இன்று (10-10-2012) எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் (ராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் நாராயணசுவாமி) பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட விமர்சனம் என்றாலும் அவரது படைப்புகளைப் பற்றி விரிவாகப் பேசவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதும் இதை எழுதக் காரணம்.
*
சிறுவயதில் தூர்தர்ஷனில் பார்த்த ’சுவாமியும் நண்பர்களும்’ நாடகத்தை ரெண்டு வருடங்களுக்கு முன் எனது பத்து வயது அக்கா மகனுடன் பார்க்கும்போதும் சுவாரஸ்யமாக இருந்தது பெரிய விஷயமல்ல. இன்றைய கால முப்பரிமாணத் திரைப்படங்கள், வீடியோ கேம்களுக்கு மத்தியில் மால்குடி கிராமத்து சுவாமிநாதன், ராஜம் நண்பர்கள், அவர்கள் படித்த ஆல்பர்ட் மிஷன் பள்ளிக்கூடம் என சிறு வட்டத்துள் பெரிய உலகத்தை இக்காலச் சிறுவர்களும் ரசிக்கும்படி படைத்ததுதான் முக்கியமான விஷயமாகத் தோன்றியது.
ஆர்.கே.நாராயணுக்குத் தமிழ் சூழலில் இயங்கிய ஆங்கில எழுத்தாளர் என்றளவில் கூடப் பெரிய வரவேற்பு இருந்ததாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் நவீனத் தமிழ் எழுத்தாளர்கள் உருவான 1940களின் காலத்தில் தென்னிந்தியாவில் வாழ்ந்தபடி பல புனைவு நூல்களை எழுதிக்கொண்டிருந்தார்.தொன்னூறுகளின் இறுதிவரைத் தொடர்ந்து அரைநூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வந்துள்ளார். புனைவு மட்டுமல்லாது, அபுனைவு நூல்கள், சுயசரிதம், மகாபாரதம், ராமாயணக் கதைகள் எனப் பலவகைகளை எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளர்கள் இவரைப் பற்றி அவ்வளவாகக் குறிப்பிட்டதில்லை. யாரேனும் எழுதியிருந்தால் ஆம்னிபஸ் வாசகர்கள் பின்னூட்டப் பெட்டியில் தெரிவிக்க வேண்டுகிறேன். குடியரசு இந்தியாவின் சிக்கல்களை தனது புனைவு நூலில் முன்வைக்கவில்லை எனப்பரவலாக இருந்த கருத்து ஒரு காரணமென்றால் படைப்புகளின் எளிமையான மொழி உண்டாக்கிய தோற்றப்பிழை அவரது புறக்கணிப்புக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். பஷீர் படைப்புகளும் சிக்கலில்லாத மொழியில் உலகைக் காட்டுகிறது என்றாலும் ஆர்.கே நாராயணனின் புனைவில் வெளிப்படும் வாழ்க்கைப் பார்வை மற்றும் எளிமையானச் சூத்திரங்களை பாத்திரங்கள் மேல் போட்டுப் பார்த்த புனைவுலகம் மத்தியவர்க்க சிறுநகர் வாழ்க்கைக்குள் அடங்கிவிடுகிறது.
ஆர்.கே.நாராயணின் புனைவுலகத்தை அளப்பதற்கு நமது சராசரி நவீன இலக்கிய யுத்திகளைக் கடைபிடிக்க முடியாது எனத் தோன்றுகிறது. இந்திய மரபு சார்ந்த நம்பிக்கைகளுக்கு உட்பட்டு காலனிய ஆட்சியின் தாக்கம் இல்லாத ஒரு சமூகத்தை அவரது பல புனைவுகள் சித்தரிப்பதாகத் தோன்றுகிறது. சம்பத், சுவாமி, ராஜம், கண்ணி என ஒவ்வொருவரும் ஆங்கிலேய ஆட்சியில் வாழ்பவர்கள் என்றாலும் ஐரோப்பிய சிந்தனைகளும் வாழ்வு முறைகளும் பெரிது ஊடுருவாத அமைப்பில் திளைப்பவர்களாகவே இருக்கின்றனர். ஒரு சராசரி குடியரசு இந்தியனின் கவலைகளை ஆர்.கே.நாராயணனின் பல படைப்புகளுக்குப் போட்டுப் பார்க்கக் கூடாது.
நவீன தமிழ் எழுத்தாளர்களின் அகப்பரப்பை சற்றே கூர்ந்து கவனித்தால் சில பொதுவான விஷயங்கள் தெரியவரும் - சற்றேறக்குறைய அனைவரும் கடவுள் நம்பிக்கையை சந்தேகத்துடனேனும் அணுகுபவர்கள், இந்திய மரபை பெரும் பாரமாக நினைப்பவர்கள் அதிகம், உலகளாவிய சிந்தனைப் போக்குகளையும் எழுத்து முறைகளையும் ஓரளவுக்கேனும் தொடர்பவர்கள். ஆர்.கே.நாராயணின் படைப்புகள் இதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றன. கதை நிகழ்வுகள் இயங்கும் அதே காலகட்டத்தில் அவரது பாத்திரங்களின் உலகம் அமைவதில்லை. இரண்டுக்கும் பெரிய இடைவெளி உள்ளது. மிகப் பழமையான நகரத்தை வேரோடு பிடுங்கி நவீன இந்தியாவில் நட்டது போன்ற பிரமை. இதனால் நவீன இந்திய எழுத்தாளர்களை பாதித்த பல விஷயங்களை ஆர்.கே.நாராயணன் பொருட்படுத்தவில்லை. பல்வேறு சமூக அடுக்குகளும், பல ஜாதிக் குழுவும் இயங்கும் இந்தியாவின் நுண் அடுக்குகளைப் பற்றி அவர் எழுதுவதில்லை. பெரும்பாலான நவீன எழுத்தாளர்கள் மரபைத் தாண்டிச் சென்று வேரற்று புத்துலகில் ஊன்றி நிற்க முற்படும் காலத்தில் அவரது மனம் இந்திய வேரைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறது. கண்டிப்பாக இயல்பிலிருந்து விலகிச் செல்லும் காதைகளும் உண்டென்றாலும் அவை விதிவிலக்கு மட்டுமே. ஆனால் அதே சமயத்தில் இந்திய எழுத்தாளர்கள் இடது கையால் புறக்கணிக்கும் நுணுக்கமானச் சித்திரங்களை ஆர்.கே.நாராயணால் அளிக்க முடிந்திருக்கிறது. எளிமையான மனிதர்கள், மால்குடிக்குள் வாழ்க்கையை கடத்துபவர்கள், மரபான இந்திய நம்பிக்கைகளின் வட்டத்துள் புழங்குபவர்கள், ஒருவிதத்தில் நவீன இந்தியா சந்தித்த உலகளாவியப் பார்வை படாத ஆத்மாக்கள். பாசாங்கற்ற வெளிப்பாட்டு முறையில் தங்கள் வாழ்க்கைக்குள் உலகமே அடங்கிவிடுவதாக நினைக்கும் அப்பாவிகள் நிறைந்த வாழ்க்கையை ஒரு உலகப் பிரக்ஞையற்ற நடிப்பாற்றலின் துணையோடு ஆர்.கே.நாராயணன் சிருஷ்டித்திருக்கிறார். நவீனப் பரப்பைத் தாண்டி சுய அடையாளங்களைத் தேட முற்படும் இக்காலகட்டத்தில், ஆர்.கே.நாராயணனின் படைப்புகளை தமிழில் (முதல்முறை?) மீண்டும் கவனத்தில் கொண்டு வரவேண்டியது அவசியமாகிறது.
படைப்புகளில் விஷேசப் புனைவு யுத்திகளை ஆர்.கே.நாராயண் கையாள்வதில்லை. கதையைச் சொல்வது மட்டுமே தனது வேலை என்பதுபோல மிக எளிமையான மொழியில் கதையைச் சொல்லிச் செல்கிறார். புறச் சித்திரிப்பு மூலம் பெரிய உலகை நம்முன் காட்டிவிடுகிறார். உண்மைக்குப் பல முகங்கள் உண்டு என்பதை நம்ப மறுக்கும் பிடிவாதக்கார எழுத்துக்குச் சொந்தக்காரர். எண்ணிக்கையற்ற படைப்பு வகைகள் உருவாகி அடங்கிய நீண்ட காலகட்டம் முழுவதும் அவரது பாணியில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். நவீன இந்தியாவின் ஆங்கில நாவல் என விமர்சகர்களால் குறிப்பிடப்படும் ‘நள்ளிரவின் குழந்தைகள்’ வெளியான காலகட்டத்திலும் கதை சொல்லியாகத் தனது பாணியை இவர் விடவில்லை. அவரது மொழியில் வெளிப்படும் உணர்வுகள், குறும்புகள், சின்னச் சின்ன அசைவுகள மூலம் காட்டும் நிகழ்வுகள் மிகவும் ரசனையானவை. மேலோட்டமாகப் படிக்காமல் நுணுக்கமாகப் படித்துத் தவறவிடக்கூடாத இடங்கள் பல உள்ளன.
தத்தித் தத்தி நடைபழகும் குழந்தையைப் போல மால்குடிக்கு மெல்ல வந்துசேர்ந்த இந்திய சுதந்தர போராட்டத்தின் ஆரம்பங்களை 1955ல் வெளியான ‘மகாத்மாவுக்கானக் காத்திருத்தல்’ (Waiting for the Mahatma) நாவலில் சித்திரித்துள்ளார். மால்குடியில் மெதுவாகச் செல்லும் காலத்தை போல இந்தியாவில் அந்நிய ஆட்சியை எதிர்க்க வேண்டும் எனும் பிரக்ஞை 1930களில் மெத்தனமாகத் தொடங்குகிறது. பளிச்சென கழுவி விட்டது போல கிடுகிடுவென மகாத்மாவின் வருகைக்காக மால்குடியை கலெக்டர் சுத்தம் செய்கிறார். ஆனால் அவரது வீட்டில் தவறி நுழையும் ஹரிஜனக் குழந்தையைப் பார்த்ததும் காந்தி அவர்களது குடியிருப்புக்குச் சென்றுவிடுகிறார். இப்படி நாவலின் தொடக்கமே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது.
பாட்டியிடம் வளரும் ஸ்ரீராம் வசதியானக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பெற்றோர் இறந்தபின்னர் பாட்டி மட்டுமே சொந்தம். பாட்டியின் விவரணைப்படி அவர்கள் மேல்ஜாதி இந்துவாக இருக்கலாம் என வாசகர் யூகிக்கலாம். படிப்பு முடிந்தாலும் பொறுப்பில்லாமல் மால்குடி ரீகல் தியேட்டரில் தமிழ் படங்கள் பார்த்து பொழுதைக் கழிப்பவன். இருபது வயதான அவனுக்குப் பொறுப்புக்கொடுப்பதற்காக ஒரு வங்கிக் கணக்கைத் திறந்துவைக்கிறாள் பாட்டி. நிஜமாகவே பணம் செலவழிக்கும் உரிமை உள்ளதா எனப்பார்ப்பதற்காகவே பணத்தை கண்டபடி செலவு செய்துப் பார்க்கிறான் ஸ்ரீராம். இங்கு ‘கண்டபடி’ என்பது ஆர்.கே.நாராயணின் உலகில் பொட்டிக்கடையில் திண்பண்டம் வாங்கிச் சாப்பிடுவது, ரீகலில் தமிழ் படங்கள் பார்ப்பது, மிஞ்சி மிஞ்சிப் போனால் அந்தி சாயும்போது மால்குடி டிபன் செண்டரில் போண்டா பஜ்ஜி காபி வாங்கிச் சாப்பிடுவது என்றளவில் மட்டுமே இருக்கும் என்பதை மறக்கக்கூடாது.
‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்துக்காக மால்குடி வரும் காந்தியின் குழுவில் பாரதி எனும் துடிப்பானப் பெண் இருக்கிறாள். போராட்ட நிதிக்காக மால்குடியில் வலம் வரும்போது அவளைப் பார்க்கும் ஸ்ரீராம் காந்தியின் பிரசங்கம் நடக்கும் குழுவில் முதல் வரிசையில் உட்கார்ந்து அவளை கவனிக்கிறான். அவளது பார்வைக்காக ஏங்கியதால் காந்தியின் குழுவினரோடு சேர்ந்துகொள்கிறான். நாவலில் காந்தியின் பாத்திரம் மிக வலுவாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவரைச் சுற்றியே கதை நடப்பதால், காந்தி இல்லாதபோது அவரது தீவிரத் தொண்டரான பாரதியின் மூலம் அவ்ரது இருப்பு நிலைபெறுகிறது.
எடுப்பார்க்கைப்பிள்ளையாக ஸ்ரீராம் நாவல் முழுவதும் பிறர் சொல்வதைக் கேட்டபடி இருக்கிறான். பாரதியின் பெண்மையில் மயங்குவதால் இந்திய சுதந்தரத்தில் ஈடுபடும் நிர்பந்தம் உண்டாகிறது. ஆனாலும் சிறிது நாட்களில் காந்தியின் அருகாமை அவனை மாற்றிவிடுகிறது. ஆத்மசுத்தி, உண்மை, அஹிம்சை எனும் மந்திரங்களுக்கு காந்த சக்தி போல மனம் ஈடுபடத் தொடங்குகிறது. கதராடை உடுத்தவும், ஆங்கிலேயப் பொருட்களை உபயோகப்படுத்தாமல் இருக்கவும் பழகிக்கொள்கிறான். அவனது மாற்றம் பாட்டிக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாகப் பல ஜாதி மக்களை ஒன்றாகப் புழங்க வைத்த ஏமாற்றுக்காரன் எனும் எண்ணம் பாட்டிக்கு உள்ளது. இதனால் வீட்டில் தங்காமல் காந்தியின் குழுவோடு பல ஊர்களுக்கு ஸ்ரீராம் பயணிக்கிறான். மிக வெளிப்படையாக காந்தியின் கொள்கைகளை வெறுப்பவராக பாட்டி இருக்கிறார். காந்தியை நேரில் சந்தித்திருந்தாலோ, அவருடன் சில மணிநேரங்கள் செலவு செய்திருந்தாலோ பாட்டி கட்டாயம் மாறியிருப்பாள் எனத் தோன்றுகிறது. பழமைவாதியாக இருந்தாலும், பாட்டியிடம் வெளிப்பட்ட கனிவு காந்தியின் நேர்மையை ஒளிவு மறைவில்லாமல் சந்தித்திருக்கும். காந்தியின் அருகாமைக்கு அப்படி ஒரு வீரியம் உண்டு. அதுவும் பாட்டி போன்ற அன்பே உருவான சராசரி இந்தியப் பெண்மணிகள் காந்திக்கு முன் பேசமுடியாமல் கண்ணீர் உகப்பதை நாம் பல குறிப்புகளில் படித்திருக்கிறோம். ஆனால், ஸ்ரீராமின் பாட்டிக்கு அந்த கொடுப்பினை கிடைப்பதில்லை.
தீவிர காந்தி பக்தையான பாரதி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை முன்வைத்து கைதாக முற்படுகிறாள். துணைக்கு ஸ்ரீராமைக் கூப்பிடும்போது அவன் பயந்துபோகிறான். காந்தி மீது நம்பிக்கை இருந்தாலும் பாரதி மேலிருக்கும் காதலை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காதே என அவளை மணப்பதற்கு சம்மதம் கேட்கிறான். காந்தி சம்மதித்தால் திருமணம் செய்துகொள்ள தான் தயாராக இருப்பதாகக் கூறும் பாரதி, இப்போதைக்கு அஹிம்சை வழியில் போராடி ஜெயில் சரணாகதி அடைய வேண்டும் என ஸ்ரீராமை விட்டுச் செல்கிறாள். பாட்டியைப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனும் காரணத்தைச் சொல்லி ஸ்ரீராம் திட்டத்திலிருந்து விலகுகிறான்.
இதற்குப்பிறகு சுபாஷ் சந்திர போஸ் ஐ.என்.ஏ இயக்கத்தின் உறுப்பினரான ஜகதீஷ் ஸ்ரீராமைச் சந்திக்கிறார். அவரது திட்டப்படி ரகசிய உளவாளியாக போஸுக்கு உழைக்கத் தொட்ங்குகிறான் ஸ்ரீராம். இந்திய சுதந்தரப் போராட்டத்துக்கான தனது அர்ப்பணிப்புக்கு காந்தி கண்டிப்பாகத் துணை போவார் என எண்ணுகிறான். இவனது அப்பாவித்தனத்தை உபயோகித்துக்கொள்ளும் ஜகதீஷ் ஜப்பான், ரங்கூன் போன்ற இடங்களிலிருந்து வரும் செய்திகளை ரேடியோ மூலம் சேகரிக்கும்படி ஸ்ரீராமுக்கு கட்டளையிடுகிறான். சுய சிந்தனையற்ற படித்த அப்பாவியான ஸ்ரீராம் தொடர்ந்து ஜகதீஷுக்கு வேலை செய்வதோடு மட்டுமல்லாது ஜெயிலில் இருக்கும் பாரதியைச் சந்திக்க ஏற்பாடும் செய்கிறான். ஆனால் சட்டப்படி அப்படி சந்திக்க முடியாது என காந்தி கூறியிருப்பதைச் சொல்லி பாரதி விலகிவிடுகிறாள். இதற்கிடையே மனம் வெறுத்துப்போகும் ஸ்ரீராம் பாட்டி இறந்த செய்தி கேட்டு மீண்டும் த்னது வீடிருந்த கபீர் சாலைக்கு வருகிறான்.
அகச்சிக்கல்களால் உந்தப்பட்ட போராட்டவாதியாக (’கல்லுக்குள் ஈரம்’) சித்திரிக்காமல் மிக பலகீனமான உணர்வுகளைக் கொண்டவனாக ஸ்ரீராம் உள்ளான். கதாபாத்திரங்களின் அகச்சிக்கல்களுக்குள் நுழையாத எழுத்தாக இருப்பதால் சில இடங்களில் மிக மேலோட்டமாக அமைந்துள்ளது. பாரதி போன்ற தெளிவானச் சிந்தனையுள்ள பாத்திரங்களை தகுந்த தர்க்க வாதங்கள் மூலம் எதிர்ப்பதாகக் காட்டாததால் நாவலை விரிவாக்கக்கூடிய சாத்தியங்கள் தடைபட்டுப் போயிருக்கிறது. கடைசி வரை காந்தியின் ஆசிர்வாதத்துக்காக காத்திருக்கும் பாரதி ஒரு பக்கம் என்றால் என்றாவது சுய சிந்தனையும், எல்லையற்ற மனோபலமும், சஞ்சலப்படாமல் மனம் சொல்வதை தீவிரமாகக் கவனித்து முடிவெடுக்கும் காந்தியின் பார்வை வருவதற்காகக் காத்திருக்கும் அலைகழிப்பாகவும் நாவல் உள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தால் காந்தியின் வருகைக்காகக் காத்திருத்தல் என்பது இந்திய கிராமங்களில் அன்று இருந்த நிலவரம். தேவதூதன் வருகை போலில்லாது, சுயத்தைத் தேடும் பயணமாக இது ஒவ்வொருவருக்கும் அமையும் என்பதால் காத்திருப்பில் ஒரு விஷேச அர்த்தம் உண்டு. காந்தி தொட்ட நெஞ்சங்கள் அனைத்தும் சுய அடையாளத்தை தங்கள் தேடலின் மூலம் அடைந்தவர்கள். அப்பழுக்கற்ற நேர்மை, கூர்மையான அவதானிப்புகள், ஜோடனையற்ற நிதர்சனப் பார்வை ஒருங்கே அமையும் என நம்பிக்கையோடு காந்தியின் வருகைக்காக ஒரு கட்டத்தில் நாம் எல்லாரும் காத்திருப்போம். நமது சுயத்தைக் கண்டடையும் போராட்டத்தில் நிச்சயம் ஒரு காந்தி குறுக்கிடுவார். 1955ல் மட்டுமல்ல 2012லும் 3012லும் கூட இந்த காத்திருப்புத் தொடரும் என நினைக்கிறேன். ஏனென்றால் காந்தியின் காட்டியது ஒரு முடிவு அல்ல அது ஒரு பாதை. அதன் வழித்தடங்கள் கூழாங்கற்களால் நிரப்பப்பட்டவை அல்ல; பறக்கப் பறக்க வானத்தை அளக்க முயலும் பறவையின் த்டம் போன்று ஒவ்வொரு நிமிடமும் சத்தியத்திற்கு அருகே செல்லும் முயற்சி.
ஆர்.கே.நாராயணின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதிய விமர்சனம் என்பதைத் தாண்டி அவரது படைப்புகளைப் பற்றி மிக விரிவாகப் பேச வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதும் இதை எழுதக் காரணம். ஏனென்றால், தமிழில் எழுதாவிட்டாலும் அவர் காட்டிய உலகம் நம்மோடு நெருக்கமானது. அதன் நம்பிக்கைகளும், மரபான வேர்களும் நமது தேடலுக்காகக் காத்திருக்கின்றன. இன்றும் நம்மை வழிநடத்தும் நம்பிக்கைகளை ஊன்றுகோலாகக் கொண்டு ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றிய கதை. தெருவோரக் கடை வியாபாரிகளும், ஏதோ ஒரு திண்ணையில் தொழில் செய்யும் முடிதிருத்துனர்களும், தெருவில் கூவிக் கூவி காய்கறி விற்பவர்களும், கோவில் அர்ச்சகர்களும், வாழ்க்கைச்சுமை அறியாத இளைஞனும், திடமான உறுதியோடு கூடிய அழகே உருவான பெண்களும், இனிமையான விடியல்களும், ரசமானக் காதல்களும் அன்றிருந்தது போல இன்றும் பசுமையாக வாழ்கிறது ஆர்.கே.நாராயணின் உலகில்.
தலைப்பு - Waiting for the Mahatma
ஆசிரியர் - R.K.Narayan
உள்ளடக்கம் - நாவல்
இணையத்தில் வாங்க: Waiting for the Mahatma
No comments:
Post a Comment