சிறப்பு பதிவர் : மாதவ சோமன்.
தி.ஜா. வாரத்தில் நேற்று பைராகி கோயமுத்தூர் பவபூதி பற்றி எழுதியதில் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார்:
"ஒரு படைப்பைப் பற்றி எழுதி என்னவாகப்போகிறது? ஏனோ வேஷம் கட்டின நடிகர்களாட்டம் சில மனிதர்கள் வருவதும் பேசுவதும், மூக்கைச் சிந்துவதும், கோவப்பட்டு கத்துவதும் - ஏதோ சினிமா போல நடிப்புதானே? நமக்கும் பொழுது போக ஐந்தாறு பக்கங்களில் அவர்களை எல்லாம் உலவவிட்டு கதைபண்ணிவிட்டுப் செல்பவர்தானே எழுத்தாளர்?"
ஆனால் பார்த்தீர்களேயானால், சில கதைகளை வாசிக்கையில் அதில் உலா வரும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் நாம் நேரில் சந்திக்கும் சிலரின் குணாதிசயங்களை ஒத்தே இருக்கின்றது என்பது தெரியும். பெரும்பாலான நேரங்களில் அந்தக் கதைகள் நம் மனதோடு ஒட்டிவிட அதுவே காரணமாகவும் அமைந்து விடுகிறது. தி.ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி'யின் நாயகரான கோவிந்த சாஸ்திரி அப்படிப்பட்டவர் எனக்கு.
அக்பர் சாஸ்திரி பற்றி நான் ஒரேயொரு பத்திதான் பேசப் போகிறேன். மிச்சமெல்லாம் என் அனுபவப் பகிர்வே. தி.ஜா.வைப் புதிதாய்ச் சிலாகிக்க என்ன இருக்கிறது சொல்லுங்கள்?
குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் போய்க்கொண்டிருந்தோம்.
பல்லவனில் சேர் காரில்தான் புக் செய்திருந்தது. தாம்பரத்தில் கம்பார்ட்மென்ட் ஏறின பின்தான் தெரிந்தது அது த்ரீ டயர் ஏசி பெட்டி என்று. பகல்நேரத்தில் படுக்கை வசதியோடு பிரயாணம்; உட்காரும் வசதிக்கான செலவில். கசக்கவா போகிறது? புக்கிங்கின்போது ஜன்னலோர சீட் ஒன்றும் மாட்டவில்லை என்று நொந்த மனதிற்கு, தர்ட்ஏசி'யாக மாறிய பெட்டியில் சைட்லோயர் பர்த்துகள் கிடைத்த அதிஷ்டம் வேறு.
நானும் மனையாளும் பக்கவாட்டு இருக்கைகளில் அமர்ந்து கொள்ள, அம்மா அமர்வதற்கான லோயர் பரத்தில் ஒரு அம்மணி நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தார். எதிரில் இருந்த லோயர் பர்த்தின் மத்தியில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று யூகிக்க முடியாதபடி ஒரு கதர் வேட்டி கதர்சட்டை தனக்கு வலப்புறம் ஆமாஞ்சாமி போட ஒருத்தரோடு கூட்டணி பயணம். அந்த வரிசையில் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தவர்தான் நம்ம ஹீரோ.
கைக்கு ஒரு செல்போன் வைத்திருந்தார். அதில் மணிக்கு பதினெட்டு முறை உள்வரும் அழைப்பிலோ வெளிச்செல்லும் அழைப்பிலோ பேசிக் கொண்டிருந்தார், சத்தமாக. அவரது மடியில் இருந்த "இந்தியா ஆப்டர் காந்தி" புத்தகத்தை ரயில் தாலாட்டிக் கொண்டிருந்தது. இதுகூடவே உடன் பிரயாணிப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனையும் தீவிரமாக அவதானித்துக் கொண்டிருந்தார்.
அம்மா அமர இடம் வேண்டி, படுத்திருந்த அம்மணியைக் கொஞ்சம் ஜன்னல் பக்கமாக நகர்ந்து படுத்துக் கொள்ளச் சொன்னேன். அந்த அம்மணி எழத் தீர்மானித்தார்.
"இல்லையில்லை. எந்திரிக்க வேணாம். கொஞ்சம் உக்கார இடம் தந்தாப் போறும்"
"பரவால்லே, உக்கார்றேன்", எழுந்தே விட்டார். உட்கார நன்றாக இடம் தந்தாற் போலும் ஆச்சு. வந்த புதியவர்களை வம்பு நோட்டம் விட்டாற்போலும் ஆச்சு என்பது போல் இருந்தது அந்தப் பெண்மணி எங்களை ஊடுருவிப் பார்த்த பார்வை.
"தெலுங்காவா?", மனைவியாரின் கழுத்துக் கருகமணியைப் பார்த்துக் கேட்டார் போல. இதழ் விரித்து வாய்திறவாத புன்னகையில் பதில் தந்தேன்.
நம்ம ஹீரோ மெதுவாகத் தொடங்கினார். "இந்தச் சின்ன வயசுல இத்தனை தன்மையா (!!!) நடந்துக்கறீங்களே! எந்தூரு தம்பி உங்களுக்கு?"
மையமாய்ச் சிரித்தேன்.
"சொல்லுங்க தம்பி. எந்தூரு?"
"இருவது வருஷமா சென்னை. அப்பா பொறந்து வளந்தது எல்லாம் ஈரோடு. அதனால சொந்த ஊருன்னா ஈரோடுன்னு வெச்சிக்கங்களேன்"
"அவர் எங்க தம்பி ஈரோடை வெச்சிப்பாரு", சொல்லிவிட்டு வெடித்துச் சிரித்தது கதர் வேட்டி. வேறு வழியில்லாமல் சிரித்துத் தொலைத்தேன்.
உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாசம் செய்துகொண்ட ஐந்து நிமிடத்திலேயே நம்ம ஹீரோ அந்தப் பகுதியைத் தன் கண்ட்ரோலில் வைத்திருந்தது புரிந்தது.
இன்னொரு மத்திய வயதுத் தம்பதியினரும் எங்கிருந்தோ அங்கே வந்து அமர்ந்து அந்த ஜமாவில் குதித்தனர். அவர்களுக்குக் கைரேகை பார்த்தார் நம்ம ஹீரோ. சம்பாஷனைகளிடையே அவ்வப்போது, "நீயெல்லாம் இந்தக் காலத்துப் பயலப்பா, உனக்கு இதெல்லாம் புரியாது" என்றார், என்னிடம். எமர்ஜென்சி பீரியடில் பக்கத்திலிருந்த கதர்வேட்டி ஜெயில் போன கதையை நீட்டி முழக்கி இவரே நேரில் பார்த்ததாய்ச் சொன்னார். இன்டர்னல் எமர்ஜென்சிக்கும், எக்ஸ்டெர்னல் எமர்ஜென்சிக்கும் வித்தியாசம் சொன்னார். காந்தீய சிந்தனையின் அவசியத்தைப் பேசினார், காங்கிரஸ்காரர்கள் எப்படியெல்லாம் மாறிவிட்டிருக்கிறார்கள் என்று பிரசங்கம் செய்தார், அண்ணாவை வாழ்த்தினார், பெரியாரைத் திட்டினார், இன்றைய அரசியல்வாதிகளைப் பற்றிய பேச்சுகளை நாசூக்காய்த் தவிர்த்தார்,
கோவிந்த சாஸ்திரியும் இப்படித்தான் இருக்கிறார், சகலகலா வல்லவராக. வயசான பெருமை கொண்டு இருக்கிறார், அந்தக் காலத்திலேயே தன் குடும்பத்தில் தான் கொண்டு வந்து நிறுவிய முற்போக்குவாத விஷயங்களைப் பெருமையடித்துக் கொள்கிறார், மருத்துவம் பேசுகிறார், உடன் பயணிக்கும் எக்சைஸ் இலாக்கா சூப்ரிண்டு குடும்பத்துக்கே மருத்துவம் சொல்கிறார், இன்னும் இன்னும் நிறைய நிறைய சம்பாஷிக்கிறார். கடைசியில்............... அதை நீங்கள் கதையிலேயே படித்துக் கொள்ளுங்களேன்.
சொல்ல மறந்துவிட்டேனே, எங்களுடன் பயணப்பட்ட அந்த ஹீரோ கடைசிவரை ஏனோ அவர் மடியில் சுமந்து கொண்டிருந்த "இந்தியா ஆப்டர் காந்தி" புத்தகத்தை மறந்தும் பிரித்துவிடவில்லை.
அக்பர் சாஸ்திரி
தி. ஜானகிராமன்
சிறுகதை தொகுப்பு
ஐந்திணை பதிப்பகம்
விலை ரூ.70
பதிவிட்ட பத்து நிமிடங்களிலேயே நண்பர் ஸ்ரீதர் நாராயணன் இந்தியா ஆப்டர் காந்தி என்பது ஓரிடத்தில் சுதந்திரத்திற்குப் பிறகான காந்தி என்று பிழையாகத் தட்டச்சு செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். அதையொட்டி அவருக்கு நன்றிகளுடன் பதிவு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteஸ்ரீதர் நாராயணன் முதலான நண்பர்கள் ஆம்னிபஸ் தளத்தை கவனமாக வாசித்து பிழைகளைச் சுட்டிக்காட்டி வழிநடத்துவது எங்களை ஊக்குவிப்பதாக இருக்கிறது.
நண்பருக்கு நன்றிகள்.