ஒரு கடையில் பாரதியார் பற்றிய
புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, இந்தப் புத்தகம் அகப்பட்டது. முன்னட்டை மடிந்து
உடைந்து போய், மொத்தப் புத்தகமும் பழுப்பேறிப்போய் இருந்தது. முதல் பதிப்பு 1980ல்
வெளிவந்திருக்கிறது. நான் வாங்கியது 1990ல் வெளியான இரண்டாவது பதிப்பு. இருபத்தைந்து
வருடத்திற்கு மேல் அந்தப் புத்தகம் பத்திரமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
அதற்கு முன் அறிந்திராத பல விஷயங்களை இந்தப் புத்தகத்திலிருந்து தான் அறிந்து கொண்டேன்
என்பதால், இதை ஒரு முக்கியமான ஆவணமாக நினைக்கிறேன்.
பாரதியாரோடு தொடர்புடைய இருவரைப்
பற்றிய தகவல்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன. ஒருவர் அரவிந்தர், மற்றொருவர் குள்ளச்சாமியார்.
மற்ற புத்தகங்களோடு ஒப்பிடும் போது சில விஷயங்கள் வேறு மாதிரியாகவும் சொல்லப்படுகிறது.
பாரதியின் வாழ்க்கையும் அவர் தொடர்பு கொண்ட மனிதர்கள் பற்றிய தகவல்களும் புத்தகத்தின்
ஒரு சிறு பகுதியில் அடங்கிவிடுகின்றன. மற்றவை எல்லாம் பாரதியின் எழுத்துக்களும் பாரதியைப்
பற்றி மற்றவர்கள் எழுதியதும் தான்.
‘சித்தக்கடல்’ என்ற சிறு நூலை
இந்த புத்தகத்தில் தான் முதலில் படிக்க நேர்ந்தது. ‘சித்தக்கடல்’ என்பது கட்டுரையோ
கவிதையோ அல்ல. அது பாரதியின் எண்ண ஓட்டம்; ஒரு டைரி மாதிரி. 1915 ஜூலை ஒன்று மற்றும்
இரண்டாம் தேதியிட்டு எழுதியிருக்கிறார்.
மனமாகிய குரங்கு செய்வதையெல்லாம் எழுதிக் கொண்டு போனால் காலக்கிரமத்தில் அதை வசப்படுத்திவிடலாம் என்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்குமுன்பாக அதன் இயல்புகளையெல்லாம் நாம் அறிந்துகொள்ள வேண்டும். நம்மால் நன்றாக அறியப்படாததை நாம் வசப்படுத்த முடியாது. சித்தத்தை வசப்படுத்துமுன் சித்தத்தை அறிய வேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு வந்தால் அதன் தன்மை முழுவதையும் அறிய ஹேதுவுண்டாகுமென்பது என்னுடைய தீர்மானம்.
பாரதியினுடைய மனநடைகளை எழுதப்போகிறேன். நான் வேறு, அவன் வேறு. நான் தூய அறிவு. அவன் ஆணவத்தில் கட்டுண்ட சிறு ஜந்து. அவனை எனக்கு வசப்படுத்தி நேராக்கப் போகிறேன். அவனுடைய குறைகளை எழுத அவன் லஜ்ஜைப்படுகிறான். அந்த லஜ்ஜையை நான் பொருட்டாகாதபடி அருள் செய்ய வேண்டும்.
1909ம் ஆண்டு செப்டம்பர் 18ம்
தேதி இந்தியா இதழில் அரவிந்தரின் பேட்டி ஒன்று வெளியாகிறது. ஆனால், யார் பேட்டி கண்டார்கள்
என்று சொல்லப்படவில்லை. அப்போது அரவிந்தர் கல்கத்தாவில் இருந்தார். பேட்டி கண்டது,
துணையாசிரியராய் இருந்த ஹரிஹர சர்மாவாக இருக்கலாம் என்று இப்புத்தகத்தின் ஆசிரியர்
ஊகிக்கிறார். அரவிந்தர், ஏப்ரல் 4ம் தேதி 1910ம் ஆண்டு ரகசியமாக புதுவையை வந்தடைகிறார்.
பாரதி, மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாருடன் துறைமுகம் சென்று அரவிந்தரை வரவேற்றாராம்.
அதே காலகட்டத்தில் வ.வே.சு ஐயரும்
புதுவைக்கு வருகிறார். வாஞ்சிநாதன் புதுவைக்கு வந்து போனதாகவும், வ.வே.சு ஐயர் மூலம்
ஆயுதங்கள் தென்னிந்தியப் புரட்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆசிரியர் தெரிவிக்கிறார்.
வ.வே.சு ஐயர் புதுவைக்கு வந்து எட்டு மாதங்களுக்குள், வாஞ்சி நாதன் ஆஷ் துரையைச் சுட்டுக்
கொல்கிறார்.
கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார்,
தன்னுடைய குருவான ஜபதாவின் மறைவுக்குப் பின், அடுத்த குருவைத் தேடுகிறார். பாரதியாரின்
இந்தியா பத்திரிக்கையின் மூலம் அரவிந்தரைப் பற்றி அறிந்து கொண்டு, அவர் தான் தன்னுடைய
அடுத்த குருவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வ.ரா-வைத் தூதுவராக அனுப்புகிறார்.
இப்படித்தான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் எழுதுகிறார். ஆனால், வ.ரா தன்னுடைய புத்தகத்தில்
தான் புதுவைக்குப் பாரதியைக் காணத்தான் சென்றதாகத் தெரிவிக்கிறார். பாரதியோடு சென்று
அரவிந்தரைச் சந்தித்ததையும் சொல்கிறார்.
பாரதிக்கும் அரவிந்தருக்கும் உள்ள
உறவை விவரிக்கும் ஆசிரியர், பாரதி அரவிந்தரிடமிருந்து ரிக்வேதத்திலுள்ள 200 ரிக்குகளையும்
முறையாகப் பயின்றார் என்கிறார். இதைக் கபாலி சாஸ்திரியார் மற்றும் பிரேமா நந்தகுமார்
எழுதிய நூல்கள் மூலம் நிறுவ முயல்கிறார். மேலும் பாரதியாரின் வேத ரிஷிகளின் கவிதை
1914 முதல் 1916 வரை ஆரியா பத்திரிகையில் அரவிந்தர் எழுதிவந்த ‘வேத ரகசியம்’ என்ற கட்டுரைத்
தொகுதியில் உள்ள கருத்துக்களை ஒட்டி எழுதப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
அடுத்தது அதே ஆரியா சஞ்சிகையில்
1915-1916 வெளியான பாசுரங்களின் மொழிபெயர்ப்பு. இதை யார் செய்தார்கள் என்று அந்தப்
பத்திரிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதியார் பெரிதும்
உதவினார் என்கிறார். மொழிபெயர்ப்பையும் புத்தகத்தில் தந்திருக்கிறார்கள். ஆனால், பாரதி
பரசுராலயத்தார் இம்மொழிபெயர்ப்புகளை பாரதியாரின் ஆங்கில நூலோடு சேர்த்து வெளியிட்டுவிட்டார்களாம்.
இதைப் பற்றிய விஷயங்கள் வேறு புத்தகங்களில் இருக்கின்றவா என்று தெரியவில்லை.
அடுத்தது குள்ளச்சாமி. குள்ளச்சாமியார்
தனக்கு ஞானம் அளித்ததாக, தன்னுடைய எழுத்துக்களில் பல இடங்களில் பாரதி தெரிவிக்கிறார்.
ஆனால், குள்ளச்சாமியைப் பற்றிய தகவல்கள் மற்ற புத்தகங்களில் இல்லை. பாரதியார் புதுவையை
விட்டுச் சென்னை வந்த பின், குள்ளச்சாமியை சென்னை அழைத்துவர ஏற்பாடு செய்தாராம்.
குள்ளச்சாமியார் எப்போதும் குழந்தையைப் போல விறுவிறுப்பாக இருப்பார். வீட்டில் சாதாரணமாக முழங்காலுக்கு மேலே ஒரு துண்டு உடுத்தியிருப்பார். கோகலே மண்டபத்தில் தலைமை வகித்தபோது மட்டும் ஒரு வெளுப்பான வேட்டியும் சொக்காயும், தலையில் காவியேறின ஒரு முண்டாசும் கட்டியிருந்தார். அவரைக் கண்டோர் அவரைப் பரமசாது என்றே கூறினர். அப்போது சிந்தாதரிப்பேட்டையில் நாட்டு வைத்தியராக விளங்கிவந்த கண்ணப்ப முதலியார் குள்ளச்சாமியைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசாரஞ் செய்து வந்தார்.
துரைசாமி அய்யர் வீட்டில் சில நாள்கள் பாரதியிடன் தங்கியிருந்த போது, காகிதத்துண்டு, குப்பை, வாழைப்பழத்தோல் முதலியன அங்குமிங்குமாக இறைந்திருக்கக் கண்டால், வீடெங்கும் சுற்றி அவைகளைப் பொறுக்கி அப்புறப்படுத்துவார்; இரவு முழுதும் உறங்காமல் படுக்கையில் உட்கார்ந்த வண்ணமாக இருப்பார்; யாருடனும் சகஜமாகப் பேசமாட்டார்; பேச்சுக் கொடுத்தாலோ, ஒரு சொல்லுக்கும் மற்றொரு சொல்லுக்கும் யாதொரு தொடர்பும் இன்றிப் பேசுவார். கோகலே மண்டபத்தில் தலைமை வகித்த போது பாரதியார் கூட்டத்தினருக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கையில் மகாஞானாசிரியன் என்றெல்லாம் புகழ்ந்து பேசினார். ஆனால், குள்ளச்சாமி தொடக்கத்திலேனும் இறுதியிலேனும் தம் வாயைத் திறந்து யாதொன்றும் பேசவில்லை.
இச்சிறு ஆராய்ச்சி நூலை வெளியிடும்
போது இதன் ஆசிரியருடைய வயது 82. அவர் சொல்வதிலிருந்து அவருக்கு பாரதியாரிடம் நெருங்கிய பழக்கம் இல்லை. அவருடன் பேசியிருக்கிறார். ஆனால், இவருக்கு அரவிந்தரிடம் மிகுந்த பக்தி
இருந்திருக்க வேண்டும் என்று பொருள்கொள்ள முடிகிறது. இந்தப் புத்தகத்தின் தலைப்பு அது பாரதியைப் பற்றியது என்று
உணர்த்தினாலும், உட்கருத்துக்கள் அப்படியில்லை. முடிவுரையில் ஒரு வரி எழுதுகிறார் ஆசிரியர்,
“புதுவையில் வாழ்ந்த போது அவர் [பாரதி] மகாமேதையான ஸ்ரீ அரவிந்தரின் செல்வாக்குக்கு
உட்பட்டுப் பலன் அடைந்தார்”.
புதுவையில் பாரதி | ப.கோதண்டராமன் | பழனியப்பார் பிரதர்ஸ் | 180 பக்கங்கள் | விலை ரூ.21 | உடுமலையில் வாங்க
No comments:
Post a Comment