இது விஜயதசமிக்கு அடுத்த நாள் இடப்படும் பதிவு என்பதால் பிள்ளையார் - "பெரிய கடவுள் - அரிய தகவல்கள்" என்ற புத்தக அறிமுகம். சந்திரசேகர சர்மா எழுதியது. இதுபோன்ற அபுனைவுகளைக் குறித்து புத்தகச் சுருக்கத்துக்கு அப்பால் பெரிய அளவில் எதுவும் எழுத முடியாது. "நான் எதையும் எழுத ஆரம்பிக்கும்போதும் பிள்ளையார் சுழிதான் முதலில் எழுதுவது வழக்கம்," என்பது போன்ற அனுபவ பகிர்வுகளுக்கு இங்கு இடமில்லை என்று நினைக்கிறேன்.
தமிழகத்தைப் பொருத்தவரை பிள்ளையார் இல்லாத தெருவே இல்லை. ஒவ்வொரு முட்டுச் சந்திலும் அவர் அருள் பாலிக்கிறார், அது தவிர கோயில்கள். கோயில்களில் அவருக்கென்று தனி சன்னதி. அநேகமாக இங்கு அதிகம் வழிபடப்படும் தெய்வம் பிள்ளையாராகதான் இருக்கும். பிள்ளையார் வழிபாடு இந்தியாவுக்கு வெளியே ஜாவா, பாலி, சுமத்திரா, போர்னியோ, பிலிப்பைன்ஸ், கம்போடியா, சம்டா, அன்னாம், சயாம், மலேசியா, பர்மா, சிலோன் போன்ற நாடுகளிலும் பரவியிருக்கிறது என்று குறிப்பிடுகிறார் சந்திரசேகர சர்மா. இதில் சம்டா, அன்னாம் ஆகிய இரு நாடுகளும் எங்கே இருக்கின்றன என்று தெரியவில்லை :)
பர்மாவில் மஹாபீனி என்றும் மங்கோலியாவில் தோத்கார்-அவுன்கான் என்றும் திபேத்தில் ட்ஸோத்-ப்டாக் என்றும் கம்போடியாவில் பிராஹ்கேனேஸ் என்றும் ஜப்பானிலே குவான்-ஷீ-தியே என்றும் பிள்ளையார் வழிபாடு நடைபெறுவதாகவும் சர்மா எழுதுகிறார். இதுவும் சம்டா, அன்னாம் மாதிரியான சமாசாரமா என்பதையும் தாண்டி இவர்கள் எல்லாம் பிள்ளையார் போல இருந்தாலும் இவர்கள் நம் பிள்ளையார்தானா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஆனைமுகர்கள் எல்லாரும் ஆனைமுகன் ஆகிவிடுவர்களா என்ன? ஆனைமுகன் யார், எப்படிப்பட்டவன் என்பதையும் பார்க்க வேண்டுமல்லவா?
நம் ஆனைமுகனுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது - பிள்ளையார் பிரணவ வடிவம் என்பதையும் அவர் பிறந்த கதையையும் "ஏன் பிறந்தார்?" என்ற அத்தியாயத்தில் சொல்கிறார் சர்மா. அடுத்து வரும் "உள்ளம் கவர்ந்த உருவம்" அத்தியாயத்தில் பிள்ளையாரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களின் சிறு குறிப்பு - உதாரணத்துக்கு ஒன்று, "ஹரித்ரா கணபதி - மஞ்சள் நிறத்தவர். நான்கு கரங்களிலும் முறையே பாசம், அங்குசம், தந்தம் மற்றும் மோதகத்தைத் தரித்திருப்பவர். பக்தர்களுக்கு அபயம் அளிப்பவர்". இந்த முப்பத்து இரண்டையும் தாண்டி வெற்றிலை பிள்ளையார், பிரணவ பிள்ளையார், கிரிக்கெட் பிள்ளையார், குழந்தை பிள்ளையார், கம்ப்யூட்டர் பிள்ளையார் என்று கணக்கில்லாத திருவுருவங்களில் பிள்ளையார் அவதரித்துக்கொண்டே இருக்கிறார். இந்த கணினி யுகத்துக்குத் தகுந்த சாமி என்றால் அது பிள்ளையார்தான்- அந்தந்த நாளின் தேவைக்குத் தகுந்த மாதிரி தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார். ஒரு காலத்தில் செருப்பு மாலை தாங்கியவராகவும் தமிழக தெருக்களை வலம் வந்தார் என்றால் பிள்ளையாரின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது? - நல்லதுக்கும் கெட்டதுக்கும் சாமி என்றாலே பிள்ளையார்தான்!
அதற்கடுத்த, "கதாநாயகன்" என்ற அத்தியாயத்தில் பிள்ளையாரின் திருவிளையாடல்கள். சிவபுராணம், வராக புராணம், ஸ்கந்த புராணம், பிரும்மாண்ட புராணம், சிவமகா புராணம் என்று இந்த ஐந்து புராணங்களும் ஐந்தே பக்கங்களில் கவர் செய்யப்பட்டிருக்கின்றன. மாம்பழ ரேஸ் சிவமகா புராணத்தில்தான் வருகிறது #தகவலுக்காக.
அதற்கடுத்தபடி, "இவர் ஜாதகம் நம்ம கையில்" என்ற அட்டகாசமான தலைப்பில் பிள்ளையாரின் ஜாதகத்துடன் ஒரு அபூர்வ அத்தியாயம். இங்கு பிள்ளையார் நவகிரகங்களையும் தன் உடலில் தரித்திருக்கிறார் என்ற தகவல் - "சூரியனை நெற்றியிலும் சந்திரனை நாபிக் கமலத்திலும்...". இதுதவிர, அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று செய்ய வேண்டிய அலங்கார விவரங்கள் -ஆயில்யத்துக்கு அருகம்புல் மாலை போதும், அதே உத்திரட்டாதியானால் ரோஜா மாலை, பரணியானால் சந்தன அலங்காரம் செய்வித்து தங்க கிரீடம் சாரத்த வேண்டும். திதிகளில் வணங்க வேண்டிய கணபதி, விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவதற்காக வணங்க வேண்டிய கணபதி என்று தினசரிகளில் ஜோதிடக் குறிப்புகளைத் தேடித் தேடி வாசிக்கும் பக்தர்களுக்கான அரிய தகவல்களும் இந்த அத்தியாயத்தில் உண்டு.
அருகம்புல் மகிமை, பிள்ளையார் விரதங்கள், சிதறுதேங்காய் மகிமை -"துன்பங்கள் டமால்!" - அரசமரமும் அடிவயிறும், பிள்ளையாரின் அறுபடை வீடுகள் என்றெல்லாம் விசேஷமான தகவல்கள், நெத்தியடி தலைப்புகளில். அச்சிறுபாக்கம், பிள்ளையார்பட்டி, ஈச்சனாரி என்று தல விநாயகர்களைப் பற்றிய அத்தியாயத்தின் தலைப்பு - "தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்!". திருப்புவனத்தில் உள்ள பியூட்டி பார்லர் பிள்ளையாருக்கு, "இது ரீல் அல்ல, ரியல் மேட்டர்" என்ற அறிமுகம். பிள்ளையாரைத் தவிர வேறு எந்த தெய்வமும் உருவத்திலும் மொழியிலும் இந்த மாதிரியான மாற்றங்களைத் தாங்கிக் கொள்ள முடியாது - பியூட்டி பார்லர் பெருமாள் தமாஷாக இல்லை? இந்த அத்தியாயம் 24 பக்கங்கள், பக்தர்களுக்கு மிக முக்கியமான பகுதி. பவானியில் உள்ள வீணை ஏந்தும் பிள்ளையார், திருவையாற்றில் ஓலமிட்ட பிள்ளையார் என்று வரைபடத்தில் குறித்து வைத்துக் கொண்டு சுழிக்க வசதியான தகவல்கள்.
மெட்ராஸ் மகாராஜா என்று ஒரு அத்தியாயம். சைதாப்பேட்டை கூத்தாடும் பிள்ளையார், தி நகர் பத்து தலை விநாயகர் (ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் இருக்கிறாராம்!), கே கே நகர் மல்டி விநாயகர், வடபழனி ஸ்டூடியோ விநாயகர், பெசன்ட் நகர் ந்யூ யார்க் கணபதி என்று பல அபூர்வமான ஹைப்ரிட் கணபதிகளின் அறிமுகம். இதையெல்லாம் பார்க்கும்போது ஜீன்ஸ் டி ஷர்ட் போட்டுக் கொண்டு அதனால் தன் கௌரவத்துக்கு எந்த சேதாரமும் இல்லாமல் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுக்குள் நுழைந்துவிட்ட ஒரே சாமி பிள்ளையார்தான் என்று தோன்றுகிறது. மற்ற தெய்வங்கள் நாளுக்கு நாள் தொன்மங்களின் குறியீடுகளாக உறைந்து கொண்டே போகிறார்கள். இது நல்லதா கெட்டதா என்பதற்கும் மேலாக, பிள்ளையாரைக் கொண்டு இந்து சமயம் சமகால தேவைகளுக்கும் மொழிக்கும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பதுதான் பெரிய விஷயம்.
"பெரிய கடவுள் : அரிய தகவல்கள்"
சந்திரசேகர சர்மா,
ஆன்மிகம், தமிழ்,
ஜூன் 2006 பதிப்பு,
வரம், கிழக்கு பதிப்பகம்
ரூ. 50
இணையத்தில் வாங்க : கிழக்கு
விளக்கங்கள் அருமை... மறுக்க முடியாத பல உண்மை வரிகள்...
ReplyDeleteமிக்க நன்றி...
தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றிங்க...
Delete