Name : The Inheritance of Loss
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து, சென்னையில் இருக்கும் ஒரு வாடகை நூலகத்திற்கு சென்றேன், இனிமேல் அடிக்கடி இந்த இடத்தில் புத்தகம் எடுத்து படிக்கலாம் என்று நினைக்கும்போதே, மனம் ஒரே சமயம் குதூகலமாகவும், இவ்வளவு நாட்களாக இத்தனை புத்தகங்களைப் படிக்க முடியாமல் இருந்ததே என்று வருத்தமாகவும் ஆகிவிட்டது. என்ன புத்தகம் எடுப்பது என்ற குழப்பத்தில் சுற்றிச் சுற்றி வந்தபோதுதான் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. இதை எடுக்க ஒரே காரணம் 2006ஆம் ஆண்டு இந்த புத்தகத்திற்கு "Man Booker" பரிசு வழங்கப்பட்டது என்பதுதான்.
Author : Kiran Desai
Published by :Penguin books
Photo courtesy : Penguin/wikipedia
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து, சென்னையில் இருக்கும் ஒரு வாடகை நூலகத்திற்கு சென்றேன், இனிமேல் அடிக்கடி இந்த இடத்தில் புத்தகம் எடுத்து படிக்கலாம் என்று நினைக்கும்போதே, மனம் ஒரே சமயம் குதூகலமாகவும், இவ்வளவு நாட்களாக இத்தனை புத்தகங்களைப் படிக்க முடியாமல் இருந்ததே என்று வருத்தமாகவும் ஆகிவிட்டது. என்ன புத்தகம் எடுப்பது என்ற குழப்பத்தில் சுற்றிச் சுற்றி வந்தபோதுதான் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. இதை எடுக்க ஒரே காரணம் 2006ஆம் ஆண்டு இந்த புத்தகத்திற்கு "Man Booker" பரிசு வழங்கப்பட்டது என்பதுதான்.
வாழ்க்கையில் நாம் எதிர்க்கொள்ளும் நிகழ்ச்சிகள், கடந்துபோன விஷயங்கள் முக்கால்வாசி நேரங்களில் கசப்பான அனுபவங்களாகவே இருக்கின்றன, எவ்வளவுதான் நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், கடந்துபோன கெட்ட நிகழ்வுகள், பல் இடுக்கில் மாட்டிக் கொண்ட ஏதோ ஒன்று போல, ஞாபகங்களில் மேலெழுந்து முட்டி மோதி, வாழ்க்கையை இன்னும் கொடுமையானதாகக மாற்றிக்கொண்டேதான் இருக்கின்றன. வயது ஆக ஆக தனிமையும், தனித்து இருக்கும் நேரமும் கூடிக் கொண்டே போகும்போது, நிகழ்காலத்தில் நடக்கும் சிறு நிகழ்வும், பழைய நினைவுகளைக் கிளருகின்றன, ஆனால் எந்த ஒரு நினைவும், வாழ்க்கையில் நாம அதைக் கடந்து சென்ற காலவரிசையின் நேர்கோட்டில் வருவதில்லை. அங்கங்கே நினைவின் சிறு அலைகளாக எழுந்து உணர்வுகளைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன.
கிரண் தேசாயின் "The Inheritance of Loss" என்ற இந்த நாவலில் வரும் சம்பவங்கள் நேர்க்கோட்டில் விவரிக்கப்படுவதில்லை. சிறு சிறு நிகழ்வுகளாக, நிகழ்காலமும் -கடந்து போன நிகழ்வுகளும் மாறி மாறி வருகின்றன
ஜட்ஜ் ஜெமுபாய் படேலின் மகளும்-மருமகனும் இறந்து விட்டதால், அவரது பெயர்த்தி சாய்(sai) ஒன்பது வயதில் டெஹ்ராடூன் பள்ளியிலி ருந்து வெளியேறி ஜட்ஜ் உடன் இருக்கிறார். இவர்களுடன் (the cook) சமையல் செய்பவரும் உடன் இருக்கிறார். டார்ஜலிங் மாவட்டத்தில் உள்ள 'களிம்போங்' என்ற இடத்தில் கதை நடக்கிறது. சமையல்காரரின் (the cook- முக்கால் வாசி இடங்களில் இப்படி தான் அழைக்கப்படுகிறார்) ஒரே மகன் பிஜு(biju) அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் வேலை செய்கிறார். 1986ஆம் ஆண்டு கோர்கா தனி மாநிலம் வேண்டி நடக்கும் போராட்டத்தின் உச்சகட்டத்தில், இந்த கதை மாந்தர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதே கதையின் சாராம்சம்.
கதையின் முக்கிய கூறுகளாக இருப்பவை குற்றணர்ச்சி, தனிமை, தொலைந்த சுயத்தைத் தேடுதல், கதைமாந்தர்கள் முக்கியமாக ஆங்கிலேய ஆட்சியில் சில காலம் வாழ்ந்ததால், அதன் பாதிப்பு விலகாமல் நிறைய ஆங்கிலேயே பழக்கவழக்கங்களுடன் இருத்தல் , அதனால் சுயத்தை தொலைத்து விடுதல். ஒட்டுமொத்த கதையை விட கதை மாந்தர்களின் தனி குணாதிசயங்கள் பற்றி நாவல் பேசுவதே குறிப்பிடத்தக்க அம்சம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஜெமுபாய் படேல் குஜராத்தில் இருந்து லண்டன் சென்று ஐசிஎஸ் பரீட்சை தேறியவர். சிறு வயதில் படிப்பில் நன்றாக தேறியதால், தந்தையின் கடுமையான ஆணைக்கு இணங்க லண்டன் செல்கிறார். விருப்பம் இல்லாமல் லண்டன் சென்றதால், தந்தை மேல் கோபம், அங்கு சென்று சரியாக ஆங்கிலம் பேச முடியாமை, மிகுந்த மன உளைச்சல்களுக்கு இடையே ஐசிஎஸ் தேறுதல், ஆங்கிலேயர்களுடன் சரியாக பழகாமல், லண்டன் சென்று படித்து விட்டு வந்ததால், இங்கு உள்ள மக்களுடன் பழக முடியாமல், இரு வேறு உலகங்களில் வாழ்கிறார். ஒருவகையில் அவர் தன் சுயத்தை இழந்துவிட்டவர். சொந்த மனைவியை வீட்டை விட்டு விலக்கி வைக்கிறார். வளர்ப்பு நாயின் மேல் பாசத்துடன் இருக்கிறார்.
சாய் (Sai),ஜெமு பாயின் மகள் வயிற்று பெயர்த்தி, சாய் ஒன்பது வயதாக இருக்கும்போது ,தந்தையும்- தாயும் (அவர்கள் ரஷ்யாவில் தங்கி பணியாற்றிக் கொண்டு இருக்கும்போது) இறந்து விடுகின்றனர். சிறு வயதில் டேஹ்ராடூனில் உள்ள கிருத்துவ பள்ளியில் படிக்கிறாள். ஆங்கில பழக்க வழக்கங்கள், பெற்றோர் இல்லாமல் தனிமை, தாத்தாவுடன் தங்கி இருந்தாலும் அவரின் அன்புக்காக ஏங்குதல், டியூஷன் கற்றுக் கொடுக்க வரும் , மலைவாழ் இளைஞனான ஞான்(Gyan) உடன் காதல், கோர்கா தனி மாநில கோரிக்கைக்காக ஞான் (gyan) போராட்டத்தில் பங்குபெறுதல், அதனால் இருவருக்கும் இடையே வரும் சண்டை என ஒரு பகுதி செல்கிறது.
தி குக் (the cook), தன்னுடைய மகனை (biju) சுற்றுலா விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்க அனுப்புகிறார், அங்கேயே கிரீன் கார்டு வாங்கிக் கொண்டு இருந்து விடச் சொல்கிறார். தன்னுடைய தந்தை வலுக்கட்டாயமாக தன்னை அமெரிக்கா அனுப்பியதை வெறுக்கும் அதே வேளையில், அமெரிக்கா அனுப்பாமல் இருந்தாலும் வெறுக்கும் சூழ்நிலைக்கு பிஜு ஆட்படுகிறான். தான் விரும்பிச் செய்யும் விஷயத்தையும் மனிதன் வெறுக்க நேரிடும் மனநிலையை காட்டுகிறார் கிரண் தேசாய். அமெரிக்காவில் கடும் கஷ்டத்தில் இருக்கும்போது, இங்கே கோர்கா போராட்டம், உச்ச கட்டத்தை அடையும்போது, தந்தையுடன் மீண்டும் இணைவதுடன் கதை முடிகிறது.
நாவலின் சிறப்பம்சங்கள்: இயற்கையை மிக அழகாக விவரிக்கிறார், பல இடங்களில் , மலை சார்ந்த இடங்களை , கண் முன் நிறுத்துகிறார். மனித மனத்தின் உளைச்சல்கள், நாவல் கால சுழற்சியில் முன்னும் பின்னும் சென்று வருவதும், அதனுடன் ஏற்படும் நிகழ்கால ஒப்பிடும் ரொம்ப சிறப்பு, முதல் நூறு பக்கங்கள் கொஞ்சம் கடினமான மொழி நடை, படிக்க கஷ்டமாக இருந்தது, அதற்கு அப்புறம் கொஞ்சம் வேகமாகவே படித்து விட்டேன்.
சுருக்கமாக சொல்வது என்றால், சுதந்திரத்திற்கு பின் ஆங்கிலக் கல்வி பெற்ற மக்களிடையே நிலவிய இரு வேறு மனநிலைகள், கோர்கா போராட்டத்தினால், மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்களான இவர்கள் தனிமைப்படுத்தப்படும் விதமும், இந்த போராட்டத்தின் விளைவாக கதை மாந்தர் ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் மனமாற்றமும்தான் இந்த நாவல் பேசும் விஷயங்களாகின்றன. மலை பிரயாணம் செய்யும் போது ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் போல், பயணம் செய்த பின், ஒரு விதமான குதூலகமும்- அயர்ச்சியும் இந்த நாவல் படித்துபின் உணரமுடிகிறது.
No comments:
Post a Comment