏதோ மூலை ஒன்றில் வாழ்ந்துவிட விழைகிறது அவன் மனம்.
திலகத்தின் வாழ்க்கைப் புதிரின் முடிச்சுகளை அவன் அவிழ்க்கையில் அது ஒரு சுவாரசிய முடிவை நோக்கி அவனைக் கொண்டு செல்கிறது. கதை நிறைகிறது. கதை நிறைகையில் ஒரு நல்ல த்ரில்லர் சினிமா பார்த்த அனுபவ்த்தைத் தருகிறார் சுஜாதா.
கதையின் அந்த அழகான முடிவு இன்றைக்கு நிறைய சினிமாக்களுக்கு குறும்படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாகக்கூடும்.
குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள், குற்றங்கள் நடப்பதன் பின்னணி என்ன, குற்றங்களை எப்படித் தடுக்க வேண்டும் என்ற வியாக்கியான ஜல்லியடிகள் கதையில் இருந்தாலும், அவற்றையெல்லாம் ஓங்கியொலிக்கும் குரலாய்த் தனியே தராமல் கதையின் போக்கில் சாமர்த்தியமாய்ச் சொல்கிறார் ஆசிரியர்.
தொடக்கம் முதல் இறுதிவரை நாராயணனோடே பயணிக்கிறது கதை. முதலாளி தன் மீது கொள்ளும் நம்பிக்கையில் அவன் பெறும் சந்தோஷம், திலகம் அவன் மேல் காட்டும் பிரத்யேகக் கரிசனத்தின் பேரானந்தம், அவனது தப்பியோடல்கள், வேலை செய்யும் இடத்தில் தன் அடையாளம் மறைக்கும் சாமர்த்தியம், திலகத்தைக் கத்தி வீசிக் காப்பாற்றுவது என்று கதை பயணிக்க ஒரு கட்டத்தில் அந்தக் கதையின் பயணத்தில் நாமே நாராயணன் ஆகிவிடுகிறோம்.
தர்மலிங்கம் நாராயணனை நெருங்க நெருங்க நாம் கொள்ளும் பதைபதைப்பும், எழுத்தில் வாழும் அந்தத் திலகத்தின் வசீகரத் தோற்றம் நமக்குத் தரும் கிளர்ச்சியும், நாராயணனுக்குத் திலகம் கிடைத்துவிட வேண்டும் என்ற நம் அவாவும் ஆசிரியரின் எழுத்து சாமர்த்தியம்.
கதையின் ஆரம்பத்தில் தர்மராஜனாக அறிமுகமாகும் இன்ஸ்பெக்டர் ஆசிரியரின் / (நான் வாசித்த 2008 பதிப்பின்) ப்ரூஃப் ரீடர்களின் கவனமின்மையால் கதையின் போக்கில் தர்மலிங்கமாக மாறிவிடுவது நல்ல வேடிக்கை.
திலகத்தை விரட்டும் உள்ளூர் ரௌடிகள் பகுதியின் லேசான சினிமாத் தன்மையும், அவளது ஃப்ளாஷ்பேக் பகுதியின் அதீத சினிமாத் தன்மையும் தவிர்த்துப் பார்த்தால் “என்றாவது ஒருநாள்” மிகமிக சுவாரசியமான ஒரு நாவல்.
என்றாவது ஒருநாள் - சுஜாதா
136 பக்கங்கள் - ரூ.80/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு / 600024.காம்
மறுபடியும் படிக்க சுவாரசியமாக இருந்தது... நன்றி...
ReplyDelete